search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிகே சிவக்குமார்
    X
    டிகே சிவக்குமார்

    பாஜகவினர் அதிகார பசியுடன் இருக்கிறாார்கள்: டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு

    அரசியலில் தவறு செய்பவர்கள் அதற்கான பின்விளைவுகளையும் அனுபவிக்க வேண்டும். நாங்கள் ஏழைகளின் குரலாக இருந்து அவர்களின் பிரச்சினைகளை தீர்க்க பாடுபடுகிறோம் என்று டி.கே.சிவக்குமார் கூறினார்.
    பெங்களூரு :

    கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    2, 3 கட்சிகளுக்கு தாவிய மந்திரி சி.பி.யோகேஷ்வரை தனது கட்சிக்கு முதல்-மந்திரி எடியூரப்பா அழைத்து சென்றார். இப்போது அவர் எடியூரப்பாவுக்கு எதிராகவே செயல்படுகிறார். எடியூரப்பா அனுபவிக்கட்டும். அவர் (சி.பி.யோகேஷ்வர்) ஒரு அதிகார பசியுடன் இருக்கும் நபர். முன்பு எடியூரப்பா புதிய கட்சியை தொடங்கி என்ன செய்தார் என்பது அனைவருக்கும் தெரியும்.

    முன்பு நாங்கள் கூட சி.பி.யோகேஷ்வரை எங்கள் கட்சியில் சேர்த்து அதே தவறை செய்தோம். அதற்கான பாதிப்புகளை நாங்கள் அனுபவித்தோம். இப்போது எடியூரப்பா அத்தகைய பாதிப்புகளை அனுபவிக்கிறார். கொரோனா நெருக்கடி நேரத்தில் மக்களின் உயிர்களை காக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். பா.ஜனதாவினர் அதிகார பசியுடன் இருக்கிறாார்கள். அவர்களை பற்றி பேசி நான் நேரத்தை விரயமாக்க விரும்பவில்லை.

    அரசியலில் தவறு செய்பவர்கள் அதற்கான பின்விளைவுகளையும் அனுபவிக்க வேண்டும். நாங்கள் ஏழைகளின் குரலாக இருந்து அவர்களின் பிரச்சினைகளை தீர்க்க பாடுபடுகிறோம். வட கர்நாடகத்தில் பூக்கள், பழங்கள், காய்கறிகளை சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் நிலை பரிதாபமாக உள்ளது. அவற்றை விற்க முடியாமல் நிலங்களிலேயே விட்டுவிட்டனர். காய்கறி சந்தைகளை விற்பனை செய்ய 2 மணி நேரம் மட்டுமே அனுமதி அளிக்கிறார்கள்.

    பச்சை மிளகாய்களை அறுவடை செய்யாமல் அப்படியே நிலங்களில் விட்டுள்ளனர். அதனால் இந்த தோட்டக்கலை விளைபொருட்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு வேண்டுமானால் ஒரு மாதத்திற்கு பிறகு பணத்தை கொடுக்கட்டும். தோட்டக்கலை விவசாயிகளுக்கு அரசு அறிவித்துள்ள நிவாரணம் போதாது.

    வியாபாரிகள் கடந்த ஒரு ஆண்டாக சரியாக வணிகம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆனால் உரிய நேரத்தில் வரி செலுத்தும்படி மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. தேவேகவுடா பிரதமராக பணியாற்றி 25 ஆண்டுகள் ஆகிறது. இது கர்நாடகத்திற்கு கிடைத்த பெருமை. அவர் நேர்மையான முறையில் பணியாற்றினார்.

    தென்இந்தியாவை சேர்ந்த ஒருவரை உயர்ந்த பதவிக்கு வட இந்தியாவினர் அவ்வளவு சுலபமாக ஏற்றுக்கொள்வது இல்லை. ஆனால் எல்லா சவால்களையும் சந்தித்து தேவேகவுடா பிரதமர் பதவியை அடைந்தார். கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்து கர்நாடகத்திற்கு கொண்டுவர வேண்டும்.

    இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
    Next Story
    ×