search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    20 நாட்களாக கொரோனா தொற்றுவது குறைகிறது - மத்திய அரசு தகவல்

    நாடு முழுவதும் தினசரி கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டிருக்கும் நிலையில் தினசரி கொரோனா பாதிப்பு விகிதமும் வெகுவாக குறைந்துள்ளது.

    புதுடெல்லி:

    மத்திய சுகாதாரத்துறை அமைச்சக இணைசெயலர் லவ் அகர்வால் அளித்த பேட்டி வருமாறு:-

    கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை கடந்த 20 நாட்களாக குறிப்பிடத்தக்க அளவில் குறைந்து வருகிறது. கடந்த மே 3-ந் தேதி 17.13 சதவீதமாக இருந்த பாதிக்கப்பட்டவர்களின் விகிதம் இப்போது 11.12 சதவீதமாக குறைந்துள்ளது.

    அதுபோல பாதிப்பில் இருந்து மீள்பவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்துள்ளது. கடந்த மே 3-ந் தேதி 81.7 சதவீத மாக இருந்த கொரோனாவில் இருந்து குணமடைபவர்களின் விகிதம் இப்போது 87.76 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    நாடு முழுவதும் தினசரி கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டிருக்கும் நிலையில் தினசரி கொரோனா பாதிப்பு விகிதமும் வெகுவாக குறைந்துள்ளது. கடந்த மே 10-ந் தேதி 24.83 சதவீதமாக இருந்த தினசரி பாதிப்பு விகிதம் சனிக்கிழமை 12.45 சதவீதமாக குறைந்துள்ளது.

    தடுப்பூசி விரயமாவது வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 1-ந் தேதி 8 சதவீதமாக இருந்த கோவிஷீல்டு தடுப்பூசி விரயம் இப்போது ஒரு சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. கோவேக்சின் விரயம் 17 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைந்துள்ளது என்றார் அவர்.

    கோப்புபடம்

    ‘‘உலக சுகாதார அமைப்பு அவசர கால பயன்பாடு பட்டியலில் (இயுஎல்) பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசியை சேர்க்காத நிலையில் அந்தத் தடுப்பூசியை இரண்டு தவணை செலுத்திக் கொண்டவர்கள் சர்வதேச பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த லவ் அகர்வால், ‘‘தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் சர்வதேச பயணத்துக்கு அனுமதிப்பது (தடுப்பூசி பாஸ்போர்ட்) தொடர்பான விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பில் ஒருமித்த கருத்து இன்னும் எட்டப்படவில்லை. ஆனால், இது குறித்த ஆலோசனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவேக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் சர்வதேச பயணத்துக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பது தவறான கருத்து’’ என்றார்.

    பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்ற நீதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) வி.கே.பால் கூறுகையில், ‘‘கருப்பு பூஞ்சை பாதிப்பைப் பொறுத்தவரை, அதற்கான மருந்து இருப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்படும் சர்க்கரை நோய் பாதிப்பு உடையவர்கள், நீண்ட நாட்கள் மருத்துவமனையில் தங்கி இருப்பதாலும், ஸ்டீராய்டு மருந்து அவர்களுக்கு கொடுக்கப்படுவதாலும், அவர்களுடைய நோய் எதிர்ப்புத்திறன் பலவீனம் அடைந்து கருப்பு பூஞ்சை பாதிப்பு அவர்களுக்கு அதிகரிக்கிறது.

    ஸ்டீராய்டு உயிர் காக்கும் மருந்துதான். ஆனால் அதை உரிய காரணமின்றி பயன்படுத்துவதால், கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட வழி வகுத்துவிடுகிறது. எனவே கருப்பு பூஞ்சை பாதிப்பு மேலும் தீவிரம் அடையாமல் உரிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன’’ என்றார்.

    Next Story
    ×