search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மந்திரி பசவராஜ் பொம்மை
    X
    மந்திரி பசவராஜ் பொம்மை

    பெங்களூருவில் ஆக்சிஜன் பஸ் அறிமுகப்படுத்த திட்டம்: மந்திரி பசவராஜ் பொம்மை

    அவசர நேரத்தில் கொரோனா நோயாளிகளின் உயிர்களை காக்க சென்னையை போல் பெங்களூருவில் ஆக்சிஜன் பஸ் அறிமுகப்படுத்தும் திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.
    பெங்களூரு :

    பெங்களூரு கிழக்கு மண்டலத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

    இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    சென்னையில் ஒரு தனியார் நிறுவனம், நடமாடும் முறையில் ஆக்சிஜன் வினியோகம் செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறது. அதாவது பஸ்கள் மூலம் ஆக்சிஜன் வழங்கப்படுகிறது.

    அத்தகைய மாதிரியை பெங்களூருவில் பின்பற்ற திட்டமிட்டுள்ளோம். அதாவது, பெங்களூருவில் நடமாடும் ஆக்சிஜன் சிலிண்டர் வினியோகம் செய்ய முடிவு செய்துள்ளோம். பஸ்கள் மூலம் நோயாளிகள் ஆக்சிஜன் பெற்று தங்களின் உயிரை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பது எங்களின் நோக்கம்.

    அதே போல் ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்கு அவர்களின் வீட்டிற்கே அதை வினியோகம் செய்யும் பணியை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளோம். மருத்துவ படுக்கை முறைகேடு விவகாரத்தை அரசு தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். எந்த தவறும் செய்யாத அப்பாவிகளுக்கு எந்த தொந்தரவும் கொடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளேன்.

    தவறு செய்தவர்களுக்கு மட்டும் தக்க தண்டனை வழங்கப்படும். பணத்திற்காக படுக்கைகளை யார் ஒதுக்கீடு செய்தார்களோ அவர்கள் மீது நிச்சயம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் சமரசத்திற்கு இடமில்லை.

    பெங்களூருவில் 5 ஆயிரம் கொரோனா சிகிச்சை மையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளோம். பெரிய தனியார் மருத்துவமனைகளுக்கு அருகே இத்தகைய மருத்துவ மையங்கள் அமைக்கப்படும்.

    தற்போது 945 கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்க அவற்றுக்கான கட்டிடத்தை அடையாளம் கண்டுள்ளோம். பெரிய அளவிலான தங்கும் விடுதிகள் இவற்றுக்கு பயன்படுத்திக் கொள்ளப்படும்.

    பெங்களூருவில் தனியார் மருத்துவ கல்லூரிகள் அரசுக்கு மொத்தம் 1,035 படுக்கைகளை ஒதுக்க வேண்டும். அதில் இதுவரை 800 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 235 படுக்கைகளும் பெறப்படும்.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
    Next Story
    ×