search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரவிந்த் கெஜ்ரிவால்
    X
    அரவிந்த் கெஜ்ரிவால்

    தடுப்பூசியின் உச்சவரம்பு விலையை மத்திய அரசே நிர்ணயிக்க வேண்டும்- டெல்லி முதல் மந்திரி யோசனை

    கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் 150 ரூபாய்க்கு கொடுக்க வேண்டும் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். லாபம் சம்பாதிக்க உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் உள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியா முழுவதும் மே 1-ம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், மாநில அரசுகள், தனியார் மருத்துவனைகள் கொரோனா தடுப்பூசிகளை மருந்து தயாரிக்கும் தனியார் நிறுவனங்களிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்துகொள்ளவும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

    இந்த அனுமதியை தொடர்ந்து, கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளின் விலையை தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.

    அந்த வகையில், கோவாக்சின் தடுப்பூசி மாநில அரசுக்கு ஒரு டோஸ் 600 ரூபாய்க்கும், தனியார் மருத்துவமனைக்கு 1200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.

    அதேபோல், கோவிஷீல்டு தடுப்பூசி மாநில அரசுக்கு ஒரு டோஸ் 400 ரூபாய்க்கும், தனியார் மருத்துவமனைக்கு 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால், கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் மத்திய அரசுக்கு தொடர்ந்து முந்தைய விலையான 150 ரூபாய்க்கே விற்பனை செய்து வருகிறது.

    கொரோனா தடுப்பூசி


    ஒரே தடுப்பூசி மத்திய அரசு, மாநில அரசு, தனியார் மருத்துவமனைகள் என மூன்று தரப்பிற்கு மூன்று வேவ்வெறு விலைகளில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதற்கு பல்வேறு மாநில அரசுகளும், அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், டெல்லி முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது,

    ஒரு கொரோனா தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் நாங்கள் மாநில அரசுக்கு ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசியை 400 ரூபாய்க்கு வழங்குவோம் என்று கூறுகிறது.

    மற்றொரு கொரோனா தடுப்பூசி நிறுவனம் நாங்கள் மாநில அரசுக்கு ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசியை 600 ரூபாய்க்கு வழங்குவோம் என்று கூறுகிறது.

    ஆனால், அந்த இரண்டு நிறுவனங்களுமே ஒருடோஸ் கொரோனா தடுப்பூசியை மத்திய அரசுக்கு 150 ரூபாய்க்கு வழங்குகின்றன. கொரோனா தடுப்பூசியின் விலை அனைவருக்கும் ஒரேமாதிரியாக இருக்க வேண்டும் என்று நம்புகிறேன்.

    கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் 150 ரூபாய்க்கு கொடுக்க வேண்டும் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். லாபம் சம்பாதிக்க உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் உள்ளது.

    ஆனால், லாபம் சம்பாதிக்க பொங்கி எழும் பெருந்தொற்று காலம் நேரமில்லை. தேவைப்பட்டால் மத்திய அரசே கொரோனா தடுப்பூசியின் உச்சவரம்பு விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.
    Next Story
    ×