search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முழு ஊரடங்கு
    X
    முழு ஊரடங்கு

    இன்று இரவு முதல் 2 நாட்களுக்கு அமலாகிறது கர்நாடகத்தில் முழு ஊரடங்கு

    கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கர்நாடகத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) இரவு முதல் முழு ஊரடங்கு 2 நாட்களுக்கு அமலாகிறது. இதற்கிடையே அத்தியா வசிய சேவைகளை தவிர அனைத்து வணிக நிறுவனங்களையும் போலீசார் திடீரென மூட உத்தரவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

    வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கர்நாடகத்தில் நேற்று முன்தினம் முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி ஊரடங்கை மாநில அரசு அறிவித்தது. இரவு நேர ஊரடங்கு முதலில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் அது இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை என்று மாற்றி அமைத்து அரசு உத்தரவிட்டது.

    மேலும் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பள்ளி-கல்லூரிகள், வணிக வளாகங்கள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி கூடங்கள் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று மதியம் போலீசார் திடீரென பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் அனைத்து வணிக நிறுவனங்களையும் மூடும்படி உத்தரவிட்டனர். கட்டுமான பணிகளுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்யும் கடைகள், பால், இறைச்சி கடைகள், அத்தியாவசிய பொருள் விற்பனை நிலையங்கள், மருந்து கடைகள், மருத்துவ நிலையங்கள், பலசரக்கு கடைகளை தவிர பிற வணிக நிறுவனங்கள் அனைத்தையும் மூடும்படி போலீசார் தெரு, தெருவாக ரோந்து வாகனத்தில் வலம் வந்து அறிவிப்பை வெளியிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    போலீசாரின் நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்த கடைகளின் உரிமையாளர்கள், வேண்டா வெறுப்பாக கடைகளை மூடினர். மைசூரு, கலபுரகி, பெலகாவி உள்பட மாநிலம் முழுவதும் இதே நிலை நீடித்தது. சில பகுதிகளில் போலீசாருடன் கடைகளின் உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அரசு வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளதால் கடைகளை மூட வேண்டும் என்று போலீசார் திட்டவட்டமாக கூறினர்.

    இதற்கிடையே வார இறுதி நாட்கள் முழு ஊரடங்கு இன்று(வெள்ளிக்கிழமை) இரவு 9 மணிக்கு அமலுக்கு வருகிறது. இந்த முழு ஊரடங்கு வருகிற 26-ந் தேதி காலை 6 மணி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கின்போது அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி உண்டு. அரசு-தனியார் போக்குவரத்துக்கு அனுமதி இல்லை. பொதுமக்கள் வெளியில் நடமாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    முழு ஊரடங்கின்போது போலீசார் பெங்களூருவில் ரோந்து வந்து, மக்களின் நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். போலீசார் பெங்களூருவில் முக்கிய சந்திப்புகளில் தற்காலிக குடில்களை அமைத்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    ஊரடங்கின்போது வெளியே வரும் வாகனங்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். அதே நேரத்தில் சில்லரை காய்கறி கடைகள் வழக்கம் போல் இயங்குதில் எந்த தடையும் இல்லை என்று அரசு கூறியுள்ளது.
    Next Story
    ×