search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மந்திரி சுதாகர்
    X
    மந்திரி சுதாகர்

    கர்நாடகத்தில் மீண்டும் ஊரடங்கு அமலா?: மந்திரி சுதாகர் பதில்

    கர்நாடகத்தில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்துவது குறித்த கேள்விக்கு சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பதிலளித்துள்ளார்.
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை தொடங்கும் வாய்ப்பு உள்ளதாகவும், அதனால் இரவுநேர ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்றும் கூறி கர்நாடக அரசுக்கு தொழில்நுட்ப ஆலோசனை குழு பரிந்துரை செய்துள்ளது. இந்த நிலையில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் அத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்திற்கு பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் கொரோனா பரவல் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். இரவுநேர ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து தொழில்நுட்ப ஆலோசனை குழு வழங்கியுள்ள அறிக்கை இன்னும் அரசுக்கு வரவில்லை. அது அதிகாரிகள் மட்டத்தில் இருக்கிறது. அந்த குழு உறுப்பினர்களுடன் நாளை (இன்று) பெங்களூருவில் ஆலோசனை நடத்துகிறேன். இதில் எடுக்கப்படும் முடிவு குறித்து முதல்-மந்திரியுடன் கலந்து ஆலோசித்து இறுதி முடிவு அறிவிக்கப்படும்.

    கர்நாடகத்தில் கொரோனா பரவல் 2-வது அலை தீவிரமாக இருக்கும் என்று நான் கருதவில்லை. இது எனது தனிப்பட்ட கருத்து. ஆயினும் நிபுணர்கள் வழங்கியுள்ள பரிந்துரைகளை ஆழமாக ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு நிரந்தர தீர்வல்ல. சமூக தடுப்பூசி என்று கருதப்படும் முகக்கவசம் அணிவது, சமூக விலகலை பின்பற்றுவது, கைகளை சோப்பு போட்டு கழுவுவது ஆகியவற்றை பொதுமக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும்.

    ஐரோப்பிய நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகும் கொரோனா பரவல் கட்டுக்குள் வரவில்லை. புத்தாண்டு கொண்டாட வேண்டியதின் அவசியம் என்ன இருக்கிறது?. புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிப்பது குறித்து ஆலோசிக்கப்படும். ஆயிரக்கணக்கான மக்களை இழந்துள்ளோம். பொருளாதார நிலை சீர்குலைந்துள்ளது. இந்த வேளையில் கொண்டாட்டம் தேவையா?. சில கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுப்போம்.

    ஆனால் மீண்டும் ஊரடங்கு தேவை இல்லை என்று கருதுகிறேன். ஆனால் நிபுணர்களுடன் ஆலோசித்த பிறகே ஒரு முடிவுக்கு வர முடியும். கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தவுடன், அதை மக்களுக்கு வினியோகிக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகள் நிறைவடைந்துள்ளன. எச்.விஸ்வநாத் எம்.எல்.சி. தனி ஆள் கிடையாது. அவருடன் நாங்கள் 17 பேரும் இருக்கிறோம். நாங்கள் அனைவரும் பா.ஜனதாவினர். ஐகோர்ட்டு தீர்ப்பு இறுதி அல்ல. அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வார்.

    இவ்வாறு சுதாகர் கூறினார்.
    Next Story
    ×