search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
    X
    கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

    விவசாயிகள் போராட்டத்துக்கு கனடா பிரதமர் ஆதரவு: இந்தியா கடும் கண்டனம்

    டெல்லியில் நடந்து வருகிற விவசாயிகள் போராட்டத்துக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆதரவு தெரிவித்துள்ளார். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி :

    மத்தியில் அமைந்துள்ள பா.ஜ.க. கூட்டணி அரசு, புதிதாக 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளது. ஆனால் இவை, குறைந்தபட்ச ஆதரவு முறைக்கு வேட்டு வைத்துவிடும், விவசாயத்தை பெருநிறுவன மயமாக்கி விடும் என கருதி, பஞ்சாப், அரியானா உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் மிக தீவிரமாக எதிர்த்து வருகின்றனர்.

    இந்த வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்பதை முக்கிய கோரிக்கையாக வைத்து வட மாநில விவசாயிகள் தலைநகர் டெல்லியின் எல்லைகளை முற்றுகையிட்டு கடும் குளிருக்கு மத்தியிலும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில், சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக் தேவின் 551-வது பிறந்தநாளையொட்டி, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குருநானக் ஜெயந்திக்கு வாழ்த்துகள் தெரிவித்ததோடு நிறுத்திக்கொள்ளாமல், டெல்லியில் விவசாயிகள் நடத்தி வருகிற போராட்டங்கள் குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவது குறித்து செய்திகள் வெளியாகி வருகின்றன. அங்கு நிலைமை கவலை அளிப்பதாக உள்ளது. நாங்கள் அனைவரும் உங்களின் (விவசாயிகள்) குடும்பங்கள், நண்பர்கள் பற்றி மிகவும் கவலைப்படுகிறோம். உங்களில் பலரது உண்மை நிலை எனக்கு தெரியும்.

    அமைதியாக போராடுகிற விவசாயிகளின் உரிமையை பாதுகாக்க கனடா எப்போதும் துணை நிற்கும் என்பதை நான் உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன். பேச்சுவார்த்தையின் முக்கியத்துவத்தை நாங்கள் நம்புகிறோம். அதனால்தான் எங்கள் கவலைகளை இந்திய அரசுக்கு பல வழிகளில் தெரிவித்திருக்கிறோம். கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக அனைவரும் ஒன்றுபட்டிருக்க வேண்டிய தருணம் இதுவாகும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். பஞ்சாப்பில் இருந்து ஏராளமானோர் கனடாவில் குடியேறியுள்ள நிலையில், இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்தியாவில் விவசாயிகள் நடத்தி வருகிற போராட்டங்கள் தொடர்பாக வெளிநாட்டு தலைவர் ஒருவர் தனது கருத்தை பதிவு செய்து இருப்பது இதுவே முதல் முறை ஆகும்.

    விவசாயிகள் போராட்டத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மூக்கை நுழைத்திருப்பதற்கு இந்தியா கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

    இதுபற்றி மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா நேற்று கருத்து தெரிவிக்கையில், “இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் பற்றிய கனடா தலைவர்களின் தவறான கருத்துகளை நாங்கள் பார்த்தோம். இதுபோன்ற கருத்துகள் தேவை இல்லாதவை. குறிப்பாக, ஒரு ஜனநாயக நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடுவது தேவையற்றது” என கூறினார்.

    கனடா பிரதமர் கருத்துக்கு சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதியும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவில், “ஜஸ்டின் ட்ரூடோ, உங்கள் கவலை நெஞ்சைத்தொட்டது. ஆனால், இந்தியாவின் உள்நாட்டு விவகாரம், மற்றொரு நாட்டின் அரசியலுக்கு தீவனம் ஆகாது. நாங்கள் மற்ற நாடுகள் மீது காட்டுகிற மரியாதையை நீங்கள் மதியுங்கள். மற்ற நாடுகள் கருத்து தெரிவிப்பதற்கு முன்பாக இந்த முட்டுக்கட்டையை பிரதமர் நரேந்திர மோடி தீர்க்க வேண்டும்” என கூறி இருக்கிறார்.

    இதே போன்று கெஜ்ரிவாலின் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் ராகவ் சாதா கருத்து தெரிவிக்கையில், “இந்தியாவின் உள்விவகாரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற நாடுகளின் தலைவர்களின் எந்தவொரு தலையீடும், கருத்துகளும் தேவை இல்லை. இந்தியா தனது சொந்த உள்நாட்டு விவகாரங்களை கையாளும் திறன் படைத்தது. அதே நேரத்தில் இந்த பிரச்சினையை பா.ஜ.க. அரசு உடனே தீர்க்க வேண்டும்” என கூறி உள்ளார்.
    Next Story
    ×