search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி.கே.சிவக்குமார்
    X
    டி.கே.சிவக்குமார்

    சட்டவிரோதமாக சொத்து குவித்த வழக்கு: சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு டி.கே.சிவக்குமார் ஆஜர்

    சட்டவிரோதமாக சொத்து குவித்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு நேற்று டி.கே.சிவக்குமார் ஆஜராகி விளக்கம் அளித்தார். அவரிடம் 40 நிமிடம் விசாரணை நடந்தது.
    பெங்களூரு கர்நாடக காங்கிரஸ் தலைவராக இருந்து வருபவர் டி.கே.சிவக்குமார். சித்தராமையா ஆட்சியில் டி.கே.சிவக்குமார் மந்திரியாக பதவி வகித்த போது கடந்த 2017-ம் ஆண்டு வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக எழுந்த புகாரின்பேரில் ராமநகர், பெங்களூரு, டெல்லியில் உள்ள வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அப்போது டெல்லியில் உள்ள அவரது வீட்டில் இருந்து ரூ.8.50 கோடி சிக்கி இருந்தது. இதுகுறித்து டி.கே.சிவக்குமார் மீது வருமான வரித்துறை வழக்குப்பதிவு செய்தது. இதற்கிடையே சட்டவிரோத பணபரிமாற்றத்திலும் டி.கே.சிவக்குமார் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக அமலாக்கத்துறையிலும் டி.கே.சிவக்குமார் மீது வழக்குப்பதிவானது. இந்த நிலையில் டி.கே.சிவக்குமார் சட்டவிரோதமாக சொத்து சேர்த்தது மற்றும் பணபரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக வருமான வரித்துறை, அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்களுக்கு கிடைத்த தகவலை சி.பி.ஐ.யிடம் தெரிவித்து இருந்தனர். அதன்பேரில் சட்டவிரோதமாக ரூ.74.93 கோடிக்கு சொத்துகள் குவித்ததாக சி.பி.ஐ.யும், டி.கே.சிவக்குமார் மீது வழக்குப்பதிவு செய்தது. மேலும் கடந்த அக்டோபர் மாதம் 5-ந் தேதி பெங்களூரு சதாசிவநகரில் உள்ள டி.கே.சிவக்குமாரின் வீடு, ராமநகரில் உள்ள வீடு, ஹாசனில் உள்ள ஆதரவாளர் வீடு உள்பட 14 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது ரூ.57 லட்சம் ரொக்கம், சொத்து ஆவணங்கள், வங்கிக்கணக்கு புத்தகங்கள், கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க் உள்ளிட்ட சில பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து எடுத்து சென்றனர். இந்த நிலையில் சட்டவிரோதமாக சொத்து குவித்தது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி கடந்த 19-ந் தேதி டி.கே.சிவக்குமாருக்கு, சி.பி.ஐ. நோட்டீசு வழங்கியது. அந்த நோட்டீசில் 23-ந் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. ஆனால் கட்சி தொடர்பாக தான் மேற்கொள்ள வேண்டிய சுற்றுப்பயணத்தை காரணம் காட்டி 25-ந் தேதி விசாரணைக்கு ஆஜராகுவதாக சி.பி.ஐ. அதிகாரிகளிடம் டி.கே.சிவக்குமார் கூறி இருந்தார். இதற்கு சி.பி.ஐ. அதிகாரிகளும் அனுமதி அளித்தனர். இந்த நிலையில் சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு நேற்று காலை பெங்களூருவுக்கு டி.கே.சிவக்குமார் திரும்பி இருந்தார். இந்த நிலையில் நேற்று மாலை 3.50 மணிக்கு பெங்களூரு கங்காநகரில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்திற்கு டி.கே.சிவக்குமார் சென்று அதிகாரிகள் முன்பு ஆஜராகினார். அப்போது சோதனையின் போது தங்களிடம் சிக்கிய ஆவணங்களை காட்டி டி.கே.சிவக்குமாரிடம், சி.பி.ஐ. அதிகாரிகள் கேள்வி எழுப்பியதாகவும், அதற்கு அவர் பதில் அளித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. சுமார் 40 நிமிடங்கள் நடந்த இந்த விசாரணை மாலை 4.45 மணிக்கு நிறைவு பெற்றது. பின்னர் மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேலின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள செல்வதாக சி.பி.ஐ. அதிகாரிகளிடம் கூறிவிட்டு டி.கே.சிவக்குமார் புறப்பட்டு சென்றார். டி.கே.சிவக்குமார் விசாரணைக்கு ஆஜரானதையொட்டி, முன்எச்சரிக்கையாக சி.பி.ஐ. அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகுவதற்கு முன்பு டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சட்டவிரோதமாக சொத்து குவித்த புகாரில் சி.பி.ஐ. அனுப்பிய நோட்டீசு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளேன். கடந்த 23-ந் தேதி விசாரணைக்கு ஆஜராக எனக்கு நோட்டீசு வழங்கப்பட்டது. ஆனால் 25-ந் தேதி வரை அவகாசம் கேட்டு இருந்தேன். எனக்கு சி.பி.ஐ. அதிகாரிகளும் அனுமதி அளித்து இருந்தனர். அதன்படி இன்று (நேற்று) விசாரணைக்கு ஆஜராக உள்ளேன். சி.பி.ஐ. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன். எனது ஆதரவாளர்களும், நண்பர்களும் ஆதங்கம், கவலைப்பட வேண்டாம். தயவுசெய்து சி.பி.ஐ. அலுவலகம் முன்பு யாரும் வர வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிலையில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகுவதற்கு முன்பு பெங்களூருவில் உள்ள தனது சகோதரரும், எம்.பி.யுமான டி.கே.சுரேஷ் வீட்டில் வைத்து சட்ட ஆலோசர்கள், ஆடிட்டர்களிடம் டி.கே.சிவக்குமார் ஆலோசனை நடத்தியதாகவும், பின்னர் ஆர்.ஆர்.நகரில் நடந்த ஒரு திருமண விழாவிலும், ராஜாஜிநகரில் உள்ள அஜ்ஜய்யபெட்டா மடத்தின் மடாதிபதியை சந்தித்து பேசியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    Next Story
    ×