search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    லடாக் சீனாவில் உள்ளதாக காட்டப்பட்ட விவகாரம் - எழுத்துப்பூர்வ மன்னிப்பு கோரியது டுவிட்டர்

    லடாக் யூனியன் பிரதேசம் சீனாவில் உள்ளதாக காட்டப்பட்ட விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுக்குழுவிடம் டுவிட்டர் நிறுவனம் எழுத்துப்பூர்வ மன்னிப்பு கோரியுள்ளது.
    புதுடெல்லி:  

    டுவிட்டர் நிறுவனம் கடந்த மாதம் வெளியிட்டிருந்த இருப்பிட அமைப்பில், இந்தியாவின் லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே பகுதிகள் சீனாவின் ஒரு பகுதியாக குறிப்பிடப்பட்டு இருந்தது. 

    இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது. மேலும் இது தொடர்பாக டுவிட்டர் நிறுவனம் விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டது.

    இதையடுத்து, டுவிட்டர் நிறுவன பிரதிநிதிகள் குழு கடந்த மாதம் 28-ம் தேதி பாராளுமன்ற கூட்டுக்குழு முன் ஆஜராகி இருப்பிட குறியீடு தொடர்பாக விளக்கம் அளித்தனர். 

    டுவிட்டர் நிறுவன பிரதிநிதிகள் அளித்த விளக்கத்தை பாராளுமன்ற கூட்டுக்குழு தலைவர் மீனாட்சி லேகி மற்றும் உறுப்பினர்கள் ஏற்க மறுத்தனர். மேலும், டுவிட்டர் நிறுவனத்தின் செயல் தேசவிரோத நடவடிக்கை இதற்கு 7 ஆண்டுகள் வரை சிறைதண்டனை பெறக்கூடிய குற்றம் எனவும் தெரிவித்தனர்.

    இதை தொடர்ந்து, பாராளுமன்ற கூட்டுக்குழு முன் டுவிட்டர் நிறுவன பிரதிநிதிகள் தவறுக்கு வாய்மொழியாக பகீரங்க மன்னிப்பு கோரினர். ஆனால், டுவிட்டர் நிறுவனத்தின் வாய்மொழி மன்னிப்பை பாராளுமன்ற கூட்டுக்குழு ஏற்க மறுத்துவிட்டது.

    இந்நிலையில், லடாக் யூனியன் பிரதேசத்தின் லே பகுதி சீனாவில் உள்ளதாக காட்டப்பட்ட விவகாரத்தில் டுவிட்டர் நிறுவனம் நேற்று எழுத்துப்பூர்வ மன்னிப்பு கோரியுள்ளது. 

    மேலும், இது தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடைபெற்று விட்டதாகவும், இந்த தவறு வரும் 30-ம் தேதிக்குள் திருத்தப்படும் என்றும் பாராளுமன்ற கூட்டுக்குழுவிடம் எழுத்துப்பூர்வமாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    டுவிட்டர் நிறுவனம் எழுத்துப்பூர்வமாக மன்னிப்புக்கோரியுள்ளது என்ற தகவலை பாராளுமற கூட்டுக்குழு தலைவர் மீனாட்சி லேகி தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×