search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய அரசு
    X
    மத்திய அரசு

    கொரோனாவுக்கு பலியானவர்களில் 70 சதவீதம் பேர் ஆண்கள்- மத்திய அரசு தகவல்

    இந்தியாவில் கொரோனா வைரசுக்கு இதுவரை 70 சதவீதம் பேர் ஆண்கள் பலியாகியுள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா வைரசுக்கு இதுவரை 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் பலியாகி இருக்கிறார்கள். 72.37 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 63 லட்சம் பேர் குணம் அடைந்து உள்ளனர்.

    இந்தநிலையில் கொரோனாவுக்கு பலியானவர்களில் 70 சதவீதம் பேர் ஆண்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூ‌ஷன் கூறியதாவது:-

    கொரோனா வைரசுக்கு பலியானவர்களில் 70 சதவீதம் பேர் ஆண்கள் ஆவார்கள். பலியானவர்களில் 17 வயதுக்கு கீழ் மற்றும் 18 முதல் 25 வயதுக்குள்ளாக 1 சதவீதம் பேர் இருந்திருக்கிறார்கள். 60 வயதுக்குள் உள்ளவர்களும் பாதுகாப்பு நடவடிக்கைகளை புறக்கணிக்க கூடாது. அவற்றை பின்பற்ற வேண்டும்.

    கொரோனா பலியில் 45 முதல் 60 வயது வரை பிற நோய்வாய்ப்பட்டவர்களில் 14 சதவீதம் பேர் உயிரிழந்திருக்கிறார்கள். பிற நோய்கள் இல்லாதவர்களில் 1.5 சதவீதம் பேர் கொரோனாவால் பலியாகி இருக்கின்றனர்.

    நாடு முழுவதும் தொடர்ந்து கடந்த 10 நாட்களில் பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கு கீழ் இருக்கிறது. கடந்த 24 மணிநேரத்தில் 709 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 75 சதவீத உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 23 சதவீத உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிதி ஆயோக் உறுப்பினர் வினோத் கே.பால் கூறும்போது, ‘ஒரு தடுப்பூசியை உருவாக்கும் வரை பொதுமக்கள் வைரசுக்கு எதிராக சமூக கட்டுப்பாட்டை கடை பிடிக்க வேண்டும்.

    தடுப்பூசி வரும் வரை நாம் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டியது அவசியம். குளிர் காலம் வைரஸ் பரவுவதற்கு உகந்ததாக அறியப்படுகிறது. பல நாடுகளில் இப்போது 2-வது அலை காணப்படுகிறது.

    இது முதல் அலையை விட மோசமானது. எனவே நாம் கவனமாக இல்லாமல் பண்டிகைகளுக்காக பெரிய கூட்டங்கள் கூடினால் சூப்பர் பரவல் நிகழ்வுகளாக கொரோனா வைரஸ் மாறும். எனவே முககவசம் அணிவது மூலமும், சுகாதாரத்தை கடைபிடிப்பதன் மூலமும், கூட்டத்தை தவிர்ப்பதன் மூலமும் இதை தவிர்க்க முடியும். தடுப்பூசி வரும் வரை இதுதான் ஒரே வழி’ என்றார்.

    உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு மற்றும் பலி சதவீதம் இந்தியாவில் தொடர்ந்து மற்ற நாடுகளை விட குறைவாக இருந்து வருகிறது. இந்தியாவில் 10 லட்சம் பேரில் 79 பேர் உயிரிழப்பதாகவும், உலக அளவில் 138 பேர் பலியாவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    கடந்த 24 மணிநேரத்தில் 55 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். கடந்த 5 வாரங்களாக தொடர்ந்து தினமும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்தபடி இருக்கிறது. செப்டம்பர் மாதம் 2-வது வாரத்தில் தினமும் 92 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். இந்த மாதம் 2-வது வார தொடக்கத்தில் 70 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர்.

    பாதிக்கப்பட்டவர்களில் 70 சதவீதம் பேர் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்தவர்கள். கர்நாடகா, மகாராஷ்டிராவில் தினமும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×