search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    லடாக்கில் படைகளை வாபஸ் பெறுவது குறித்து இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் 7-வது சுற்று பேச்சுவார்த்தை

    லடாக்கில் படைகளை வாபஸ் பெறுவது குறித்து இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் நேற்று 7-வது சுற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
    புதுடெல்லி:

    கிழக்கு லடாக்கில் இந்திய எல்லைக்குள் கடந்த மே மாத தொடக்கத்தில் சீன படைகள் ஊடுருவ முயன்றதால் இருநாட்டு வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் ஜூன் மாதம் நிகழ்ந்த மோதலில் இரு தரப்பிலும் உயிரிழப்புகளும் நிகழ்ந்தன. அதன்பின்னரும் அவ்வப்போது மோதல் சூழல்கள் ஏற்பட்டு வருகின்றன.

    குறிப்பாக கடந்த ஆகஸ்டு 29-ந்தேதி சீன ராணுவம் மீண்டும் ஆக்கிரமிப்பு மனநிலையை கடைப்பிடித்ததால், இருதரப்பிலும் கைகலப்பு ஏற்பட்டது. ஆகஸ்டு 29 முதல் செப்டம்பர் 8-ந்தேதி வரை 3 முறை இதைப்போன்ற மோதல் சூழல்கள் ஏற்பட்டன. இதில் 45 ஆண்டுகளுக்குப்பின் முதல் முறையாக துப்பாக்கிச்சூடும் நடந்தது.

    சீனாவின் இந்த அத்துமீறலுக்கு சிறிதும் அஞ்சாத இந்தியா, அங்கு சர்ச்சைக்குரிய பகுதிகளில் படைகளை குவித்து சீனாவின் போக்கை கண்காணித்து வருகிறது. இதனால் லடாக் எல்லையில் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

    இரு நாடுகளுக்கு இடையேயான மோதல்போக்கு இவ்வாறு இருக்க, மறுபுறம் அங்கு படைகளை வாபஸ் பெற்று அமைதியை ஏற்படுத்த இருதரப்பும் முயன்று வருகின்றன. இதற்காக இருதரப்பும் ராணுவம், தூதரகம், மந்திரிகள் மட்டத்தில் தொடர் பேச்சுவார்த்தைகளையும் நடத்தி வருகின்றன.

    இதில் கடந்த மாதம் மாஸ்கோவில் நடந்த இருநாட்டு வெளியுறவு மந்திரிகள் பேச்சுவார்த்தையின்போது, எல்லையில் அமைதியை ஏற்படுத்த 5 அம்ச கொள்கை உருவாக்கப்பட்டது. இதை செயல்படுத்துவதற்காக இரு தரப்பும் முனைப்பு காட்டி வருகின்றன. ஆனாலும் அங்கு அமைதியை ஏற்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் இல்லை.

    இதில் கடைசியாக கடந்த மாதம் 21-ந்தேதி நடந்த இருநாட்டு ராணுவ அதிகாரிகளின் 6-வது சுற்று பேச்சுவார்த்தையில் 5 அம்ச திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பேசப்பட்டது. இதில் எல்லையில் மேலும் படைகளை அனுப்பக்கூடாது, அங்கு தன்னிச்சையாக எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தக்கூடாது, மோதலை ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டன.

    இவ்வாறு தொடர் பேச்சுவார்த்தைகள் நடந்தபோதும், எல்லையில் இருந்து படைகளை விலக்குவது தொடர்பாக சீனா எத்தகைய முடிவுக்கும் வர மறுக்கிறது. குறிப்பாக படைகளை விலக்கும் பணிகளை இந்தியா தொடங்குமாறு அறிவுறுத்தி வருகிறது. இதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் இந்தியா, ஒரே நேரத்தில் அனைத்து பகுதிகளில் இருந்தும் படைகளை விலக்க வேண்டும் என வலியுறுத்துகிறது.

    இப்படி எல்லை மோதல் விவகாரத்தில் ஒரு முடிவுக்கு முடியாத நிலையில், நேற்று இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் 7-வது சுற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்தியாவின் சுசுல் பகுதிக்குள் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் இந்தியா சார்பில் லேயை மையமாக கொண்ட 14-வது படைப்பிரிவின் கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங், இந்த படைப்பிரிவுக்கு விரைவில் தலைமை தாங்க இருக்கும் லெப்டினன்ட் ஜெனரல் பி.ஜி.கே.மேனன், மத்திய வெளியுறவுத்துறை இணை செயலாளர் (கிழக்கு ஆசியா) நவீன் ஸ்ரீவத்சவா உள்ளிட்டோர் பங்கேற்றனர். நண்பகல் 12 மணிக்கு தொடங்கிய இந்த பேச்சுவார்த்தை இரவு வரை நீண்டது.

    லடாக் எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து இருதரப்பும் படைகளை விலக்குவது பற்றிய செயல்திட்டம் ஒன்றை உருவாக்குவதே நேற்றைய பேச்சுவார்த்தையின் ஒரே நிகழ்ச்சி நிரல் ஆகும். இருதரப்பும் அங்கு சுமார் 1 லட்சம் வீரர்களை நேருக்கு நேர் நிறுத்தி இருப்பதால், இந்த படைகளை விலக்குவது குறித்து பேசப்பட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

    முன்னதாக நேற்றைய சந்திப்பில் இந்தியா சார்பில் வலியுறுத்த வேண்டிய அம்சங்களை, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையிலான உயர்மட்டக்குழுவினர் கடந்த வெள்ளிக்கிழமையன்றே இறுதி செய்து பேச்சுவார்த்தைக்குழுவுக்கு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இருநாட்டு ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் இந்தியா சார்பில் தொடக்கம் முதல் பங்கேற்று வரும் ஹரிந்தர் சிங், விரைவில் இந்திய ராணுவ அகாடமி தலைவர் பொறுப்பை ஏற்க இருக்கிறார். எனவே அவரது கடைசி சந்திப்பு இதுவாகும். அவருக்கு பதிலாக இனிவரும் சந்திப்புகளுக்கு பி.ஜி.கே.மேனன் தலைமை தாங்குவார் என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
    Next Story
    ×