
தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் அருகே ராக்கெட் ஏவுதளம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து நேற்று பாராளுமன்ற மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பிரதமர் அலுவலக மந்திரி ஜிதேந்திர சிங் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-
விண்வெளித்துறையின் வேண்டுகோளை ஏற்று, ராக்கெட் ஏவுதளம் அமைக்க தமிழக அரசு தூத்துக்குடி மாவட்டத்தில் 961 ஹெக்டேர் நிலத்தை அடையாளம் கண்டறிந்தது.
இன்னும் 6 மாத காலத்துக்குள் அந்த நிலத்தை தமிழக அரசு ஒப்படைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். பொதுவாக, இதுபோன்ற கட்டமைப்பு திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்த 2 முதல் 3 ஆண்டுகள் ஆகும்.
961 ஹெக்டேர் நிலத்தில், 431 ஹெக்டேர் நிலத்தில் அளவிடும் பணி முடிவடைந்து விட்டது. மீதி நிலத்துக்கு அளவிடும் பணி நடந்து வருகிறது. மாவட்டத்தில் மாதவன்குறிச்சி, படுக்கப்பத்து, பள்ளகுறிச்சி ஆகிய கிராமங்களில் நிலம் கையகப்படுத்தும் பணியை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு ஜிதேந்திர சிங் கூறினார்.