search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா
    X
    காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா

    விவசாயம் தொடர்பான மத்திய அரசின் 3 அவசர சட்டங்களை கடுமையாக எதிர்ப்போம் - காங்கிரஸ் கட்சி அறிவிப்பு

    விவசாயம் தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 அவசர சட்டங்களை நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் கடுமையாக எதிர்ப்போம் என்று காங்கிரஸ் கட்சி கூறி உள்ளது.
    புதுடெல்லி:

    மத்திய பா.ஜ.க. அரசு, விவசாயம் தொடர்பாக 3 அவசர சட்டங்களை கொண்டு வந்துள்ளது.

    அவை, விவசாய விளைபொருட்கள் வியாபாரம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்கல்) அவசர சட்டம், விவசாயிகள் (அதிகாரப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு) விலை உறுதி விவசாய சேவைகள் சட்டம், அத்தியாவசிய பொருட்கள் (திருத்தம்) அவசர சட்டம் ஆகும்.

    இந்த சட்டங்கள், அறிவிக்கப்பட்ட பண்ணை மண்டலங்களுக்கு வெளியே விவசாய விளைபொருட்களின் தடையற்ற வர்த்தகத்துக்கு உதவுகிறது. விளைபொருட்களை உற்பத்தி செய்வதற்கு முன்பாகவே அதன் விற்பனை தொடர்பாக தனியாருடன் விவசாய ஒப்பந்தங்களை செய்து கொள்ள அதிகாரம் வழங்குகிறது.

    இருந்தபோதிலும் விவசாயிகளுக்கு எதிரானது என்ற ஒரு கருத்தும் எழுந்துள்ளது. குறிப்பாக இது விவசாயிகளை விட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அதிக பயனைத்தரும் என்று கூறப்படுகிறது.

    இதையொட்டி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா, டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    விவசாயம் தொடர்பாக கொண்டு வரப்பட்டுள்ள 3 அவசர சட்டங்கள் கொடூரமானவை. அவை இந்தியாவில் விவசாயத்துக்கு எதிரான மரண முத்திரை. அவை விவசாயிகளை ஒரு சில முதலாளிகளின் பலி பீடத்தில் அடிபணிய செய்து விடும். குறைந்தபட்ச ஆதரவு விலை முறையின்கீழ் தங்கள் பயிருக்கு லாப விலையை பெறுவதை விட அவர்களை தங்கள் சொந்த நிலத்தில் உழைக்கிற தொழிலாளர்களாக உருவாக்கும்.

    இந்த அவசர சட்டம் தொடர்பாக எங்கள் கட்சி தலைவர்கள், ஒவ்வொரு கட்சியிடமும் பேசுவார்கள். அவர்கள் ஏற்கனவே தொடர்பில் உள்ளனர். விவசாய சமூகத்தை அடிபணியச்செய்வதையும், கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களை ஒழித்துக்கட்டுவதையும் நோக்கமாக கொண்டுள்ள மோடி அரசின் கொடூரமான அவசர சட்டங்களுக்கு எதிராக நாம் கூட்டாக எதிர்ப்பை வெளிப்படுத்துவோம்.

    இந்த அவசர சட்டங்களில் விவசாய தொழிலாளர்கள் அல்லது குத்தகைதாரர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு எந்த ஏற்பாடும் இல்லை.

    இவை, கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்தில் ஒரு சில முதலாளிகளுக்காக விவசாயிகளின் பேரழிவை வாய்ப்புகளாக மாற்றுவதற்கான சதி ஆகும். விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கையின் விளைவுகளை பா.ஜ.க. நீண்ட காலம் தாங்க வேண்டியது வரும்.

    இந்த 3 அவசர சட்டங்களும் கூட்டாட்சி அமைப்பு மீதான நேரடி தாக்குதல் ஆகும். இவற்றை நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் எதிர்ப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×