search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்றம்
    X
    பாராளுமன்றம்

    4-ம் கட்ட ஊரடங்கு தளர்வில் கொரோனாவை வெற்றி கொண்டதன் அடையாளமாக கூடும் பாராளுமன்றம்

    4-ம் கட்ட ஊரடங்கு தளர்வில், கொரோனாவை வெற்றி கொண்டதன் அடையாளமாக பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதாக கருத்து உருவாகி உள்ளது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 23-ந்தேதி, முன்கூட்டியே முடித்துக் கொள்ளப்பட்டது. இதையடுத்து, பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இம்மாதம் 14-ந்தேதி தொடங்குகிறது. அக்டோபர் 1-ந்தேதி முடிவடைகிறது.

    சீனாவுடன் ஒரு தடவையும், பாகிஸ்தானுடன் 2 தடவையும் போர் நடந்த சமயங்களிலும், பாராளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போதும் பாராளுமன்றம் வழக்கம்போல் செயல்பட்டது. அப்படிப்பட்ட பின்னணியில், கொரோனா வைரசுக்காக பாராளுமன்றம் கூடும் தேதி தாமதமானது.

    ஆனால், 4-ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் நேற்று அமலுக்கு வந்தன. அதையொட்டி, 14-ந்தேதி பாராளுமன்றமும் கூடுகிறது. சமூக இடைவெளியுடன் கூட்டத்தொடர் நடத்தப்படுகிறது. ‘‘கொரோனாவுக்கு பயப்படாமல், அதை வெற்றி கொண்டதன் அடையாளமாக இந்த கூட்டத்தொடர் நடத்தப்படுகிறது’’ என்று பா.ஜனதா மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

    கடந்த 1962-ம் ஆண்டு சீனாவுடன் போர் மூண்டபோது, பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வழக்கத்தை விட முன்கூட்டியே தொடங்கியது. கேள்வி நேரத்தை ரத்து செய்ததை தவிர, எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

    கடந்த 1965-ம் ஆண்டு பாகிஸ்தானுடன் போர் மூண்டபோது, மழைக்கால கூட்டத்தொடர் திடீரென முடித்துக்கொள்ளப்பட்டபோதிலும், ஒரு மாதத்துக்கு மேலாக கூட்டம் நடந்தது.

    1971-ம் ஆண்டு பாகிஸ்தானுடன் போர் நடந்தபோது, பாராளுமன்றம் தடையின்றி நடந்தது. போர் வெற்றியை பாராளுமன்றத்தில்தான் பிரதமர் இந்திரா காந்தி அறிவித்தார்.

    1975-ம் ஆண்டு ஜூன் மாதம் அவசரநிலை அறிவிக்கப்பட்டது. 1977-ம் ஆண்டு மார்ச் மாதம்வரை அது அமலில் இருந்தது. அந்த காலகட்டத்தில் 5 கூட்டத்தொடர்கள் நடத்தப்பட்டன. கேள்வி நேரம் மட்டும் ரத்து செய்யப்பட்டது. மந்திரிகளை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கேள்வி கேட்க அனுமதிக்கப்படவில்லை.
    Next Story
    ×