search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடியூரப்பா, குமாரசாமி
    X
    எடியூரப்பா, குமாரசாமி

    அனைத்து தொகுதிகளுக்கும் நிதி ஒதுக்க வேண்டும்: எடியூரப்பாவுக்கு, குமாரசாமி கோரிக்கை

    மாநிலத்தில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள அனைத்து தொகுதிகளுக்கும் நிதி ஒதுக்க வேண்டும் என்று முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு, குமாரசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு ஆட்சிக்கு வந்த பின்பு காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளுக்கு நிதி ஒதுக்குவதில்லை என்றும், பாரபட்சமாக முதல்-மந்திரி எடியூரப்பா செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அதே நேரத்தில் கொரோனா ஊரடங்கால் தொகுதிகளில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கப்படவில்லை என்று காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் குற்றச்சாட்டு கூறினார்கள்.

    இதுதொடர்பாக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டர் பதிவுகளில் கூறி இருப்பதாவது;-

    மாநிலத்தில் கொரோனா பரவலை தொடர்ந்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் மாநிலத்தில் வளர்ச்சி பணிகளையும் மேற்கொள்ள வேண்டிய நிலை இருக்கிறது. எனது தலைமையிலான அரசு ஆட்சியில் இருந்த போது வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள மாநிலத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்திருந்தேன். கட்சி வேறுபாடுகள் இல்லாமல் அனைத்து எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளுக்கும் நிதி ஒதுக்கி இருந்தேன். எனவே மாநிலத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வளர்ச்சி திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை உடனடியாக அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

    நிதித்துறை தன்வசம் வைத்துள்ள முதல்-மந்திரி எடியூரப்பா, தொகுதிகளில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாக விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கால் நிதி நெருக்கடி ஏற்பட்டு இருந்தாலும் மாநிலத்தில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதிலும் தனிக்கவனம் செலுத்துவதுடன், தொகுதிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும்படி முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×