search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோனியா காந்தி
    X
    சோனியா காந்தி

    சோனியா காந்தி குடும்ப அறக்கட்டளைகளுக்கு எதிராக மத்திய அரசு விசாரணை

    சோனியா காந்தி குடும்பத்துக்கு சொந்தமான 3 அறக்கட்டளைகளின் சட்ட விதிமீறல்களை விசாரிக்க அமைச்சகங்களுக்கு இடையிலான குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
    புதுடெல்லி:

    சமீபத்தில், ராஜீவ் காந்தி பவுண்டேசனுக்கு எதிராக பா.ஜனதா தரப்பில் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ராஜீவ் காந்தி பவுண்டேசனுக்கு நன்கொடை அளிக்கப்பட்டதாக பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறினார். மேலும், சில ஆண்டுகளுக்கு முன்பு, அந்த பவுண்டேசனுக்கு சீன தூதரகத்தில் இருந்து நன்கொடை பெறப்பட்டதாக மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் குற்றம் சாட்டினார். அது, இந்தியா-சீனா இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்துக்கு ஆதரவு திரட்ட கொடுக்கப்பட்ட லஞ்சமா? என்று அவர் கேள்வி விடுத்தார்.

    ராஜீவ் காந்தி பவுண்டேசன், கடந்த 1991-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன் தலைவராக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி செயல்படுகிறார். மன்மோகன்சிங், ராகுல் காந்தி, பிரியங்கா, ப.சிதம்பரம், மான்டேக்சிங் அலுவாலியா உள்ளிட்டோர் அதில் இடம்பெற்றுள்ளனர்.

    பின்னர், 2002-ம் ஆண்டு, ராஜீவ் காந்தி சேரிட்டபிள் டிரஸ்ட் என்ற அறக்கட்டளை தொடங்கப்பட்டது. அதன் தலைவராக சோனியா காந்தியும், உறுப்பினர்களாக ராகுல் காந்தி, அசோக் கங்குலி, பன்சி மேத்தா ஆகியோரும் செயல்படுகின்றனர்.

    இந்த அறக்கட்டளைகளுடன், இந்திரா காந்தி மெமோரியல் டிரஸ்ட் என்ற அறக்கட்டளையும் சோனியா காந்தி குடும்பத்துக்கு சொந்தமாக உள்ளது.

    இந்த அறக்கட்டளைகளுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால், அவை பற்றிய விசாரணையை ஒருங்கிணைப்பதற்காக, அமைச்சகங்களுக்கு இடையிலான குழு ஒன்றை மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது.

    சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டம், வருமான வரி சட்டம், வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டம் ஆகிய சட்டங்களை மீறியதாக கூறப்படும் புகார்கள் குறித்து இக்குழு விசாரணை நடத்தும். அமலாக்கப்பிரிவு சிறப்பு இயக்குனர் ஒருவர் தலைமையில் விசாரணை குழு செயல்படும்.

    இத்தகவல்களை மத்திய உள்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
    Next Story
    ×