search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீனவர்கள்
    X
    மீனவர்கள்

    ஜூன் 1-ந் தேதி முதல் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லலாம்- மத்திய அரசு அறிவிப்பு

    தமிழகம், கேரளா உள்பட பல்வேறு மாநிலங்கள் மீன்பிடி தடை காலத்தை முன்கூட்டியே முடிக்க விடுத்த கோரிக்கையை ஏற்று, மீனவர்கள் ஜூன் 1-ந் தேதி முதல் கடலுக்குள் செல்லலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    மீன்வளத்தை பெருக்குவதற்காக ஆண்டுதோறும் கடலில் குறிப்பிட்ட நாட்களில் மீன் பிடிப்பதற்கு தடை விதிக்கப்படும். அந்த வகையில் இந்திய கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டது.

    அதுபோல மேற்கு கடற்கரை பகுதியில் ஜூன் 1-ந் தேதி முதல் ஜூலை 31-ந் தேதி வரை மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் மீனவர்கள் கடலுக்குள் செல்லாததால் அவர்களது வாழ்வாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டது.

    தமிழக அரசு மீனவர்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கியது. என்றாலும் கடலுக்குள் செல்ல அனுமதித்தால்தான் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    மத்திய அரசு

    இதுபற்றி மத்திய அரசிடம் தமிழகம், கேரளா உள்பட பல்வேறு மாநிலங்கள் மீன்பிடி தடை காலத்தை முன்கூட்டியே முடிக்க கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று மீன்பிடி தடைகாலத்தை மாற்றி அமைத்து மத்திய நீர்வளத்துறை உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி கிழக்கு கடற்கரையோர பகுதிகளில் மீன்பிடி தடை காலம் ஜூன் 14-ந் தேதிக்கு பதில் மே 31-ந் தேதியே முடித்துக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மீன்பிடி தடை கால அளவு 61 நாட்களில் இருந்து 47 நாட்களாக குறைந்துள்ளது.

    இதனால் தமிழகம் உள்பட கிழக்கு கடற்கரை பகுதியை சேர்ந்த மீனவர்கள் ஜூன் 1-ந் தேதி முதல் கடலுக்குள் செல்லலாம். மேற்கு கடற்கரை பகுதி மீனவர்களுக்கும் மே 31-ந் தேதியுடன் தடை காலம் நிறைவடைகிறது.

    1-ந் தேதி முதல் மீனவர்கள் கடலுக்குள் செல்ல இருப்பதால் அடுத்த வாரம் முதல் தமிழகம் முழுவதும் மீன்வரத்து அதிகரிக்கும். இதன் காரணமாக மீன் விலை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×