search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடகத்தில் 18-ந் தேதி முதல் பஸ்களை இயக்க அரசு திட்டம்
    X
    கர்நாடகத்தில் 18-ந் தேதி முதல் பஸ்களை இயக்க அரசு திட்டம்

    கர்நாடகத்தில் 18-ந் தேதி முதல் பஸ்களை இயக்க அரசு திட்டம்

    கர்நாடகத்தில் 18-ந் தேதி முதல் பஸ்களை இயக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பணிக்கு வரும்படி அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு வருகிற 17-ந் தேதி நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே கர்நாடக அரசு ஊரடங்கை தளர்த்தி, தொழில் நிறுவனங்கள், கடைகள், வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதி வழங்கியுள்ளது. அதே நேரத்தில் ஆட்டோ-வாடகை கார்கள் மற்றும் பஸ் போக்குவரத்துக்கு இன்னும் அனுமதி வழங்கவில்லை.

    இந்த நிலையில் வருகிற 17-ந் தேதி பொது முடக்கம் முடிவுக்கு வருகிறது. ஆனால் பிரதமர் நேற்று முன்தினம் நாட்டுக்கு உரையாற்றி, பொது முடக்கம் புதிய முறையில் அமல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார். அதாவது ஊரடங்கை தளர்த்துவது தொடர்பாக அந்தந்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கர்நாடகத்தை பொறுத்தவரையில் கொரோனா பரவல் என்பது கட்டுக்குள் உள்ளது. கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ தாண்டி இருந்தாலும், சுமார் 50 சதவீதம் பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். கர்நாடகத்தில் கொரோனா பரவல் மையம்(‘கிளஸ்டர்’) என்று எங்கும் உருவாகவில்லை. இதனால் அந்த வைரஸ் பரவல் குறைவாக உள்ளது.

    இதனால் பொருளாதார நடவடிக்கைகளுக்கு வேகம் கொடுக்க முதல்-மந்திரி எடியூரப்பா தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அதற்கான பணிகளிலும் அவர் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் வருகிற 18-ந் தேதி முதல் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் குறைந்த எண்ணிக்கையில் பஸ்களை இயக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அதாவது காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 7 மணி வரை பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதற்காக விடுமுறையில் உள்ள ஊழியர்களை பணிக்கு திரும்பும்படி போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. பஸ்கள் இயக்கப்பட்டாலும், பஸ்சுக்குள் பயணிகள் சமூக இடைவெளியை பின்பற்றுவதை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    ஒரு பஸ்சில் அதிகபட்சமாக 30 பேரை மட்டுமே அனுமதிக்க போக்குவரத்துத்துறை முடிவு செய்துள்ளது. மேலும் முக கவசம் அணியாத பயணிகள் பஸ்சில் பயணம் செய்ய அனுமதி இல்லை என்ற முடிவும் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஊரடங்கால் கடந்த 50 நாட்கள் பஸ்கள் இயக்கப்படாததால், அரசு போக்குவரத்து கழகங்கள் கடுமையான இழப்பை சந்தித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×