search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவி ஷபியா
    X
    மாணவி ஷபியா

    மூச்சுத்திணறலால் அவதி- மாணவி ஆக்சிஜன் சிலிண்டருடன் தேர்வு எழுத அனுமதி

    உத்தரபிரதேச மாநிலத்தில் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் மாணவி ஷபியா ஆக்சிஜன் சிலிண்டருடன் சென்று 10-ம் வகுப்பு தேர்வு எழுத அம்மாநில கல்வித்துறை அனுமதி வழங்கி உள்ளது.
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மாணவி ‌ஷபியா யாதவ். 16 வயது நிரம்பிய மாணவி ‌ஷபியா 10-ம் வகுப்பு படித்து வந்தார். சிறந்த மாணவியாக இருந்த அவருக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டது.

    5 ஆண்டுகளாக அவருக்கு இந்த பிரச்சினை இருந்து வருகிறது. அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 1½ ஆண்டுகளாக ஆஸ்பத்திரியில் நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். செயற்கையாக ஆக்சிஜன் டியூப் பொருத்தி சுவாசித்து வருகிறார்.

    மாணவி ‌ஷபியா இதன் காரணமாக பள்ளிப்படிப்பை தொடர முடியவில்லை. எனவே படிப்பில் ஆர்வம் கொண்ட அவர் தனியாக 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் மாணவி ‌ஷபியா வாழ வேண்டியுள்ளது. எனவே 10-வது வகுப்பு அரசு தேர்வை ஆக்சிஜன் சிலிண்டருடன் தேர்வு மையத்துக்கு சென்று எழுத அனுமதி கேட்டு இருந்தார்.

    இதையடுத்து மாணவி ‌ஷபியா ஆக்சிஜன் சிலிண்டருடன் சென்று 10-ம் வகுப்பு தேர்வு எழுத உத்தரபிரதேச கல்வித்துறை அனுமதி வழங்கி உள்ளது. இதுகுறித்து மாணவியின் தந்தை சர்வார் யாதாவ் கூறியதாவது:-

    எனது மகள் வகுப்பில் முதல் மாணவியாக இருந்தாள். ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு அதற்கு சிகிச்சை பெற்று வருகிறாள். பள்ளிக்கு செல்ல முடியாததால் தனியாக 10-ம் வகுப்பு படிக்கிறாள். ஆக்சிஜன் உதவியுடன் தான் சுவாசிக்கும் நிலை உள்ளது.

    எனவே ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறாள். எங்கு சென்றாலும் ஆக்சிஜன் சிலிண்டருடன் செல்லும் நிலை உள்ளது. எனவே டாக்டர்கள் ஆலோசனைப் படி 10-ம் வகுப்பு தேர்வை ஆக்சிஜன் சிலிண்டருடன் சென்று எழுத அனுமதி கேட்டோம்.

    கல்வித்துறை அனுமதி வழங்கி உள்ளது. எனது மகள் சிறப்பாக தேர்வு எழுதுவாள். குணமடைந்து வருகிறாள். விரைவில் தானாக சுவாசிக்கும் நிலை ஏற்படும். அவள் சிறப்பாக படித்து நல்ல நிலையை அடைவாள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×