search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல் காந்தி
    X
    ராகுல் காந்தி

    பாஜக ஆட்சியில் 2 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டது - ராகுல் காந்தி

    பாரதிய ஜனதா ஆட்சியில் 2 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

    மும்பை:

    மராட்டிய மாநில காங்கிரஸ் பிரசாரத்தில் ராகுல் காந்தி ஈடுபட்டுள்ளார். அவர் லத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆஷாவில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தவறான வாக்குறுதிகளை நாட்டு மக்களுக்கு கூறி வருகிறது.

    இதுவரை அவர்கள் அளித்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. பொருளாதாரத்தை பெருக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறி ஜி.எஸ்.டி. வரியை அறிமுகம் செய்தார்கள்.

    ஆனால், சிறு வணிகர்களின் வாழ்வாதாரத்தை சீரழித்து விட்டார்கள். இன்று நாட்டின் பொருளாதாரத்தின் அஸ்திவாரமே ஆட்டம் கண்டுள்ளது.

    நாட்டில் 2 ஆயிரம் முக்கிய தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டன. தொழில்துறை மிக மந்தமான முறையில் இருக்கிறது.

    நான் சமீபத்தில் குஜராத் சென்றிருந்தேன். அப்போது அங்கு ஜவுளி மற்றும் வைர தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாக அங்குள்ள மக்கள் கூறினார்கள்.

    நாட்டில் நடக்கும் அவல நிலைகளை மறைப்பதற்கு பாரதிய ஜனதா முயற்சிக்கிறது.

    இந்த வி‌ஷயங்களை ஊடகங்களும் முறையாக வெளிப்படுத்துவதில்லை. மோடியை பாராட்டும் செயல்களை மட்டும்தான் செய்கின்றன.

    அம்பானி- அதானி போன்ற 15 தொழில் அதிபர்களுக்கு ரூ.5 லட்சம் கோடி வரை வரி சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    வேலையில்லா திண்டாட்டம் மோசமான நிலையை எட்டி உள்ளது. ஆனால், இதுபற்றி யாரும் கேள்வி கேட்பதில்லை.

    சீன அதிபருடன் நடந்த பேச்சுவார்த்தையில் எல்லை பிரச்சினை குறித்து பேசாதது ஏன்? என்று ஊடகங்கள் எந்த கேள்வியும் கேட்கவில்லை. வேலையின்மையைப்பற்றி கேட்டால் நிலாவுக்கு விண்கலம் அனுப்பியதை பற்றி திசை திருப்பி பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

    இஸ்ரோ நிறுவனமே காங்கிரஸ் அரசால்தான் உருவாக்கப்பட்டது என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். நிலாவுக்கு விண்கலம் அனுப்பினால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்து விடுமா?

    பிரதமர் மோடியும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் பொதுமக்களின் முக்கியமான பிரச்சினைகளை திசை திருப்புவதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

    இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.

    Next Story
    ×