search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடியூரப்பா
    X
    எடியூரப்பா

    எடியூரப்பா மீது தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் கடும் அதிருப்தி

    பா.ஜனதா ஆட்சி அமைந்த பிறகு கண்டுகொள்ளாததால், எடியூரப்பா மீது தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு 14 மாதங்கள் நடைபெற்றது. கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் திடீரென ராஜினாமா செய்தனர். கூட்டணி கட்சி தலைவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும், ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் தங்களின் நிலையை மாற்றவே இல்லை. இதையடுத்து குமாரசாமி அரசு கவிழ்ந்தது.

    காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கடிதம் கொடுத்ததை அடுத்து ராஜினாமா செய்தவர்கள் உள்பட 17 எம்.எல்.ஏ.க்களை முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். சபாநாயகரின் நடவடிக்கையை எதிர்த்து தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். ஒரு மாதத்திற்கும் மேல் ஆகியும் அவர்களின் மனு இன்னும் விசாரணைக்கு வரவில்லை.

    இதனால், பா.ஜனதா ஆட்சி அமைந்தவுடன் மந்திரி ஆகிவிடலாம் என்று கருதிய அவர்கள் கடும் ஏமாற்றத்தில் உள்ளனர். மேலும் பா.ஜனதாவில் எடியூரப்பாவின் செல்வாக்கு வெகுவாக குறைந்துவிட்டதை கண்டு அச்சம் அடைந்துள்ள தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள், அவர் தங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவாரா? என்றும் அச்சம் அடைந்துள்ளனர்.

    இதுமட்டுமல்லாமல் அவர்கள் தங்கள் தொகுதிகளில் சில வளர்ச்சி பணிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று பட்டியல் கொடுத்ததாகவும், அவற்றுக்கு தேவையான நிதியை ஒதுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் முதல்-மந்திரி எடியூரப்பா மீது கடும் அதிருப்தி அடைந்துள்ள தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் வரும் காலத்தில் பா.ஜனதாவை யாரும் நம்ப மாட்டார்கள் என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. கர்நாடகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு காரணமான தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை, பா.ஜனதா அரசு கண்டுகொள்ளவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
    Next Story
    ×