search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விமான நிலையம்
    X
    விமான நிலையம்

    விமான நிலையங்கள், 50 ஆண்டுகளுக்கு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வராது - காங்கிரஸ் எச்சரிக்கை

    5 விமான நிலையங்களை தனியார் நிறுவனத்திடம் கொடுத்ததால், அவை 50 ஆண்டுகளுக்கு மத்திய அரசின் கட்டுப்பாட்டை மீறி சென்று விடும் என்று காங்கிரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    புதுடெல்லி:

    காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பவன் கேரா, நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    நாட்டில் 123 விமான நிலையங்கள் உள்ளன. அவற்றில் 14 தான் லாபத்தில் இயங்குகின்றன. அந்த 14 விமான நிலையங்களில், 5 விமான நிலையங்கள் அதானி குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. சில மாதங்களுக்கு முன்பு, மத்திய மந்திரிசபையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, கடந்த வாரம், இந்திய விமான நிலைய பொருளாதார ஒழுங்குமுறை ஆணைய சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. அதனால், இப்படி ஒப்படைக்கப்பட்ட விமான நிலையங்கள், இந்திய விமான நிலைய ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்கு அப்பால் இருக்கும்.

    இதன் அர்த்தம் என்னவென்றால், அதானி குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்ட 5 விமான நிலையங்களும் இன்னும் 50 ஆண்டுகளுக்கு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்காது என்பதுதான்.

    மேலும், பயணிகள் சேவை கட்டணத்துக்கு பதிலாக, விமான போக்குவரத்து பாதுகாப்பு கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலைக்கு பயணிகள் தள்ளப்பட்டுள்ளனர். அது, சேவை கட்டணத்தை விட ஒன்றரை மடங்கு அதிகமாகும். இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

    மோடி அரசு எடுக்கும் ஒவ்வொரு முடிவும் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பலன் அளிப்பதாகவும், சாமானியருக்கு எதிராகவும் இருக்கிறது என்று நாங்கள் நீண்ட காலமாக சொல்லி வருகிறோம். தனியாருக்கு சாதகமாக பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை சீர்குலைத்தது, இப்போது அதானி குழுமத்துக்கு விமான நிலையங்களை அளித்தது என எல்லாமே மோடி அரசின் உண்மை முகத்தை காட்டுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×