search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயில்வே மந்திரி  பியூஷ் கோயல்
    X
    ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல்

    ரெயில்வேயை தனியார்மயமாக்கும் திட்டம் இல்லை- மத்திய மந்திரி உறுதி

    இந்தியன் ரெயில்வேயை தனியார்மயமாக்கும் திட்டம் எதுவும் அரசுக்கு இல்லை என ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    சுற்றுலா வழித்தடங்கள் மற்றும் நெரிசல் குறைவாக உள்ள பகுதிகளில் தனியார் ரெயில்களை இயக்குவதற்கு அனுமதி அளிக்க மத்திய அரசு திட்டம் வகுத்து வருவதாகவும், சோதனை முயற்சியாக 2 ரெயில்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியானது. இதனால் ரெயில்வே துறை தனியார்மயத்தை நோக்கி பயணிப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

    இந்நிலையில், ரெயில்வே தனியார்மயம் தொடர்பான கேள்விக்கு மக்களவையில் இன்று ரெயில்வே துறை மந்திரி பியூஷ் கோயல் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில், இந்தியன் ரெயில்வேயை தனியார்மயமாக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசுக்கு இல்லை என்றும், தனியார் மூலம் இயக்கப்படும் பயணிகள் ரெயில் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

    புதுடெல்லி-லக்னோ தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலை தனியார் வசம் ஒப்படைக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

    இதுதொடர்பான துணைக் கேள்விக்கு பதிலளித்த இணை மந்திரி சுரேஷ் அங்காடி, இது தொடர்பாக தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், வரும் நாட்களில் சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.
    Next Story
    ×