search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியன் ரெயில்வே"

    • தற்போது இயங்கும் ரெயில்களில் அமரும் வசதி மட்டுமே உள்ளது
    • தமிழக நகரங்களுக்கு இடையே 2 ரெயில்கள் இயங்குகின்றன

    இந்தியாவில் உள்ள பல மாநிலங்களின் பல்வேறு நகரங்களை இணைக்கவும், மாநிலங்களிக்கு உள்ள முக்கிய நகரங்களை இணைக்கும் வகையிலும் இந்தியன் ரெயில்வேயால் துவங்கப்பட்டது 'வந்தே பாரத்' ரெயில் சேவை.

    தற்போது பகல் நேர ரெயில் சேவையாக இருப்பதால், அமரும் வசதி மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில்கள் மணிக்கு சுமார் 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.

    எந்த அயல்நாட்டு தொழில்நுட்பத்தையும் நாடாமல், இந்த ரெயில்களின் கட்டமைப்பு 'மேக் இன் இந்தியா' திட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள ஐ.சி.எஃப். நிறுவனத்தாலேயே முழுவதும் வடிவமைக்கப்பட்டது இதன் மற்றொரு சிறப்பம்சம்.

    தற்போது வரை இந்தியா முழுவதும் 34 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் கோவை-சென்னை வழித்தடத்திலும், திருநெல்வேலி-சென்னை வழித்தடத்திலும் என 2 ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    இந்நிலையில், படுக்கை வசதியுடன் வரப்போகும் வந்தே பாரத் ரெயில்களின் 'மாதிரி' வடிவங்களின் படங்களை இந்திய ரெயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டார்.

    16 பெட்டிகளை கொண்ட இந்த ரெயிலில் பணியாளர்களுக்கு 34 படுக்கைகளும் பயணிகளுக்கு 823 படுக்கைகளும் என மொத்தம் 857 படுக்கைகள் இடம்பெறும். அதிர்வுகளை தாங்க கூடிய மேம்படுத்தப்பட்ட ஷாக் அப்சார்பர்கள், போதிய அளவு வெளிச்சத்திற்கான மின் விளக்குகள், இரண்டு படுக்கைகளுக்கு இடையே போதிய இடைவெளி, மேலே உள்ள படுக்கைகளுக்கு சுலபமாக ஏறும் வகையில் படிக்கட்டு வசதி என பயணிகளை ஈர்க்கும் வகையில் பல வசதிகள் இதில் உள்ளது.

    உயர் கட்டண பிரிவு ரெயில் சேவையான ராஜ்தானி விரைவுவண்டியில் உள்ள வசதிகளை விட இது சிறப்பாக இருக்கும் வகையில், இதன் வடிவமைப்பு திட்டமிடப்பட்டுள்ளது.

    அடுத்த வருடம் பிப்ரவரி மாதவாக்கில் சோதனை ஓட்டத்திற்கு இது விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    • முதன்முறையாக 10 மாத குழந்தைக்கு இந்திய ரெயில்வேயில் பணி வழங்கப்பட்டுள்ளது.
    • குழந்தை 18 வயதை பூர்த்தி செய்ததும் சுய விருப்பத்தின் அடிப்படையில் பணிக்கு சேரலாம்.

    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேந்திரகுமார் விலாய் பகுதியில் ரெயில்வே ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த வாரம் வாகன விபத்தில் ராஜேந்திரகுமாரும், அவரது மனைவியும் உயிரிழந்தனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக இவர்களது 10 மாத குழந்தை ராதிகா யாதவ் உயிர் பிழைத்தது.

    இந்நிலையில், ரெயில்வே விதிகளின் படி ராஜேந்திரகுமாரின் குடும்பத்திற்கு ராய்ப்பூர் ரெயில்வே கோட்டம் அனைத்து உதவிகளையும் செய்தது. தற்போது பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வரும் 10 மாத குழந்தையான ராதிகா யாதவுக்கு தன் தந்தையின் பணி வழங்கப்பட்டு உள்ளது.

    சிறிய குழந்தை என்பதால் அதன் கைரேகையைப் பதிவுசெய்து பணி நியமனம் உறுதிபடுத்தப்பட்டது. குழந்தை 18 வயதை பூர்த்தி செய்ததும், சுய விருப்பத்தின் அடிப்படையில் பணிக்கு சேரலாம் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • போபால் சதாப்தி ரெயிலில் பயணம் செய்த ஒரு பயணி தனக்கு வழங்கப்பட்ட பில்லை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்
    • உணவை முன்பதிவு செய்யாமல், பயணத்தின்போது வாங்கினால் ரூ.50 சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும் என விளக்கம்

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் ஓடும் தொலை தூர ரெயில்களில் பயணிகளுக்கு உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன. ஐஆர்சிடிசி எனப்படும் இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் சார்பில் இந்த உணவகங்கள் நிர்வகிக்கப்படுகின்றன. அவர்கள் மூலம் அமர்த்தப்படும் கேண்டீன் உரிமையாளர்களுக்கே, ரெயில்களில் உணவு சமைத்து விற்பனை செய்வதற்கான ஒப்பந்தம் வழங்கப்படுகிறது.

    இந்நிலையில், ரெயில் பயணத்தின் போது ஒரு கப் டீ குடிப்பதற்கு ஒரு பயணி 70 ரூபாய் செலுத்திய தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சதாப்தி ரெயிலில்தான் இந்த அளவுக்கு காஸ்ட்லியான டீ விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    கடந்த 28ம் தேதி டெல்லி-போபால் இடையே இயக்கப்படும் போபால் சதாப்தி ரெயிலில் பயணம் செய்த ஒரு பயணி, டீ வாங்கி அருந்தி உள்ளார். டீ விலை 20 ரூபாய், சேவை வரி 50 ரூபாய் என மொத்தம் 70 ரூபாய்க்கு பில் கொடுத்துள்ளனர். அந்த தொகையை செலுத்திய பயணி, தனக்கு வழங்கப்பட்ட பில்லை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், '20 ரூபாய் மதிப்புள்ள தேநீருக்கு 50 ரூபாய் ஜிஎஸ்டி. மொத்தத்தில் ஒரு டீ விலை 70 ரூபாய். இது ஒரு அற்புதமான கொள்ளை அல்லவா?" என ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியிருந்தார்.

    இந்த பதிவு வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களையும், எதிர்ப்பையும் பதிவு செய்தனர். சிலர் அந்த பயணி வெளியிட்ட தகவலில் ஜிஎஸ்டி என்ற தகவல் தவறு என்றும், அது சேவை வரி என்றும் திருத்தினர். எனினும், ஒரு கப் டீக்கு 50 ரூபாய் சர்வீஸ் சார்ஜ் என்பது அதிகம் என்று பலர் பதிவிட்டனர். ஆனால் அதிக கட்டணம் எதுவும் வசூலிக்கவில்லை என ரெயில்வே அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    ஒரு கப் டீக்கு 70 ரூபாய் வசூலித்ததற்கான காரணம் குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

    வாடிக்கையாளரிடமிருந்து கூடுதல் பணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை. இந்திய ரெயில்வேயால் 2018இல் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், ராஜ்தானி அல்லது சதாப்தி போன்ற ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகள், முன்கூட்டியே உணவை முன்பதிவு செய்யாமல், பயணத்தின்போது டீ, காபி அல்லது உணவை ஆர்டர் செய்து வாங்கினால் ஒவ்வொரு உணவுக்கும் ரூ.50 சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது ஒரு கப் டீயாக இருந்தாலும் சரி.

    இதற்கு முன்பு ராஜ்தானி அல்லது சதாப்தி போன்ற ரெயில்களில் உணவு சேவை கட்டாயமாக இருந்தது, ஆனால் பின்னர் அது விருப்ப தேர்வாக மாற்றப்பட்டது. அதாவது, பயணிகள் விரும்பினால், அந்த ரெயில்களில் உணவு மற்றும் குளிர்பானங்களை வாங்க மறுக்கலாம். டிக்கெட்டுக்கு மட்டுமே பணம் செலுத்தினால் போதும், உணவு சேவைக்கு வழங்கவேண்டியதில்லை.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 12 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்வதற்கான வரம்பை 24 ஆகவும் அதிகரிக்க இந்தியன் ரெயில்வே முடிவு செய்துள்ளது.
    • ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலி மூலமாக ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான வரம்பு அதிகரிக்க உள்ளது.

    புதுடெல்லி:

    ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலி மூலமாக ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது ஆதார் இணைக்கப்படாத பயனர் கணக்கு மூலமாக ஒரு மாதத்திற்கு அதிகபட்சமாக 6 டிக்கெட்டுகளும், ஆதார் இணைக்கப்பட்ட பயனர் கணக்கு மூலமாக 12 டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்வதற்கான உச்ச வரம்பாக இருந்தது.

    இந்நிலையில், பயணிகளுக்கு வசதியாக இந்த வரம்பு அதிகரிப்பட இருப்பதாக இந்தியன் ரெயில்வே அறிவித்துள்ளது.

    அதன்படி, ஆதார் இணைக்கப்படாத பயனர் கணக்கு மூலமாக ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 6 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்வதற்கான வரம்பை 12 ஆகவும் ஆதாருடன் இணைக்கப்பட்ட பயனர் கணக்கு மூலம் ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 12 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்வதற்கான வரம்பை 24 ஆகவும் அதிகரிக்க இந்தியன் ரெயில்வே முடிவு செய்துள்ளது.

    முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டில் உள்ள பயணிகளில் ஒருவர் ஆதார் மூலம் சரிபார்க்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    ×