search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தர்மேந்திர பிரதான்
    X
    தர்மேந்திர பிரதான்

    ஓஎன்ஜிசியை தனியாருக்கு விற்கவில்லை- பெட்ரோலிய மந்திரி உறுதி

    அரசுக்கு சொந்தமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தை (ஓ.என்.ஜி.சி.) தனியாருக்கு விற்பனை செய்யவில்லை என பெட்ரோலிய மந்திரி தர்மேந்திர பிரதான் மாநிலங்களவையில் உறுதிபட தெரிவித்தார்.
    புதுடெல்லி :

    மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ஓ.என்.ஜி.சி.) தனியாருக்கு விற்பனை செய்யப்படுகிறதா? என பாராளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர்கள் சிலர் கேள்வி எழுப்பினர்.

    இதற்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயுத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் பதிலளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    இயற்கை வளங்கள் தொடர்பாக நம்மிடம் 2 சவால்கள் இருக்கின்றன. ஒன்று நம்மிடம் எவ்வளவு வளங்கள் உள்ளன? என மதிப்பிடுவது. மற்றொன்று அவற்றை பணமாக்குவது. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவீதத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நிலையில், சொந்த நாட்டு இயற்கை வளத்தை பணமாக்கும் தேவை இருக்கிறது.

    அதன்படி ஓ.என்.ஜி.சி.யால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சில எண்ணெய் வயல்களை வெளிப்படையான ஏலமுறை மூலம் அரசு பொதுவெளியில் வழங்குகிறது. இதன் மூலம் எண்ணெய் அதிகமாக உற்பத்தி செய்யப்படுவதுடன், அரசுக்கும் அதிக வருமானம் கிடைக்கும். அதன்படி நாங்கள் வெறும் பணமாக்கலில் மட்டுமே ஈடுபட்டு உள்ளோம்.

    மாறாக ஓ.என்.ஜி.சி.யின் பங்குகளை விற்கவோ, அந்த நிறுவனத்தை மொத்தமாக தனியாருக்கு விற்பனை செய்யவோ இல்லை. எனினும் எண்ணெய் உற்பத்தியில் அரசும், தனியாரும் பங்குபெறலாம் என்ற புதிய மாதிரியை அரசு கைக்கொண்டு உள்ளது.

    எரிவாயுத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான்

    இதில் ஓ.என்.ஜி.சி.யும் மறுமுதலீடு செய்ய முடியும். இதைப்போல மற்ற அரசு நிறுவனங்களும் முதலீடு செய்யலாம். மேலும் உலகம் முழுவதும் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்களும் இதில் முதலீடு செய்யலாம்.

    இவ்வாறு தர்மேந்திர பிரதான் கூறினார்.

    இதைப்போல ஓ.என்.ஜி.சி. மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலிய கார்பரேஷன் லிமிடெட் (எச்.பி.சி.எல்.) தொடர்பான மற்றொரு கேள்விக்கு பதிலளித்த பிரதான், ‘கடந்த காலங்களில் உற்பத்தியை மட்டுமே ஓ.என்.ஜி.சி. செய்து வந்தது. ஆனால் ஓ.என்.ஜி.சி. மற்றும் எச்.பி.சி.எல்.க்கு இடையேயான ஒத்திசைவை கொண்டுவந்ததன் மூலம், உலகின் முன்னணி 20 நிறுவனங்களில் ஒன்றாக நம்மை நாமே நிறுவப்பட முடிந்தது. இதன் சந்தை மதிப்பும் உயர்ந்துள்ளது. இது முற்றிலும் நாட்டு நலன் கருதி எடுக்கப்பட்ட ஒரு கார்பரேட் முடிவு ஆகும்’ என்று தெரிவித்தார்.

    அரசின் முடிவுகள் ரகசியமானவை அல்ல என்று கூறிய பிரதான், நாட்டின் எரிபொருள் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கடந்த பட்ஜெட்டில் நிதி மந்திரி கூறியிருந்ததாகவும், அதன் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
    Next Story
    ×