search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரசின் அடுத்த தலைவரை கட்சிதான் முடிவு செய்யும் - ராகுல் காந்தி தகவல்
    X

    காங்கிரசின் அடுத்த தலைவரை கட்சிதான் முடிவு செய்யும் - ராகுல் காந்தி தகவல்

    காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவரை கட்சிதான் முடிவு செய்யும் எனவும், இதில் நான் தலையிடமாட்டேன் என்றும் ராகுல் காந்தி கூறினார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. அந்த கட்சியால் வெறும் 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இந்த தோல்வி குறித்து ஆய்வு செய்வதற்காக நடந்த கட்சியின் காரியக்கமிட்டி கூட்டத்தில், கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்தார். ஆனால் அவரது ராஜினாமாவை காரியக்கமிட்டி உறுப்பினர்கள் ஏற்கவில்லை. மாறாக கட்சியை அனைத்து மட்டத்திலும் மறுசீரமைப்பதற்கான அதிகாரத்தை ராகுல் காந்திக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றினர். எனினும் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவது என்ற முடிவில் ராகுல் காந்தி உறுதியாக இருக்கிறார். எனவே கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

    இந்த நிலையில் நேற்று பாராளுமன்ற கூட்டத்தில் பங்கேற்று விட்டு வெளியே வந்த ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள் பேட்டி எடுத்தனர். அப்போது கட்சியின் அடுத்த தலைவர் யார்? என கேள்வி எழுப்பினர்.

    இதற்கு ராகுல் காந்தி பதிலளிக்கையில், ‘காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவரை கட்சிதான் முடிவு செய்யும். இதில் நான் தலையிடமாட்டேன்’ என்று தெரிவித்தார்.

    இதைப்போல ரபேல் ஒப்பந்த விவகாரம் குறித்த மற்றொரு கேள்விக்கு அவர் பதிலளிக்கும்போது, ‘ரபேல் விவகாரத்தில் திருட்டு நடந்துள்ளது என்ற எனது நிலைப்பாட்டில் நான் உறுதியாக இருக்கிறேன்’ என்று கூறினார்.

    ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என ராகுல் காந்தி கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×