search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாரணாசியைப் போல் கேரளாவும் எனக்கு நெருக்கமானது - மோடி நெகிழ்ச்சி
    X

    வாரணாசியைப் போல் கேரளாவும் எனக்கு நெருக்கமானது - மோடி நெகிழ்ச்சி

    பா.ஜ.க.வுக்கு ஒரேயொரு எம்.பி.யை அளிக்க தவறினாலும் வாரணாசியைப் போல் கேரளாவும் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானதுதான் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
    திருவனந்தபுரம்:

    பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றிப் பெற்றதையடுத்து, மத்தியில் மீண்டும் இரண்டாவது முறையாக பிரதமர் மோடி ஆட்சி அமைத்துள்ளார். 

    கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற குருவாயூர் கோவிலில் துலாபாரம் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்ய பிரதமர் மோடி இன்று காலை கொச்சி வந்தடைந்தார். 

    கொச்சி விமான நிலையத்தில் பிரதமர் மோடியை கேரளா ஆளுநர் சதாசிவம், மத்திய மந்திரி முரளிதரன், மற்றும் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் ஆகியோர் வரவேற்றனர். கோவிலில் தரிசனம் செய்த பின்னர், குருவாயூரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மோடி பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது வாக்காளர்களின் மனநிலையை யூகிக்க இயலாத அரசியல் பண்டிதர்கள் கணித்தவற்றை எல்லாம் மீறி பா.ஜ.க.வுக்கு மக்கள் அமோக ஆதரவை அளித்தனர். இதற்காக நான் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

    இந்த தேர்தலில் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றிய கேரள வாக்காளர்களுக்கும் நன்றி. இந்த தேர்தலின் மூலம் மக்கள்தான் கடவுள் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க.வினர் தேர்தல் அரசியலுக்காக இருப்பவர்கள் அல்ல. ஆண்டின் 365 நாட்களும் மக்களுக்கு சேவையாற்ற இருப்பவர்கள்.

    நாங்கள் ஆட்சி அமைப்பதற்காக வரவில்லை. வலிமை மிக்கதொரு நாட்டை உருவாக்கவும், உலக அரங்கில் இந்தியாவுக்கு உரித்தான இடம் கிடைக்க தவம் இயற்றுவதற்காகவும் நாங்கள் வந்திருக்கிறோம்.



    பா.ஜ.க.வுக்கு ஒரேயொரு எம்.பி.யை கூட தராத நிலையில் தேர்தல் முடிந்ததும் முதல் பயணமாக நான் கேரளாவை தேர்ந்தெடுத்தது ஏன்? என சிலர் வியப்படையலாம். என்னைப் பொருத்தவரை எனது பாராளுமன்ற தொகுதியான வாரணாசியைப் போல் கேரளாவும் எனது மனதுக்கு மிகவும் நெருக்கமானது.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் எல்லோருக்குமே பொதுவானவன். தேர்தல் ஜனநாயகத்தில் வெற்றி பெற்றவர் தன்னை நம்பியிருக்கும் 130 கோடி மக்களையும் கவனிக்க கடமைப்பட்டவர். 

    கேரளாவில் நிபா வைரஸ் தாக்கத்தை எதிர்கொள்ள மாநில அரசுடன் மத்திய அரசு தோளோடு தோளாக துணை நின்று தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×