search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவில் நிபா காய்ச்சல் மீண்டும் பரவியது எப்படி?- மருத்துவக்குழு ஆய்வுக்கு அரசு உத்தரவு
    X

    கேரளாவில் நிபா காய்ச்சல் மீண்டும் பரவியது எப்படி?- மருத்துவக்குழு ஆய்வுக்கு அரசு உத்தரவு

    கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பரவியது எப்படி என்பதை கண்டறிய வேண்டும் என்று மருத்துவக்குழு ஆய்வுக்கு முதல்-மந்திரி பினராயி விஜயன் உத்தரவிட்டு உள்ளார்.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த ஆண்டு ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் பரவியதில் 17 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் இந்த ஆண்டும் கேரளாவில் மீண்டும் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் பரவி உள்ளது.

    கொச்சியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் பாதிப்புடன் எர்ணாகுளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் நெருங்கி பழகியவர்கள், சிகிச்சை அளித்த நர்சுகள் என்று 7 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதால் அவர்களை தனி வார்டில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் அந்த 7 பேரின் ரத்த மாதிரிகளும் புனேயில் உள்ள பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த பரிசோதனை முடிவுகளில் அவர்களுக்கு ‘நிபா’ வைரஸ் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது. ஆனாலும் காய்ச்சல் பாதிப்புக்கு அவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    திருவனந்தபுரம், எர்ணாகுளம், திருச்சூர் பகுதியை சேர்ந்த 355 பேர் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளனர்.

    எர்ணாகுளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு செல்லும் ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பு கவசம் அணிவிக்கும் பாதுகாவலர்.

    இந்த நிலையில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கேரளாவில் மீண்டும் ‘நிபா’ வைரஸ் பரவியது எப்படி என்பதை கண்டறிய உத்தரவிட்டு உள்ளார். கேரள கால்நடைத்துறை, வனத்துறை, சுகாதாரத்துறை ஆகிய 3 துறையினரும் சேர்ந்து இதுபற்றி ஆய்வு செய்ய அவர் கேட்டுக்கொண்டு உள்ளார்.

    இதைத்தொடர்ந்து அந்த துறைகளின் அதிகாரிகள் அதற்கான பணியை தொடங்கி உள்ளனர். கேரள சுகாதாரத்துறை மந்திரி சைலஜா கூறியதாவது:-

    கேரளாவில் ‘நிபா’ வைரஸ் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே பொது மக்கள் பீதி அடைய வேண்டாம். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 7 பேரின் ரத்த மாதிரிகளும் பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களுக்கு ‘நிபா’ வைரஸ் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது. திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு காய்ச்சல் அறிகுறியுடன் வந்த 2 பேரின் ரத்த மாதிரி புனேவுக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு உள்ளது.

    ‘நிபா’ வைரஸ் காய்ச்சலுக்கான மருந்து ஆஸ்திரேலியாவில் இருந்து வரவழைக்கப்பட்டு உள்ளது. அதை நோயாளிகளுக்கு எப்படி கொடுத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது பற்றி கேரளாவில் உள்ள 2 டாக்டர்களுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவினர் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×