search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதியில் டாக்டர் உள்பட 7 பேருக்கு பன்றிக் காய்ச்சல்-பெண் பலி
    X

    திருப்பதியில் டாக்டர் உள்பட 7 பேருக்கு பன்றிக் காய்ச்சல்-பெண் பலி

    திருப்பதியில் டாக்டர் உள்பட 7 பேருக்கு பன்றிக் காய்ச்சல் தாக்கம் இருந்த நிலையில், ஒரு பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    திருமலை:

    திருப்பதி பகுதியில், ‘ஸ்வைன் புளு’ என்கிற பன்றி காய்ச்சல் பரவி வருகிறது. திருப்பதியை சுற்றியுள்ள பகுதியில் 7 பேருக்கு பன்றி காய்ச்சல் தாக்கம் இருந்தது.

    அதில் 3 பேர் திருப்பதி சிம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். கடந்த 5 நாட்களுக்கு முன்பு கங்காதரநெல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு திடீரென காய்ச்சல், இருமல் ஏற்பட்டது.

    அவரை, குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருப்பதி சிம்ஸ் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு, அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது.

    அதில் அவருக்கு பன்றி காய்ச்சல் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது. அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    மேலும் திருப்பதி சிம்ஸ் ஆஸ்பத்திரியில் உதவி மருத்துவ பேராசிரியராக பணியாற்றி வரும் ஒரு டாக்டருக்கும் பன்றி காய்ச்சல் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் எதிரொலியாக திருப்பதியில் சுகாதார நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சிம்ஸ் ஆஸ்பத்திரியில் பன்றிக் காய்ச்சலுக்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக திருப்பதி ரெயில் நிலைய மேலாளர் சுபோத்மித்ரா கூறுகையில், ‘‘திருப்பதி வழியாக பல்வேறு ரெயில்களில் பல மாநிலங்களை சேர்ந்த பொதுமக்கள் பயணம் செய்வதால், பலருக்கு பன்றி காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளது. பொதுமக்கள் நெருங்கி பழகும்போதும், பேசும்போதும் ஒருவரின் எச்சில் மற்றவர் மீது படக்கூடாது. கைக்குலுக்கும்போதும் பன்றி காய்ச்சல் தொற்றுப் பரவ வாய்ப்புள்ளது.

    ரெயிலில் பயணம் செய்து விட்டும், வெளியில் சென்று வந்தாலும், மற்றவர்களுக்கு அடிக்கடி கைக் குலுக்கினாலும் உடனே கையை கழுவ வேண்டும். தும்மல் வந்தால் கைக்குட்டையால் மூக்கை மூடி கொள்ள வேண்டும். பன்றி காய்ச்சல் பரவாமல் தடுக்க ரெயில் நிலையத்தில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார். #Swineflu #Swinefludeath

    Next Story
    ×