search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுதந்திர தின விழாவில் தாக்குதல் நடத்த 4 பாக்.பயங்கரவாதிகள் டெல்லியில் ஊடுருவல் - உளவுத்துறை எச்சரிக்கை
    X

    சுதந்திர தின விழாவில் தாக்குதல் நடத்த 4 பாக்.பயங்கரவாதிகள் டெல்லியில் ஊடுருவல் - உளவுத்துறை எச்சரிக்கை

    சுதந்திர தின விழாவில் தாக்குதல் நடத்த 4 பாக்.பயங்கரவாதிகள் டெல்லியில் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. #IndependenceDay

    புதுடெல்லி:

    நாட்டின் 72-வது சுதந்திர தினம் நாளை (புதன் கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.

    டெல்லியில் பிரதமர் மோடியும், மாநில தலைநகரங்களில் முதல்-மந்திரிகளும் பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்ற உள்ளனர்.

    இந்தியா தனது சுதந்திர தினத்தை கம்பீரமாக, கோலாகலமாக கொண்டாடுவது பாகிஸ்தான் பயங்கரவாதிகளிடம் எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்துகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின கொண்டாட்டங்களை சீர் குலைக்க முயற்சி செய்வதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

    இந்த ஆண்டும் காஷ்மீரில் சுதந்திர தின கொண்டாட்டத்தை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டி இருப்பதாக சமீபத்தில் உளவுத்துறை எச்சரித்தது. இதனால் காஷ்மீரிலும், எல்லைப் பகுதியிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் சுதந்திர தினத்தன்று மிகப்பெரிய நாசவேலை செய்யும் திட்டத்துடன் 4 பயங்கரவாதிகள் டெல்லிக்குள் ஊடுருவி இருக்கும் அதிர்ச்சி தகவலை உளவுத்துறையினர் வெளியிட்டுள்ளனர். அந்த 4 பயங்கரவாதிகளும் பாகிஸ்தானில், அந்த நாட்டு ராணுவத்தின் ஆதரவுடன் செயல்படும் ஜெய்ஷ்-இ- முகம்மது எனும் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

    அந்த 4 பயங்கரவாதிகளும் டெல்லியில் நாளை மக்கள் அதிகம் கூடும் இடங்களில் குண்டு வெடிப்புகள் நடத்தவும், தற்கொலை தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. டெல்லியில் உள்ள சில ஆதரவாளர்கள் உதவியுடன் 4 பயங்கரவாதிகளும் பதுங்கி இருப்பதாக தெரிகிறது.

    இதற்கிடையே காலிஸ் தான் பயங்கரவாதிகளாலும் சுதந்திர தின கொண்டாட்டத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. நாளை சுதந்திர தின கொண்டாட்டம் நடக்கும் போது, காலிஸ் தான் பயங்கரவாதிகள் பாராளுமன்றம் மீது தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி இருப்பதாக உளவுத்துறை கண்டுபிடித்துள்ளது.

    இவை தவிர வேறு சிலபயங்கரவாத இயக்கங்களும் டெல்லியில் ஊடுருவ முயற்சி செய்வதையும் உளவுத்துறை கண்டறிந்துள்ளது. இவை பற்றி மத்திய உள்துறையிடம் தகவல் அளித்து உளவுத்துறை எச்சரித்து உஷார்படுத்தியுள்ளது.

    இதையடுத்து டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாகன சோதனை தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.

    டெல்லியில் சுதந்திர தின கொண்டாட்டம் நடக்கும் பகுதியில் 7 அடுக்கு பாதுகாப்பு செய்யப்பட்டு இருக்கிறது. டெல்லிக்குள் ஊடுருவிய 4 பயங்கரவாதிகளும் காஷ்மீர் வழியாக வந்து இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே அவர்களை பிடிக்க டெல்லி முழுக்க பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள். #IndependenceDay

    Next Story
    ×