search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலில் காங். தலைமையை ஏற்க தயாராகும் மாயாவதி, அகிலேஷ்
    X

    பாராளுமன்ற தேர்தலில் காங். தலைமையை ஏற்க தயாராகும் மாயாவதி, அகிலேஷ்

    உத்தரபிரதேச பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான மெகா கூட்டணியில் இணைய மாயாவதி, அகிலேஷ் யாதவ் இருவரும் சம்மதம் தெரிவித்திருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. #ParliamentElection2019
    லக்னோ:

    பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு மத்தியில் தேர்தல் நடைபெற இருக்கிறது. முன் கூட்டியே தேர்தல் நடத்தப்படலாம் என்றும், பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படலாம் என்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    அரசியல் கட்சிகள் தேசிய அளவிலும், மாநில அளவிலும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. மத்தியில் பா.ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ் மெகா கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக மாநில கட்சிகளுடன் காங்கிரஸ் தலைவர்கள் பேச்சு நடத்தி வருகிறார்கள்.

    உத்தரப்பிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியும் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தன. இது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

    இதுபற்றி சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆக்ராவில் நிருபர்களிடம் கூறுகையில், சமாஜ்வாடி பகுஜன் சமாஜ் கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இது மெகா கூட்டணியாக மாறும். காங்கிரஸ் கட்சி எங்கள் நண்பன் என்றார்.


    கூட்டணி தொடர்பாக மாயாவதி, அகிலேஷ் யாதவ் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த கட்டமாக காங்கிரசின் மெகா கூட்டணியில் இணையும் என்றும் காங்கிரஸ் தலைமை ஆதரிக்கும் என்றும் இந்த இரு கட்சி நிர்வாகிகளும் நம்பிக்கை தெரிவித்தனர்.

    இதில் முதல் கட்டமாக உத்தரப்பிரதேசத்தில் பாராளுமன்ற தேர்தலில் அமேதி, ரேபரேலி தொகுதியில் ராகுல்காந்தி, சோனியா காந்தி ஆகியோரை எதிர்த்து வேட்பாளர்களை நிறுத்துவதில்லை என்று முடிவு எடுத்துள்ளன.

    மற்ற தொகுதிகள் ஒதுக்கீடு பற்றி தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மேலும் ராஷ்டீரிய லோக் தளம், நிஷாத் கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்க சமாஜ்வாடி கட்சி ஒப்புக்கொண்டுள்ளது.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் அகிலேஷ் யாதவ், முலாயம்சிங் யாதவ், மாயாவதி ஆகியோர் போட்டியிட முடிவு செய்துள்ளனர். மாயாவதி 2004-ம் ஆண்டுக்குப்பின் பாராளுமன்ற மேல்-சபை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தார். தற்போது 10 ஆண்டுகளுக்கு பின்பு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #ParliamentElection2019 #Congress #Mayawati #AkhileshYadav
    Next Story
    ×