search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு 2 தொகுதிகள் தான் தருவோம் - சமாஜ்வாதி பிடிவாதம்
    X

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு 2 தொகுதிகள் தான் தருவோம் - சமாஜ்வாதி பிடிவாதம்

    பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இரு தொகுதிகளுக்கு மேல் தர முடியாது என சமாஜ்வாதி கட்சி தீர்மானித்துள்ளது.
    லக்னோ:

    2019-ம் ஆண்டில் நடைபெறவுள்ள தேர்தலில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து மத்தியில் இருந்து பா.ஜ.க. ஆட்சியை தூக்கி எறிய திட்டமிட்டுள்ளன. இதற்காக, மாநில கட்சிகளான திரிணாமுல் காங்கிரஸ், தெலுங்கு தேசம், ராஷ்டரிய ஜனதா தளம், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் இப்போதே கூட்டணி தொடர்பாக பேசி வருகின்றன.

    இந்நிலையில், எதிர்வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு இரு தொகுதிகளுக்கு மேல் தர முடியாது என சமாஜ்வாதி கட்சி தீர்மானித்துள்ளது.

    கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைத்தபோது செய்து கொண்ட தொகுதி உடன்பாட்டு விகிதாச்சாரத்தில் தற்போது தொகுதிகளை ஒதுக்க இயலாது. காரணம், உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பிரதான கட்சியான பகுஜன் சமாஜ் மற்றும் ராஷ்டரிய லோக்தளம் ஆகிய கட்சிகளுக்கும் இந்த முறை தொகுதிகளை ஒதுக்கித்தர வேண்டியுள்ளது.

    மேலும், முஸ்லிம்கள், பிற்படுத்தப்பட்டோர், தலித் மக்களின் 85 சதவீத வாக்கு வங்கியை மையமாக வைத்து தொகுதி பங்கீடு அமைய வேண்டும்.

    வழக்கமாக சமாஜ்வாதி கட்சிக்கு வாக்களிக்கும் அடித்தட்டு வாக்காளர்கள் கூட மேல்தரப்பு மக்கள் கட்சி என அறியப்படும் காங்கிரசுடன் கடந்த சட்டசபை தேர்தலில் கூட்டணி வைத்ததால் தங்களை ஆதரிக்கவில்லை என சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தற்போது கருதுகிறார்.

    எனவே, காங்கிரஸ் கட்சிக்கு ராசியான ரேபரேலி, அமேதி ஆகிய இரு தொகுதிகளை தவிர வேறெந்த தொகுதியையும் இந்த பாராளுமன்ற தேர்தலில் விட்டுத்தர முடியாது என கட்சி மேலிடம் தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் மேலிட தலைவர் இன்று தெரிவித்துள்ளார்.

    இந்த தொகுதி உடன்பாட்டுக்கு காங்கிரஸ் கட்சி ஒப்புக்கொள்ளாத பட்சத்தில் சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி, ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதிகளில் மட்டும் போட்டி வேட்பாளர்களை நிறுத்த மாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டார். #2019polls #SPCongresss #upseatsharing
    Next Story
    ×