search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்யுமா மத்திய அரசு? காவிரி வழக்கு இன்று மீண்டும் விசாரணை
    X

    வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்யுமா மத்திய அரசு? காவிரி வழக்கு இன்று மீண்டும் விசாரணை

    காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு செயல் திட்டத்தை மத்திய அரசு இன்று தாக்கல் செய்யுமா? என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் இது தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. #CauveryMangementBoard #CauveryDraftScheme
    புதுடெல்லி:

    காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் செயல் திட்டத்தை (ஸ்கீம்) உருவாக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இதற்காக கெடுவும் விதித்தது. ஆனால், தீர்ப்பில் உள்ள ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை வாரியமா அல்லது குழுவா? என்பதில் குழப்பம் ஏற்பட்டதால், விளக்கம் கேட்டு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியது. மேலும் கர்நாடக தேர்தலை கருத்தில் கொண்டு செயல் திட்டத்தை உருவாக்க அவகாசமும் கேட்டது.

    இதையடுத்து தீர்ப்பை அமல்படுத்தாத மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், தீர்ப்பை அமல்படுத்துவது தொடர்பாக மே 3-ம் தேதிக்குள் வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது.

    உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி வரைவு செயல் திட்டம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்றன. ஆனால் அது முழுமை பெறவில்லை என கூறப்படுகிறது. எனவே, வரைவு செயல் திட்டம் தயாரிப்பதற்கு கூடுதல் அவகாசம் வழங்கக் கோருவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் நேற்று இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை உடனடியாக  விசாரிக்கும்படி மத்திய அரசின் வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். ஆனால், மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், காவிரி செயல் திட்ட வழக்கு 3-ம் தேதி விசாரணைக்கு வரும்போது இந்த மனுவை விசாரிப்பதாக தெரிவித்தது.



    இந்த பரபரப்பான சூழ்நிலையில், காவிரி செயல் திட்டம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. அப்போது மத்திய அரசு சார்பில் வரைவு செயல் திட்ட அறிக்கை தாக்கல் செய்ய வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது. எனவே, கூடுதல் அவகாசம் கோரும் மனு மீது இன்று உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி உரிய உத்தரவுகளை பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. #CauveryIssue  #CauveryMangementBoard #CauveryDraftScheme
    Next Story
    ×