search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் தொழில் தொடங்க முனைவோருக்கு ராஜ்பவன் கதவு திறந்தே இருக்கும் - கவர்னர் பேச்சு
    X

    தமிழகத்தில் தொழில் தொடங்க முனைவோருக்கு ராஜ்பவன் கதவு திறந்தே இருக்கும் - கவர்னர் பேச்சு

    தமிழகத்தில் தொழில் தொடங்க முனைவோருக்கு ராஜ்பவன் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும் என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசினார்.
    சென்னை:

    ஜெயின் சர்வதேச வர்த்தக அமைப்பு (ஜிடோ) சார்பில் சென்னை பெரம்பூரில் உள்ள எஸ்.பி.ஆர். சிட்டி வளாகத்தில் கருத்தரங்கு மற்றும் வர்த்தக கண்காட்சி நேற்று தொடங்கியது. இதனை கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசியதாவது:-

    தமிழகத்தில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு தொழில் தொடங்குவதற்கு சாத்தியமான சூழல் தற்போது அமைந்துள்ளது. அதற்கான வளங்களும் மிகுதியாகவே இருக்கின்றன. எனவே தொழில் தொடங்க உள்ளோர் எப்போது வேண்டுமானாலும் என்னை அணுகலாம். தொழில் முனைவோருக்காக ராஜ் பவன் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்.

    நான், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் நல்ல நட்பில் இருக்கிறேன். இதனால் நாங்கள் கலந்து பேசி தொழில் முனைவோருக்கு உதவுவோம். ஒவ்வொருவரும் எளிமையாகவும், நேர்மையாகவும் வாழ வேண்டும். சைவ உணவு வகைகளே உடலுக்கு ஆரோக்கியமான பயன்களை தரும். தொழில் முனைவோர் வர்த்தகத்தை எந்தவித ஒளிவு, மறைவு இன்றி வெளிப்படையாகவே நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-



    தமிழ்நாட்டில் ஜெயின் சமூகத்தினர் கல்வி வளர்ச்சி பணியில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர். மருத்துவம், ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்குதல் போன்ற சமுதாய பணிகளிலும் தங்களை ஈடுபடுத்தி வருவது பாராட்டுக்கு உரியது. தமிழ்நாட்டில் உள்ள 17 ஜெயின் ஆலயங்களை இந்து சமய அறநிலையத்துறை நன்கு பராமரித்து வருகிறது.

    ஜெயின் சமூகத்தினர் இந்தியாவில் மட்டும் இன்றி, உலகம் முழுவதும் பரவி பல்வேறு தொழில் நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். எனவே அவர்கள் தமிழ்நாட்டில் பெரிய அளவில் முதலீடு செய்து, தொழில் தொடங்க வேண்டும். சட்டம்-ஒழுங்கு முறையாக பராமரிக்கப்பட்டு தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது.

    திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்க ஒற்றை சாளர முறை பராமரிக்கப்படுகிறது. திறமைவாய்ந்த மனித வளங்கள் உள்ளன. அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்க்கும் முதல் 3 மாநிலங்களில் தமிழகம் உள்ளது. தடையில்லா மின்சாரம் உள்ளிட்ட கட்டமைப்புகளும், அனைத்து அம்சங்களும் உள்ளன. சரியான காலத்துக்குள் திட்டத்துக்கான ஒப்புதல் மற்றும் புதுப்பித்தல், குறை தீர்ப்பு போன்றவை வணிக உத்வேக சட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.

    அரசும் வெளிப்படையான முறையில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 2015-ம் ஆண்டு நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். ரூ.2.42 லட்சம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதில் ரூ.62 ஆயிரத்து 738 கோடி முதலீடுகள் பல்வேறு கட்டங்களில் செயலாக்கத்தில் உள்ளன. 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு அடுத்த ஆண்டு ஜனவரி 23, 24-ந்தேதிகளில் நடைபெற உள்ளது. அதில் அனைவரும் பங்கேற்று தமிழகத்தில் உள்ள தொழில் துறையில் முதலீடுகளை செய்ய முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக பன்வாரிலால் புரோகித், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஜெயின் சர்வதேச வர்த்தக அமைப்பு கருத்தரங்கு, மாநாட்டின் சிறப்பு தபால் தலை மற்றும் புத்தகத்தை வெளியிட்டனர்.

    நிகழ்ச்சியில் ஜெயின் சர்வதேச வர்த்தக அமைப்பின் தேசிய தலைவர்கள் மோதிலால் ஓஸ்வால், சாந்திலால் கவார், சென்னை பிரிவு இயக்குனர் அனில் ஜெயின், தலைமை செயலாளர் ஜிதேந்திரா பண்டாரி, அஜய் சஞ்சேட்டி எம்.பி., சேத்தன் கஷ்யாப் எம்.எல்.ஏ. (ரத்லம்), இன்போசிஸ் இணை நிறுவனர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன், சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா உள்பட பலர் பங்கேற்றனர்.

    வர்த்தக கண்காட்சி நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெறுகிறது. 
    Next Story
    ×