search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பட்ஜெட்டில் ஆந்திரா புறக்கணிப்பு - சந்திரபாபு நாயுடு அவசர ஆலோசனை
    X

    பட்ஜெட்டில் ஆந்திரா புறக்கணிப்பு - சந்திரபாபு நாயுடு அவசர ஆலோசனை

    மத்திய பட்ஜெட்டில் ஆந்திர மாநிலத்திற்கு குறிப்பிடத்தக்க நிதி ஒதுக்கீடு, புதிய திட்டங்கள் அறிவிக்கப்படாததால் பா.ஜனதா கூட்டணியை விட்டு விலக முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்த உள்ளார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் நேற்று 2018-2019-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதிமந்திரி அருண்ஜெட்லி தாக்கல் செய்தார்.



    2019-ம் ஆண்டு பொது தேர்தலை மனதில் கொண்டு இந்த பட்ஜெட்டில் விவசாயம், தொழில், கல்வி, சுகாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டிருப்பதாக பரவலான கருத்து எழுந்துள்ளது.

    பாராளுமன்றத்திற்கு அடுத்த ஆண்டு தேர்தல் வருவதாலும் இந்த ஆண்டு 8 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதாலும், அதற்கேற்ப நிதிநிலை அறிக்கையில் மாநிலங்களுக்கு புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அது போலவே பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு புதிய திட்டங்களில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

    கர்நாடகாவில் இன்னும் 3 மாதங்களில் தேர்தல் நடைபெற இருப்பதால் அந்த மாநிலத்திற்கும், பெங்களூர் புறநகர் ரெயில் திட்டம் உள்பட பல திட்டங்கள் கிடைத்துள்ளன. ஆனால் ஆந்திரா மாநிலத்திற்கு குறிப் பிடத்தக்க எந்த திட்டமும் கிடைக்கவில்லை என்ற அதிருப்தி எழுந்துள்ளது.

    இதனால் பா.ஜ.க. கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஒன்றான தெலுங்கு தேசம் கட்சி கடும் கோபமும், ஆவேசமும் அடைந்துள்ளது.

    ஆந்திரா மாநிலம் கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் இரண்டாக பிரிக்கப்பட்டது. அப்போது ஆந்திராவிற்கு வருவாய் இழப்பு ஏற்படுவதால் மத்திய அரசு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து ஆந்திராவிற்கு ரூ.1000 கோடி சிறப்பு நிதி தருவதாக மத்திய அரசு உறுதி அளித்து இருந்தது.

    கடந்த பல மாதங்களாக இந்த சிறப்பு நிதியை ஆந்திரா மாநில அரசு கேட்டு வருகிறது. அதுபோல புதிய திட்டங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றும், ஆந்திரா முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்தார். ஆனால் மத்திய அரசு தரப்பில் இருந்து எந்த ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் மத்திய பொது பட்ஜெட்டில் ஆந்திரா மாநில அரசுக்கு சிறப்பு நிதியும் மற்றும் புதிய திட்டங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியினர் மிகவும் ஆவ லோடு எதிர்பார்த்தனர். ஆனால் பட்ஜெட்டில் ஆந்திரா மாநிலத்திற்கு குறிப்பிடத்தக்க நிதி ஒதுக்கீடு, புதிய திட்டங்கள் அறிவிப்பு எதுவும் செய்யப்படவில்லை.

    இது தெலுங்கு தேசம் எம்.பி.க்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அவர்கள் இதுபற்றி சந்திர பாபு நாயுடுவிடம் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று மாலை அவசரமாக மூத்த அமைச்சர்களை அழைத்து சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினார்.

    அப்போது பா.ஜ.க. அரசு தொடர்ந்து ஆந்திராவையும், தெலுங்கு தேசம் கட்சியையும் புறக்கணித்து வருவதாக அமைச்சர்கள் பலர் தெரிவித்தனர். பா.ஜ.க. அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் இனி செயல்பட வேண்டும் என்றும், தெலுங்கு தேசம் மூத்த தலைவர்கள் வலியுறுத்தினார்கள்.

    அவர்களிடம் விரைவில் புதிய முடிவு எடுக்க இருப்பதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

    அதன் பிறகு டெல்லியில் உள்ள தெலுங்கு தேசம் எம்.பி.களுடன் சந்திரபாபு நாயுடு டெலிகான்பரன்ஸ் முறையில் பேசினார். மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அடுத்த கட்டமாக எத்தகைய நடவடிக்கையில் ஈடுபடலாம் என்று விவாதித்தார்.

    அப்போது சில எம்.பி.க்கள் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகிவிடலாம் என்று கூறினார்கள். சில எம்.பி.க்கள் ஆந்திராவிற்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யாததை கண்டித்து எம்.பி. பதவியில் இருந்து ராஜினாமா செய்யலாம் என்று கூறினார்கள்.

    அவர்களை பொறுமையாக இருக்கும்படி சந்திரபாபு நாயுடு கேட்டுக் கொண்டார்.

    பட்ஜெட்டில் குஜராத், மராட்டியம் மாநிலங்களுக்கு மட்டும் அதிக புதிய திட்டங்கள் கொடுக்கபட்டிருப்பதாக சந்திரபாபு நாயுடு கருதுகிறார். இதை ஆந்திராவுக்கு இழைக்கபட்ட அநீதியாக அவர் மூத்த தலைவர்களிடம் வேதனையுடன் குறிப்பிட்டார்.

    விஜயவாடாவில் நேற்று மாலை தெலுங்கு தேசம் தலைவர்களுடன் உரையாடுகையில், மத்திய அரசு ஆந்திராவை கண்டுக் கொள்வதே இல்லை. எனவே இந்த வி‌ஷயத்தில் நாம் ஏதாவது ஒரு முடிவு எடுத்தாக வேண்டும் என்று கவலையோடு தெரிவித்தார்.

    இதற்கிடையே நாளை மறுநாள் (4-ந் தேதி) தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் கூட்டத்தையும் கட்சியின் உயர்மட்ட குழு கூட்டத்தையும் சந்திரபாபு நாயுடு அவசரமாக கூட்டியுள்ளார்.

    இந்த கூட்டத்தில் பா.ஜ.க.வுடன் உள்ள தொடர்பை துண்டிப்பதை பற்றி ஆலோசிக்கப்படுகிறது. இதில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

    பா.ஜ.க. கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் தெலுங்கு தேசம் கட்சிக்கு பாராளுமன்றத்தில் 16 எம்.பி.க்கள் உள்ளனர். மத்திய மந்திரி சபையில் 2 தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் இடம் பெற்றுள்ளனர்.

    பா.ஜ.க. கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் விலகும் பட்சத்தில் மத்திய மந்திரி சபையில் இருந்தும் தெலுங்கு தேசம் அமைச் சர்கள் பதவி விலகுவார்கள் என்று தெரியவந்துள்ளது.

    ஏற்கனவே பா.ஜ.க. கூட்டணியில் இருந்து சிவசேனா கட்சி விலகி விட்டது. தெலுங்குதேசம் கட்சியும் அடுத்து விலகும் என்று கூறப்படுகிறது.

    இதனால் தென் மாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு மேலும் பின்னடைவு ஏற்படும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. #tamilnews
    Next Story
    ×