என் மலர்
இந்தியா
- விமான நிலையத்தில் தொழுகை நடத்த முன் அனுமதி பெற்றிருந்தார்களா?
- ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்தும் போது அரசு ஆட்சேபனை தெரிவிப்பது ஏன்?
பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின் 2-வது முனையத்தில் ஏராளமான முஸ்லிம்கள் தொழுகை செய்தனர். இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
இது தொடர்பாக பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் விஜய்பிரசாத் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "உயர் பாதுகாப்பு மண்டலத்தில் இதுபோன்ற செயல் எவ்வாறு அனுமதிக்கப்பட்டது. இது தொடர்பாக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சர் பிரியங்க் கார்கே ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும்.
மேலும் விமான நிலையத்தில் தொழுகை நடத்த முன் அனுமதி பெற்றிருந்தார்களா? மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து உரிய அனுமதி பெற்ற பிறகு ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்தும் போது அரசு ஆட்சேபனை தெரிவிப்பது ஏன்? ஆனால் தடை செய்யப்பட்ட பொதுப்பகுதியில் இது போன்ற செயல்களை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்? என்று கூறி தொழுகை நடத்திய போட்டோ மற்றும் வீடியோவை பகிர்ந்தார்.
- சாதி, மத அடையாளங்களை விட்டுவிட்டு இந்த அமைப்பில் இணையலாம்.
- எந்த ஒரு கட்சி மீதும் தங்களுக்கு தனி ஈடுபாடு கிடையாது
இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் ஆர்எஸ்எஸ்-ல் இணையலாம் என்று ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத் பேசியுள்ளார்.
பெங்களூருவில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் மோகன் பகவத் இதனை தெரிவித்தார்.
அந்நிகழ்ச்சியில் பேசிய மோகன் பகவத், "ஆர்எஸ்எஸ்-ல் பிராமணர், வேறு எந்த சாதியினர், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் யாரும் குறிப்பாக அனுமதிக்கப்படுவதில்லை. இந்துக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் RSS-ல் இணையலாம். அவர்கள் தங்களது சாதி, மத அடையாளங்களை விட்டுவிட்டு இந்த அமைப்பில் இணையலாம். எந்த ஒரு கட்சி மீதும் தங்களுக்கு தனி ஈடுபாடு கிடையாது என்றும் தேசிய கொள்கைகளை ஆதரிக்கும் கட்சிக்கு வாக்களிப்போம்" என்று தெரிவித்தார்.
- அத்வானிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சசிதரூரின் டுவீட் சர்ச்சையாகி உள்ளது.
- சசிதரூரின் மீது காங்கிரஸ் அதிருப்தி அடைந்துள்ளது.
பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க அரசின் நடவடிக்கைகளை காங்கிரசின் முக்கிய தலைவராக இருந்து கொண்டு சசிதரூர் எம்.பி. அடிக்கடி பாராட்டுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அந்த வகையில் பா.ஜ.க, மூத்த தலைவர் அத்வானிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சசிதரூரின் டுவீட் சர்ச்சையாகி உள்ளது.
நேரு, இந்திரா காந்தியை மேற்கோள்காட்டி அத்வானியை புகழ்ந்தார். அத்வானியின் நீண்ட கால சேவையை ஒரு அத்தியாயத்தை கொண்டு தீர்மானிப்பது நியாயமற்றது. அவருக்கும் அதே மரியாதையை நாம் தர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
சசிதரூரின் இந்த கருத்து தொடர்பாக அவர் மீது காங்கிரஸ் அதிருப்தி அடைந்துள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் ஊடக துறை தலைவர் பவன் கேரா கூறும்போது,"இது சசிதரூரின் தனிப்பட்ட கருத்து. அவர் எப்போதும் போலவே தனக்காக பேசுகிறார்.
அவரது சமீபத்திய அறிக்கையில் இருந்து காங்கிரஸ் விலகி இருக்கிறது. காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினராக இருந்து கொண்டு அவர் தொடர்ந்து இப்படி செயல்டுவது சரியானதல்ல" என்றார்.
- அமெரிக்காவை நம்ப முடியாது.
- சோவியத் யூனியன் இந்தியாவுக்கு உதவியது.
மேற்கத்திய தடைகளை பொருட்படுத்தாமல் இந்தியா ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கி உக்ரைன் போருக்கு நிதியளிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார்.
இதற்கு அபராதமாக இந்திய பொருட்களுக்கு 50 சதவீத கூடுதல் வரியை அவர் விதித்திருந்தார். வர்த்தக பதட்டங்களை தவிர்க்க இரு நாடுகளின் பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையேயான மிகவும் பாராட்டப்பட்ட நட்பு எங்கே? என்று பொருளாதார நிபுணரும் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநருமான ரகுராம் ராஜன் கேள்வி எழுப்பினார்.
சிகாகோ கவுன்சில் ஆன் குளோபல் அஃபேர்ஸ் நடத்திய உரையாடலில் பேசிய ரகுராம் ராஜன், "கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா அமெரிக்காவுடன் நெருங்கி வருவதாக நான் நினைக்கிறேன். அது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. அமெரிக்கா, இந்தியா மீது 50 சதவீத வரி விதித்துவிட்டு, பாகிஸ்தானுக்கு 19 சதவீத வரி மட்டுமே விதிக்கிறது. அப்படியெனில் மோடிக்கும் டிரம்பிற்கும் இடையே பாராட்டப்பட்ட நட்பு எங்கே?
அமெரிக்காவை நம்ப முடியாது. 1970களில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி நிக்சனும் முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் கிஸ்ஸிங்கரும் 1971 ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போரில் பாகிஸ்தானின் பக்கம் சாய்த்தனர். அவர்கள் போரை நிறுத்தவும், பாகிஸ்தானுக்கு உதவவும் ஏழாவது கடற்படையை அனுப்பினர். அதனால் இந்தியர்கள் மிகவும் கோபமடைந்தனர். அப்போது சோவியத் யூனியன் இந்தியாவுக்கு உதவியது. அது இந்தியாவை 25 ஆண்டுகளாக சோவியத் முகாமில் வைத்திருந்தது" என்று தெரிவித்தார்.
- எனக்கு விடுக்கப்பட்டுள்ளது ஒரு தெய்வீக அழைப்பு.
- பக்தர்களுக்கு சுமூகமான யாத்திரையை உறுதி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் உள்ள துவார பாலகர் சிலை தங்கத் தகடுகள் மாயமான விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தானம் மீது பலரும் குறை கூறி வருகின்றனர். இந்த நிலையில் தேவஸ்தான முன்னாள் அதிகாரி உள்பட சிலரை, தங்கம் மாயம் குறித்து விசாரணை நடத்தும் சிறப்பு புலனாய்வு குழு கைது செய்துள்ளது. அவர்களிடம் தீவிர விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தேவஸ்தான புதிய தலைவராக மலையாள பல்கலைக்கழகத்தின் முன்னாள் தலைமை செயலாளரும், முன்னாள் துணைவேந்தருமான ஜெயக்குமார் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் கூறுகையில், எனக்கு விடுக்கப்பட்டுள்ளது ஒரு தெய்வீக அழைப்பு. அரசின் உத்தரவு கிடைக்கப் பெற்றதும் பொறுப்பேற்பேன். வாரியத்தின் செயல்பாட்டை மேலும் தொழில் முறைமயமாக்குவதற்கு பாடுபடுவேன். ஒவ்வொரு நெருக்கடியையும் ஒரு வாய்ப்பாக நான் பார்க்கிறேன்.
பக்தர்களுக்கு சுமூகமான யாத்திரையை உறுதி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும். நாங்கள் நேர்மையற்ற மக்களை விரட்டியடித்து பக்தர்களின் குறைகளை தீர்ப்போம். சபரிமலை சீசன் முதன்மையான முன்னுரிமையாக இருக்கும். சர்ச்சைகள் எங்கள் கவனம் அல்ல. அரசாங்கத்தின் நம்பிக்கையை நான் நிலைநிறுத்துவேன் என்றார்.
- இந்தியா கேட் பகுதியில் போராட்டம் நடத்த அனுமதி கிடையாது.
- 60 முதல் 80 பேர் வரை கைது செய்யப்பட்டதாக டெல்லி போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
புதுடெல்லி:
டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. நேற்று டெல்லியில் காற்றின் தரம் கடுமையான நிலையை எட்டியது.
அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டின் அளவை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்காததை கண்டித்து டெல்லியில் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இந்தியா கேட் முன்பு நடந்த இந்த போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். பெற்றோர்களும், குழந்தைகளும் இதில் கலந்து கொண்டனர். எங்களுக்கு சுவாசிக்க உதவுங்கள் என்ற வாசகத்துடன் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். மாசு நெருக்கடியின் அடையாள நினைவூட்டல்களான நெபுலைசர்கள் மற்றும் மருந்து சீட்டுகளுடன் பெண்கள் பங்கேற்றனர்.
இந்தியா கேட் பகுதியில் போராட்டம் நடத்த அனுமதி கிடையாது. போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. அதையும் மீறி மக்கள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். 60 முதல் 80 பேர் வரை கைது செய்யப்பட்டதாக டெல்லி போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
இந்த போராட்டத்தில் பொதுமக்களுடன் பங்கேற்ற ஆம் ஆத்மி செய்தி தொடர்பாளர் பிரியங்கா கக்கர் கூறும்போது, 'காற்றின் தரத்தை மதிப்பிடுவதற்காக காற்றின் தரக் குறியீட்டுத் திரைகளில் தண்ணீரை பா.ஜ.க. அரசு தெளித்தது. தரவுகளை கையாளுகிறது. இது பா.ஜ.க.வின் நேர்மையையும் நம்பகத் தன்மையையும் குறைக்கிறது.
பா.ஜ.க.வினர் கூட எங்களுடன் இருக்க வேண்டும், ஆனால் அவர்கள் தங்கள் காற்று சுத்திகரிப்பான்களுடன் வீட்டில் அமர்ந்து இருக்கிறார்கள், காற்றும், நீரும் அரசியலின் விஷயம் அல்ல என்பதை பா.ஜ.க. புரிந்து கொள்ள வேண்டும்' என்றார்.
- ஜார்க்கண்டில் ஆர்.ஜே.டி. காங்கிரஸ் உடனான கூட்டணியை மறுபரிசீலனை செய்வோம்.
- பா.ஜ.க.வுடன் ஜே.எம்.எம். மீண்டும் கைகோர்க்கும் வாய்ப்புகள் உருவாகி வருவதாக கருதப்படுகிறது.
பீகார் சட்டப்பேரவை தேர்தலில் லல்லுவின் ராஷ்டிரிய ஜனதாதளம் (ஆர்ஜேடி) தலைமையில் எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி அமைந்தது.
இந்தியா கூட்டணியின் பெரும்பாலான கட்சிகளை கொண்ட இக்கூட்டணியில் ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்.) கட்சியும் இடம் பெற்றுள்ளது. ஆனால் பீகார் தேர்தலில் ஜே.எம்.எம். கட்சிக்கு 2 தொகுதிகள் கூட ஒதுக்கப்படவில்லை.
இதன் காரணமாக, நவம்பர் 14-ந் தேதி வெளியாகும் பீகார் தேர்தல் முடிவுக்கு பிறகு ஜார்க்கண்ட் ஆட்சியில் மாற்றம் ஏற்படும் சூழல் உருவாகிறது. இந்தியா கூட்டணியில் இருந்து ஜே.எம்.எம். விலகும் வாய்ப்புகளும் ஏற்பட்டுள்ளன.
இதுகுறித்து ஜார்க்கண்ட் மாநில அமைச்சரும் ஜே.எம்.எம். மூத்த தலைவருமான சுதிப்யகுமார் கூறுகையில், "ஜார்க்கண்ட் அமைச்சரவையில் ஆர்.ஜே.டி. காங்கிரசுக்கு நாங்கள் இடமளித்துள்ளோம். பீகார் தேர்தலில் இருந்து நாங்கள் விலக இந்த கட்சிகளே காரணம். இதற்கு சரியான பதிலடியாக ஜார்க்கண்டில் ஆர்.ஜே.டி. காங்கிரஸ் உடனான கூட்டணியை மறுபரிசீலனை செய்வோம்" என்றார்.
இந்நிலையில் ஜார்க்கண்டில் ஆர்.ஜே.டி. மற்றும் காங்கிரஸ் அமைச்சர்கள் விலக்கப்பட்டால் பா.ஜ.க.வுடன் ஜே.எம்.எம். மீண்டும் கைகோர்க்கும் வாய்ப்புகள் உருவாகி வருவதாக கருதப்படுகிறது. ஜார்க்கண்டில் ஜே.எம்.எம். கட்சிக்கு 3 எம்.பி.க்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
- முகாமிற்கு ராகுல் காந்தி 20 நிமிடங்கள் தாமதமாக வந்தார்.
- கடந்த ஆண்டு அரியானா தேர்தலில் நடந்த வாக்கு திருட்டை பற்றி விளக்கினார்.
மத்திய பிரதேச மாநிலம் பச்மாரியில் காங்கிரஸ் மாநில தலைவர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
மத்திய பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் சச்சின் ராவ் தலைமை தாங்கினார். முகாமிற்கு ராகுல் காந்தி 20 நிமிடங்கள் தாமதமாக வந்தார்.
இதை பார்த்த சச்சின் ராவ் முகாமின் நடத்தை விதிகளின்படி யார் கூட்டத்திற்கு தாமதமாக வந்தாலும் அவர்களுக்கான தண்டனை உண்டு. அப்போதுதான் கட்சி தொண்டர்களும் ஒழுங்கை கடைப்பிடிப்பார்கள் என்று சிரித்தபடி சொன்னார்.
நேராக தனது சீட்டில் உட்கார சென்ற ராகுல் காந்தி சச்சின் ராவை பார்த்து இதற்கான அர்த்தம் என்ன, நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார்.
கூட்டத்திற்கு தாமதமாக வந்ததற்கு தண்டனையாக 10 முறை தண்டால் போட வேண்டும் என்று சொல்லி சச்சின் ராவ் மீண்டும் சிரித்தார்.
தலைவர் சொன்னதை கேட்ட ராகுல் காந்தி கூட்டத்தின் நடுவே தண்டால் எடுத்தார். இதை பார்த்த அனைத்து காங்கிரஸ்காரர்களும் கைதட்டி உற்சாபடுத்தி ஆரவார கோஷம் எழுப்பினர். இது கூட்டத்தினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பின்னர் பேசிய ராகுல்காந்தி சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கடந்த ஆண்டு அரியானா தேர்தலில் நடந்த வாக்கு திருட்டை பற்றி விளக்கினார்.
மேலும், அடுத்தடுத்து வரவிருக்கும் தேர்தல்களில் காங்கிரசார் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், மற்றும் தேர்தல் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்று தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார்.
- தேசிய புலனாய்வு முகமை பி.எப்.ஐ. அமைப்புக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது.
- பி.எப்.ஐ. அமைப்பைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் 28 பேரை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது.
பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ.) தீவிரவாத செயல்களை ஊக்குவிப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), பி.எப்.ஐ. அமைப்புக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது.
மேலும், அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. கடந்த 2022-ம் ஆண்டு பி.எப்.ஐ. அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்த வழக்கில் இதுவரை பி.எப்.ஐ. அமைப்பைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் 28 பேரை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. அத்துடன் ரூ.62 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை ஏற்கெனவே முடக்கி இருந்தது.
இந்நிலையில், பி.எப்.ஐ. மற்றும் அதன் அரசியல் கட்சியுடன் (எஸ்.டி.பி.ஐ.) தொடர்புடைய அறக்கட்டளைகளுக்கு சொந்தமான மேலும் ரூ.67 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கி உள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
இதில் பெரும்பாலான சொத்துகள் கேரளாவில் உள்ளன. இத்துடன் இந்த வழக்கில் முடக்கப்பட்ட மொத்த சொத்து மதிப்பு ரூ.129 கோடியாக அதிகரித்துள்ளது.
- முதற்கட்ட தேர்தலில் 65.08 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
- பீகார் தேர்தல் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
பீகார் சட்டசபை பதவிக்காலம் 22-ந் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக, 6-ந் தேதியும், 11-ந் தேதியும் இருகட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
பா.ஜ.க.-ஐக்கிய ஜனதாதளம் கூட்டணிக்கும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. முன்னாள் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி, அசாதுதின் ஒவைசி எம்.பி.யின் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி ஆகியவையும் களத்தில் உள்ளன.
பீகாரில் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அவற்றில் 18 மாவட்டங்களில் அடங்கிய 121 தொகுதிகளில் 6-ந்தேதி முதல்கட்ட தேர்தல் நடந்தது.
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. மொத்தம் 64.66 சதவீத வாக்குகள் பதிவானதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி வினோத்சிங் குஞ்சியால் தெரிவித்தார்.
பீகார் மாநிலத்தில் நடைபெற்ற முதற்கட்ட தேர்தலில் 65.08 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்நிலையில், 2ம் மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நாளை (11ம் தேதி) நடைபெறுகிறது.
இதனால், கட்சி தலைவர்கள் பீகாரில் முற்றுகையிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தும், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தும் வாக்கு சேகரித்தனர்.
பிரதமர் மோடி, ராகுல் காந்தி, அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்பட பலர் பீகாரில் முற்றுகையிட்டு பிரசாரம் செய்தனர்.
மீதிமுள்ள 122 தொகுதிகளில் நாளை இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், நேற்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது.
வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
- நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியது.
- இதில் சந்திரயான்-2 ஆர்பிட்டர் நிலவை சுற்றி வந்து கொண்டிருக்கிறது.
புதுடெல்லி:
இந்திய விண்வெளி ஆய்வு கழகமான இஸ்ரோ கடந்த 2019-ம் ஆண்டு நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை அனுப்பியது. இதில் சந்திரயான்-2 ஆர்பிட்டர் நிலவை சுற்றி வந்து கொண்டிருக்கிறது. அந்த ஆர்பிட்டர் நிலவில் நீர் இருக்கிறதா என்பதை ஆய்வுசெய்து வருகிறது.
இந்நிலையில், நிலவில் உள்ள நீர், பனிக்கட்டி மற்றும் மண்ணின் ரேடார் படங்களை சந்திரயான்-2 ஆர்பிட்டர் அனுப்பியுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு முதல் நிலவைச் சுற்றி வரும் சந்திரயான்-2 ஆர்பிட்டர் சேகரித்து அனுப்பிய தகவல்களை ஆய்வு செய்ததில் நிலவில் நீர் இருப்பதற்கான உறுதியான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. இதன்மூலம் நிலவில் நீர் இருக்கும் இடம் பற்றிய வரைபடத்தை இஸ்ரோ தயாரித்திருக்கிறது.
அகமதாபாத்தில் உள்ள இஸ்ரோவின் விண்வெளி ஆய்வு மையத்தின் விஞ்ஞானிகள் இந்த வரைபடத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இதற்காக இரட்டை அதிர்வெண் செயற்கை துளை ரேடார் (டி.எப்.எஸ்.ஏ.ஆர்) என்ற உயர் தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் பயன்படுத்தி உள்ளனர்.
கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 1,400 ரேடார் தரவுத்தொகுப்புகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
- பிரதமரும் அமித் ஷாவும் அவர்கள் விரும்பிய இடத்திற்குச் செல்லலாம்
- பீகார் மக்கள் விழிப்புடன் இருந்து வாக்குத் திருட்டை நிறுத்த வேண்டும்.
பீகாரில் இன்று இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் நடைபெற்ற நிலையில் கிஷன்கஞ்ச் தொகுதியில் நடைபெற்ற தோ்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார்.
அவர் கூறியதாவது, "எங்கள் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகளுக்கு மோடி, அமித் ஷா மற்றும் தேர்தல் ஆணையத்திடம் எந்தப் பதிலும் இல்லை. ஏனெனில் உண்மை இப்போது மக்களுக்கு முன்னால் வந்துவிட்டது.
பிரதமரும் அமித் ஷாவும் அவர்கள் விரும்பிய இடத்திற்குச் செல்லலாம். ஆனால் அவர்கள் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதற்காக இறுதியில் பிடிபடுவார்கள்.
பீகாரில் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதில் முதல்வா் நிதீஷ் குமாருக்கு விருப்பமில்லை.
பிரதமரும், உள்துறை அமைச்சரும், தேர்தல் ஆணையமும் வாக்குகளைத் திருடுகிறார்கள். பீகார் மக்கள் விழிப்புடன் இருந்து ஒன்றுகூடி வாக்குத் திருட்டை தடுத்து நிறுத்தினால் இந்தியா கூட்டணி 100 சதவீதம் ஆட்சியமைப்பது நிச்சயம்" என்று தெரிவித்தார்.
பீகாரில் வரும் 11 ஆம் தேதி 112 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. . 14 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.






