என் மலர்tooltip icon

    இந்தியா

    • சாலையின் நடுவே பெரிய பள்ளம் தோண்ப்பட்டுள்ளது.
    • மழை நீரால் பள்ளம் நிரம்பி கிடப்பதால் அடிக்கடி வாகனங்கள் கவிழ்ந்து விபத்து ஏற்படுவதாக குற்றச்சாட்டு.

    பொதுவாக சாலையில் உள்ள பள்ளத்தால், வாகனங்கள் கவிழ்ந்தால் அரசு மீது குற்றம்சாட்டப்படுவது வழக்கம். சாலை பராமரிப்பு இல்லாத காரணத்தினால்தான் வாகனம் கவிழந்ததாக குற்றம்சாட்டுவார்கள். ஆனால், பீகார் மாநிலத்தில் சாலையில் கவிழ்ந்த காரின் உரிமையாளர், அரசை அவமதிப்பதற்கான சதி எனத் தெரிவித்துள்ளார்.

    கடந்த வெள்ளிக்கிழமை பீகார் மாநிலத்தின் பாட்னாவில், ஐந்து பேருடன் சென்ற சொகுசு கார், மழை வெள்ளம் குளம் போல் தேங்கி நின்ற சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்தது. ஆனால் காரில் இருந்த ஐந்து பேரும் காயமின்றி உயிர் தப்பினர். காரை ஓட்டு வந்தவர் பெண். இவர்தான் அரசை அவமதிப்பதற்கான சதி எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில் "நாங்கள் எல்லோரையும் தொடர்பு கொண்டோம். டிம் உடன் பேசினோம். அவர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அரசை அவமதிப்பதற்காக சதி செய்யப்பட்டதுதான் இந்த பள்ளம் எனக் கூறினார்" எனத் தெரிவித்தார்.

    மேலும், அதிகாரிகள் குழியை தோண்டி, 20 நாட்களாக கவனிக்காமல் விட்டுவிட்டனர். தற்போது மழைக்காலம். ஐந்து பேர் காரில் இருந்தோம். யாராவது ஒருவர் உயிரிழந்திருந்தால், யார் பொறுப்பு?. அங்கு பேரி கார்டு கிடையாது. எங்கள் கார் விழுந்த அதேநேரத்தில், பைக் ஒன்றும் விழுந்தது. ஒவ்வொரு நாளும் இந்த குழியில் தினமும் யாராவது ஒருவர் விழுவதாக உள்ளூர்வாசிகள் கூறுகிறார்கள்" என்றார்.

    • நாம் வாங்குவது சுதேசி (இந்திய தயாரிப்பு பொருட்கள்) என்று பெருமையுடன் கூறுவோம்.
    • நாம் விற்பது சுதேசி என்று பெருமையுடன் கூறுவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    நவராத்திரி மற்றும் பண்டிகைக்கால தொடக்கத்தை நாடு முழுவதும் கொண்டாடும் வேளையில், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பண்டிகை அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பைக் கொண்டு வரட்டும் என நாட்டு மக்களுக்கு பிரதமர் கடிதம் எழுதியுள்ளார்.

    ஜிஎஸ்டி 2.0 மூலம் இந்த பண்டிகை கால சீசன் கூடுதல் மகிழ்ச்சியை கொண்டுள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஜிஎஸ்டி வரிகள் 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படுள்ளது. இதன்மூலம் குறையும் பொருட்களின் விலை, மக்களின் சேமிப்பு குறித்து விரைவாக குறிப்பிட்டுள்ளார்.

    அத்துடன், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை விற்குமாறு கடைக்காரர்களையும், வர்த்தகர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன். நாம் வாங்குவது சுதேசி (இந்திய தயாரிப்பு பொருட்கள்) என்று பெருமையுடன் கூறுவோம். நாம் விற்பது சுதேசி என்று பெருமையுடன் கூறுவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • வாக்கு திருட்டு தொடர்பான காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு ரேகா குப்தா பதில் அளித்துள்ளார்.
    • காங்கிரஸ் செய்தால் சரி, நாங்கள் செய்தா தவறா? எனக் கூறியதாக கெஜ்ரிவால் வீடியோ வெளியிட்டிருந்தார்.

    காங்கிரசின் வாக்கு மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக, டெல்லி முதல்வர் ரேகா குப்தா பேசியதை, கெஜ்ரிவால் எடிட் செய்து வீடியோ வெளியிட்ட நிலையில் எனது ரீல்ஸ்-களை பார்ப்பதை நிறுத்துங்கள் என ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ரேகா குப்தா கூறியதாவது:-

    கெஜ்ர்வால் சார்-க்கு நான் சொல்ல விரும்புகிறேன், தயவு செய்து என்னுடைய வீடியோக்கள், பேட்டிகள் மற்றும் ரீல்ஸ்களை பார்ப்பதை குறைத்துக் கொள்ளவும். நான் என்ன சொல்கிறேன். என்ன சொல்லவில்லை என்று நாள் முழுவதும் என்னுடைய ரீல்ஸ்களை பார்த்து கண்டு பிடிக்கிறீர்கள் என நினைக்கிறேன்.

    கெஜ்ரிவால் கவனம் செலுத்த விரும்பினால், பஞ்சாப் மக்கள் மீது கவனம் செலுத்த வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அங்குள்ள மக்களை அவர் பார்க்க வில்லை.

    ரேகா குப்தா பேசியதாக கெஜ்ரிவால் வெளியிட்டிருந்த வீடியோவில் "காங்கிரஸ் 70 ஆண்டுகளாக ஆட்சி செய்த காலத்தில் EVS கையாளப்பட்டது. அது பரவாயில்லை. ஆனால் இப்போது நாங்கள் கையாளும்போது அவர்கள் மோசமாக உணர்கிறார்கள்" என பதிவாகியிருந்தது. மேலும், முதலமைச்சர் என்ன சொல்கிறார்? என கேள்வி எழுப்பியிருந்தார்.

    ஆனால் டெல்லி பாஜக ரேகா குப்தா பேசிய வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் "காங்கிரஸ் 70 வருடங்களாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாண்டு வந்த வரை, அது பரவாயில்லை, ஆனால் இப்போது நாம் அதைச் செய்துவிட்டதால், அவர்கள் வருத்தப்படுகிறார்கள். அவர்கள் வெற்றி பெறும்போது, அது பொதுமக்களின் ஆணை, நாம் வெற்றி பெறும்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்படுகின்றன?.

    இந்த பார்முலா எங்கே எழுதப்பட்டுள்ளது? ராகுல் காந்தி இதை எங்கே படித்தார் என்று யாராவது சொல்லுங்கள். அவர் எப்போதும் பொதுமக்களை தவறாக வழி நடத்துகிறார், எப்போதும் மக்களிடம் பொய் சொல்கிறார். பொதுமக்கள் அவருக்கு பல வாய்ப்புகளை வழங்கியுள்ளனர், அவர் பல ஆண்டுகளாக அதிகாரத்தில் இருந்துள்ளார். இன்று அவர் மிகவும் கீழ்த்தரமாக இதுபோன்ற விஷயங்களைச் சொல்லும் அளவுக்குக் தரம் தாழ்ந்துவிட்டார்" என ரேகா குப்தா குறிப்பிட்டுள்ளார்.

    • ரேஷ்மாவும் பதிலுக்கு சண்டையிடவே கோபத்தின் உச்சத்திற்கே சென்ற அவரது மாமியார் ரேஷ்மாவை ஒரு அறைக்குள் வைத்து பூட்டினார்.
    • ரேஷ்மா உதவி கேட்டும் அவரது மாமியார் கதவை திறக்கவில்லை.

    உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் ஷாநவாஸ், ரேஷ்மா தம்பதிகள் வசித்து வருகின்றனர்.

    இவர்கள் கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணம் ஆனதிலிருந்தே கணவன் ஷாநவாஸ் குடும்பத்தினருக்கும், மனைவி ரேஷ்மா குடும்பத்தினருக்கும் வரதட்சணை தொடர்பாக பிரச்சனை இருந்து வந்துள்ளது.

    கணவன் வீட்டார் கேட்கும் போதெல்லாம் பெண் வீட்டார் அவ்வப்போது பணம் கொடுத்து வந்துள்ளனர்.

    இந்த நிலையில ரேஷ்மாவின் மாமியார் ரூ. 5 லட்சம் கூடுதல் வரதட்சணையாக கேட்டுள்ளார். ஆனால் பெண் வீட்டிலிருந்து ரூ.1.5 லட்சமே கொடுத்துள்ளனர். இதனால் ரேஷ்மாவின் மாமியார் ஆத்திரத்தில் இருந்து வந்தார். ரேஷ்மாவை அவர் தினமும் கொடுமைப்படுத்த தொடங்கினார்.

    ரேஷ்மாவும் பதிலுக்கு சண்டையிடவே கோபத்தின் உச்சத்திற்கே சென்ற அவரது மாமியார் ரேஷ்மாவை ஒரு அறைக்குள் வைத்து பூட்டினார். அந்த அறையின் சிறு துளை வழியே ஒரு பாம்பையும் விட்டார். பாம்பை பார்த்து அலறிய ரேஷ்மா பாம்பிடம் இருந்து தப்பிக்க இரவு முழுவதும் போராடினார்.

    இந்த நிலையில் பாம்பு ரேஷ்மாவை கடித்தது. வலியால் அலறிதுடிப்பதை அவரது மாமியார் பார்த்து கைதட்டி சிரித்து மகிழ்ந்துள்ளார். ரேஷ்மா உதவி கேட்டும் அவரது மாமியார் கதவை திறக்கவில்லை. வலியால் துடித்தவர் எப்படியோ முயன்று செல்போனில் தனது தங்கை ரிஸ்வானாவை அழைத்து தனக்கு நடந்த கொடுமையை சொன்னார்.

    உடனே வீட்டுக்கு வந்து அக்காவின் நிலைமையை பார்த்த ரிஸ்வானா பதறிப்போனார். கணவன் வீட்டாரிடம் சண்டைப் போட்ட ரிஸ்வானா, தனது அக்காவை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அக்காவின் கணவன் வீட்டாரை தண்டிக்க எண்ணிய ரிஸ்வானா போலீசில் புகார் அளித்தார். கணவன் ஷாநவாஸ், மாமியார், அவரது சகோதரர், சகோதரிகள் என அனைவர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நேரடியாக இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய தேவஸ்தானம் சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
    • பக்தர்கள் விரைவாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. தினந்தோறும் 60 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பக்தர்கள் வரை சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 18 மணி நேரம் முதல் 24 மணி நேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்து வந்தனர்.

    இந்த நிலையில் திருப்பதியில் பிரமோற்சவ விழா வருகிற 24-ந்தேதி தொடங்க உள்ளது. நேரடியாக இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய தேவஸ்தானம் சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று வழக்கம்போல திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் விரைவாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    இதனால் 5 மணி நேரத்தில் 67 ஆயிரத்து 408 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். வழக்கமாக இந்த அளவுக்கு வரும் பக்தர்கள் குறைந்தபட்சம் 12 மணி நேரமாவது காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

    நேற்று விரைவாக தரிசனம் செய்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    திருப்பதி கோவிலில் நேற்று 67,408 பேர் சாமி தரிசனம் செய்தனர் 16,597 பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.3.73 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரமோற்சவம் தொடங்க உள்ளதால் அங்குரார்ப்பணம் நாளை நடக்கிறது. 9 மண்பானைகளில் நவ தானியங்கள் தூவப்பட்டு அந்த விதைகளில் இருந்து வெளிவரும் முளைகள் மூலவருக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது.

    • நவராத்திரி பண்டிகை அனைவர் வாழ்விலும் புதிய பலத்தையும், புதிய நம்பிக்கையையும் கொண்டு வரட்டும்.
    • பக்தி, தைரியம், கட்டுப்பாடு, உறுதிப்பாடு நிறைந்த புனிதமான பண்டிகை நவராத்திரி விழா.

    நாடு முழுவதும் நவராத்திரி விழா இன்று தொடங்கி உள்ளது. இதனால் வீடுகளில் கொலு வைத்து ஒன்பது நாட்களும் இவ்விழா கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி நவராத்திரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    நவராத்திரி பண்டிகை அனைவர் வாழ்விலும் புதிய பலத்தையும், புதிய நம்பிக்கையையும் கொண்டு வரட்டும். பக்தி, தைரியம், கட்டுப்பாடு, உறுதிப்பாடு நிறைந்த புனிதமான பண்டிகை நவராத்திரி விழா என கூறியுள்ளார். 

    • ஜிஎஸ்டி மறுசீரமைப்பு நடவடிக்கையால் 375 பொருட்களின் விலை குறைந்துள்ளது.
    • அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    ஜிஎஸ்டி 12%, 28% வரி அடுக்குகள் நீக்கம் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான வரி குறைப்பு ஆகியவை இன்று முதல் அமலுக்கு வந்தது.

    இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். செப்டம்பர் 22 ஆம் தேதி சூரிய உதயத்தில் ஜிஎஸ்டி சேமிப்பு விழா தொடங்கும் என்று தெரிவித்தார்.

    ஜிஎஸ்டி மறுசீரமைப்பு நடவடிக்கையால் 375 பொருட்களின் விலை குறைந்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    ஜிஎஸ்டி மறுசீரமைப்பால் விலை குறையும் பொருட்கள்:

    உயிர்காக்கும் மருந்துகளுக்கு 12% ஆக இருந்த வரி பூஜ்யமாக குறைகிறது. பால், ரொட்டி, சப்பாத்தி போன்ற உணவுப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி நீக்கப்பட்டதால் விலை குறைகிறது.

    மாணவர்களுக்குத் தேவையான எழுது பொருள்கள், வரைபடங்கள், நோட்டுகள், ரப்பர், பென்சில், கிரையான்ஸ் உள்ளிட்டவற்றின் மீதான ஜிஎஸ்டி வரி முழுவதும் நீக்கப்பட்டதால் விலை குறைகிறது.

    தனிநபர் ஆரோக்கியம் மற்றும் வாழ்நாள் காப்பீட்டுக்கான ஜிஎஸ்டி முற்றிலும் நீக்கப்பட்டதால் பிரீமியம் தொகை குறைகிறது.

    வீட்டு உபயோகப் பொருட்கள், சாமானிய மக்களுக்கான பொருட்கள் அனைத்தும் 5 சதவீத வரி அடுக்குக்குள் கொண்டுவரப்படுள்ளதால் விலை குறைகிறது.

    ஹேர் ஆயில், ஷாம்பு, பற்பசை மற்றும் பல் ஃப்ளாஸ் போன்ற தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளதால் விலை குறைகிறது.

    குழந்தைகளுக்கான பால் புட்டி, நாப்கின், மருத்துவ டயப்பர்களுக்கு 12 சதவீதத்தில் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளதால் விலை குறைகிறது.

    வெண்ணெய், நெய், பால் பொருள்கள் மீதான ஜிஎஸ்டி 12%லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளதால் விலை குறைகிறது.

    இதேபோல் நொறுக்குதீனிகளுக்கான வரி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளதால் விலை குறைகிறது.

    தையல் இயந்திரம் மற்றும் அதற்கான உதிரி பாகங்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளதால் விலை குறைகிறது.

    ஆட்டோ, இருசக்கர வாகனங்கள், சரக்கு வாகனங்கள், வீடுகளில் பயன்படுத்தப்படும் ஏசி, டிவி மற்றும் கார் உள்ளிட்டவற்றிற்கு வரி 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால் விலை குறைகிறது.

    மருத்துவத்துறையில், தெர்மோமீட்டர், மருத்துவ ஆக்ஸிஜன், பரிசோதனைப் பொருள்கள், கண்ணாடி மீதான ஜிஎஸ்டி 12 சதவீதத்திலிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளதால் விலை குறைகிறது.

    • நவராத்திரியை முன்னிட்டு கர்பா நடன பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
    • அவரது குடும்பத்தினர் ஏழு பேரால் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டார்.

    மத்தியப் பிரதேசத்தில் நவராத்திரியை முன்னிட்டு கர்பா நடன பயிற்சியில் ஈடுபட்டிருந்த இளம்பெண் துப்பாக்கி முறையில் கடத்தப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

    மண்ட்சௌர் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை நடந்த இந்த சம்பவத்தில், கர்பா நடனப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அந்த இளம்பெண், அவரது குடும்பத்தினர் ஏழு பேரால் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டார்.

    தகவலறிந்து விரைந்த போலீசார், சில மணிநேரங்களில் அந்தப் பெண்ணை பத்திரமாக மீட்டு, கடத்தலில் ஈடுபட்ட ஏழு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து வைக்கப்பட்டதால், வீட்டை விட்டு வெளியேறி தனியாக வசித்ததால், அவரை குடும்பத்தினர் கடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    • சுமார் 10 மாதங்களுக்கு முன்பு, இருவரும் சேர்ந்து ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
    • கொலையை மறைப்பதற்காக, சூரஜ் தனது நண்பரான ஆஷிஷ் குமார் என்பவரின் உதவியை நாடினார்.

    உத்தரப் பிரதேசத்தில் தனது காதலியைக் கொலை செய்து உடலை சூட்கேஸில் அடைத்து ஆற்றில் வீசிய இளைஞர் மற்றும் அவரது நண்பர் கைது செய்யப்பட்டனர்.

    வாட்ஸ்அப்பில் வைத்த ஒரு செல்ஃபி ஸ்டேட்டஸ் மூலம் குற்றவாளிகள் பிடிபட்டுள்ளனர்.

    கான்பூரில் 22 வயதான சூரஜ் குமார் உத்தம், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் 20 வயதுடைய உணவக ஊழியரான அகன்க்ஷாவை சந்தித்தார்.

    சுமார் 10 மாதங்களுக்கு முன்பு, இருவரும் சேர்ந்து ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில், ஜூலை 21-ஆம் தேதி சூரஜிற்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை அகன்க்ஷா கண்டுபிடித்தார்.

    இது குறித்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த சூரஜ், அகன்க்ஷாவை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.

    கொலையை மறைப்பதற்காக, சூரஜ் தனது நண்பரான ஆஷிஷ் குமார் என்பவரின் உதவியை நாடினார்.

    இருவரும் சேர்ந்து அகன்க்ஷாவின் உடலை ஒரு கருப்பு சூட்கேஸில் வைத்து, மோட்டார் சைக்கிளில் சுமார் 95 கி.மீ. தொலைவில் உள்ள சிலாக்காட்டில் உள்ள யமுனை நதியில் வீசியுள்ளனர்.

    இந்த கொடூரமான செயலை செய்த பிறகு, ஆற்றுப் படுக்கையில் சூட்கேஸுடன் சூரஜ் ஒரு செல்ஃபி எடுத்து, அதை தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக வைத்துள்ளார்.

    அகன்க்ஷாவை ஜூலை 22 முதல் காணவில்லை என அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.

    இதற்கிடையில், வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், சூரஜ் மற்றும் அவரது நண்பர் ஆஷிஷ் ஆகியோர் குற்றவாளிகள் என தெரியவந்தது.

    இதையடுத்து, கடந்த சனிக்கிழமை அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். தற்போது, ஆற்றில் வீசப்பட்ட அகன்க்ஷாவின் உடலைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 

    • 8 ஆண்டுகளில் ரூ.55 லட்சம் கோடிக்கு மேல் வசூலித்தது.
    • இப்போது, ​​நீங்கள் ரூ.2.5 லட்சம் கோடி சேமிப்பு விழா பற்றிப் பேசுகிறீர்கள்.

    ஜிஎஸ்டி 12%, 28% சதவீத வரி அடுக்குகள் நீக்கம் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான வரி குறைப்பு ஆகியவை இன்று(செப்டம்பர் 22) முதல் அமலுக்கு வருகிறது.

    இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். செப்டம்பர் 22 ஆம் தேதி சூரிய உதயத்தில் ஜிஎஸ்டி சேமிப்பு விழா தொடங்கும் என்று தெரிவித்தார்.

    மோடியின் உரையை விமர்சித்து காங்கிரஸ் தலைவர் கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதவில், "காங்கிரஸ் கட்சியின் எளிமையான மற்றும் திறமையான GST-க்கு பதிலாக, உங்கள் அரசாங்கம் ஒன்பது தனித்தனி அடுக்குகளைக் கொண்ட "கப்பர் சிங் வரி"யை விதித்தது, 8 ஆண்டுகளில் ரூ.55 லட்சம் கோடிக்கு மேல் வசூலித்தது.

    இப்போது, நீங்கள் ரூ.2.5 லட்சம் கோடி சேமிப்பு விழா பற்றிப் பேசுகிறீர்கள். பொதுமக்களுக்கு ஆழமான காயங்களை ஏற்படுத்திய பிறகு ஒரு எளிய பேண்ட்-ஏய்டைப் போடுகிறீர்கள்!

    பருப்பு வகைகள், அரிசி, தானியங்கள், பென்சில்கள், புத்தகங்கள், மருத்துவ சிகிச்சை மற்றும் விவசாயிகளின் டிராக்டர்கள் என அனைத்திற்கும் நீங்கள் GST விதித்ததை பொதுமக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.

    உங்கள் அரசாங்கம் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்!" என்று தெரிவித்தார். 

     எம்.பி ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், அரசியலமைப்பு அமைப்பான ஜிஎஸ்டி கவுன்சிலால் ஜிஎஸ்டி அமைப்பில் செய்யப்பட்ட திருத்தங்களுக்கு பிரதமர் முழு உரிமை கோரினார். 

    ஜூலை 2017 முதல் நாங்கள் ஜிஎஸ்டி 2.0 ஐ கோரி வருகிறோம். 2024 மக்களவைத் தேர்தலுக்கான எங்கள் தேர்தல் அறிக்கையில் இது ஒரு முக்கிய வாக்குறுதியாகும்.   

    தற்போதைய ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள் போதுமானவை அல்ல. வேலைவாய்ப்பை உருவாக்கும் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (MSMEs) கவலைகள் முழுமையாக தீர்க்கப்படவில்லை.

    ஜவுளி, சுற்றுலா, ஏற்றுமதி, கைவினைப் பொருட்கள் மற்றும் விவசாயத் துறைகளில் உள்ள பிரச்சினைகள் கவனிக்கப்படவில்லை.

    மின்சாரம், மதுபானம், பெட்ரோலியம் மற்றும் ரியல் எஸ்டேட் போன்றவற்றை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வர மாநிலங்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும்.

    மாநிலங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது.

    இந்திய வணிகங்கள் அச்சத்தினாலும், ஒருசிலரின் ஆதிக்கத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளது. எட்டு வருடங்கள் தாமதமான இந்த ஜி.எஸ்.டி. மாற்றங்கள், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உண்மையில் உயர்த்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.   

    • மைத்துனி சூடான பாத்திரத்தை எடுத்து எனது வலது காலில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றினாள்.
    • நான் கத்தினால், என்னைக் கொன்றுவிடுவதாக மிரட்டினார்கள்.

    குஜராத்தில் நடத்தியில் சந்தேகப்பட்டு கணவன் வீட்டாரால் பெண் ஒருவர் கொடூரமான சித்ரவதைக்கு ஆளான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    மெஹ்சானா மாவட்டத்தில் விஜப்பூர் பகுதியில் உள்ள கெரிடா கிராமத்தில் கணவன் மற்றும் 2 குழந்தைகளுடன் பாதிக்கப்பட்ட 28 வயதான பெண் வசித்து வந்தார்.

    விவசாயத் தொழிலாளியாக வேலை செய்து வந்த அவர் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.

    அந்த புகாரில், தனது மைத்துனி தனது நடத்தையில் சந்தேகித்து, தொடர்ந்து தன்னை இழிவாகப் பேசி துன்புறுத்தியதாக தெரிவித்துள்ளார்.

    மேலும், கடந்த 16 ஆம் தேதி, "மைத்துனியும் அவரது சகோதரர்களும் இணைந்து, தனது கற்பை பரிசோதிக்க தனது கையை பாத்திரத்தில் கொதிக்கும் எண்ணெய்யில் வைக்க கட்டப்படுத்தினர். நான் மறுத்ததால் என்னை அடித்து, எனது கை கொதிக்கும் எண்ணெயில் படும்படி அடுப்பை நோக்கித் தள்ளினார்கள்.

    தனது அலறல் கேட்டும் சித்திரவதையை நிறுத்தாமல், மைத்துனி சூடான பாத்திரத்தை எடுத்து எனது வலது காலில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றினாள். நான் கத்தினால், என்னைக் கொன்றுவிடுவதாக அவள் மிரட்டினாள்" என்று தெரிவித்துள்ளார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு விரைந்து சென்று, அவரை ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பெண்ணின் புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அங்கிதாவின் சகோதரர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வந்தனர்.
    • அவருக்கு அருகே பூச்சி மருந்து பாக்கெட் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது.

     உத்தரப் பிரதேசத்தில் காதலன் கொல்லப்பட்ட விரக்தியில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    சஹாரன்பூர் மாவட்டத்தின் சில்ஹானா பகுதியைச் சேர்ந்த 18 வயது அங்கிதா, மகிழ் என்ற 22 வயது இளைஞரை காதலித்து வந்தார்.

    இந்த சூழலில் கடந்த வெள்ளிக்கிழமை மகிழ் கொலை செய்யப்பட்டார். அங்கிதாவின் குடும்பத்தினர் தான் தங்கள் மகனை கொன்றதாக மகிழின் குடும்பத்தினர் புகார் அளித்தனர். அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக அங்கிதாவின் சகோதரர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வந்தனர்.

    இந்நிலையில் காதலன் உயிரிழந்த விரக்தியில் இருந்த அங்கிதா, சனிக்கிழமை தனது வீட்டில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவருக்கு அருகே பூச்சி மருந்து பாக்கெட் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது.

    அவரது உடலை கைப்பற்றி போலீசார் உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    ×