என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    தூத்துக்குடி, வேலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர்கள் கனிமொழி, கதிர் ஆனந்தை தகுதி நீக்கம் செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை மதுரை ஐகோர்ட்டு விசாரணைக்கு ஏற்றது. #kanimozhi
    மதுரை:

    ராமநாதபுரம் கீழச்சிறுபோது கிராமத்தைச் சேர்ந்த அப்துல்லா சேட், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    தமிழகத்தில் வருகிற 18-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலை சட்டப்படியும், நியாயமான முறையிலும் நடத்தும் வகையில் பறக்கும் படை, சிறப்பு குழுக்களை ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனியாக தேர்தல் கமிஷன் அமைத்துள்ளது. தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார்.

    பிரசார கூட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவருக்காக, தி.மு.க.வினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்கிறார்கள். கடந்த மாதம் 27-ந்தேதி வேப்பலோடை கிராமத்தில் கனிமொழிக்கு ஆரத்தி எடுத்த வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டது. இது தொடர்பாக கனிமொழி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல் வேலூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் சார்பிலும் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்யப்படுகிறது. கதிர் ஆனந்த் வீடு, அவரது ஆதரவாளர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கோடிக்கணக்கான ரூபாய் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக கதிர் ஆனந்த், அவரது ஆதரவாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    ஜனநாயகம் மற்றும் தேர்தல் நடைமுறையில் நம்பிக்கை வைத்துள்ளவர்களின் நம்பிக்கையை கனிமொழி, கதிர் ஆனந்த் ஆகியோரின் செயல்பாடு சீர்குலைய செய்துள்ளது. எனவே அவர்களை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதியிழப்பு செய்யக்கோரி தேர்தல் கமிஷனுக்கு கடந்த 5-ந்தேதி மனு அனுப்பினேன். அந்த மனு அடிப்படையில் கனிமொழி, கதிர் ஆனந்த் ஆகியோரை தகுதியிழப்பு செய்ய உத்தரவிட வேண்டும்.



    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது. எனவே தேர்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சென்னை ஐகோர்ட்டு அமர்வில் இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. #kanimozhi
    கர்நாடகாவில் மேகதாதுவில் அணை கட்டப்படும் என்று பேசும் ராகுல்காந்திக்கு தமிழக விவசாயிகளின் நலன் பாதிக்கப்படும் என்பது தெரியாதா? என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். #EdappadiPalanisamy #RahulGandhi
    தர்மபுரி:

    தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாசுக்கு ஆதரவாக நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேச்சேரி, மேட்டூர் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    அ.தி.மு.க. வேட்பாளர்களையும், கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து இதுவரை 35 நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 210 சட்டமன்ற தொகுதிகளுக்குச் சென்று பல்வேறு இடங்களில் பேசிவந்துள்ளேன். நான் பொதுமக்களை சந்திப்பதைத் தான் முழு நோக்கமாக கருதி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறேன்.

    ஆனால், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் என்னை பற்றியும், கூட்டணி கட்சி தலைவர்கள் பற்றியும் தரக்குறைவாக பேசி வருகிறார். தி.மு.க.வினர் இதுவரை தேர்தல் சமயத்தில் அளித்த எந்த வாக்குறுதிகளையாவது நிறைவேற்றியுள்ளனரா? தேர்தலுக்கு தேர்தல் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்து, மக்களை குழப்பமடையச் செய்து வாக்குகளை பெறுவதே அவர்கள் வழக்கம். ஆனால், அ.தி.மு.க. அரசு அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.

    ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது ஏழை, எளிய மக்களின் நலனுக்காக எந்த திட்டத்தையும் நிறைவேற்றாத காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி தற்போது வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்குவதாக பேசிவருகிறார். இது சாத்தியமற்றது, அதிக நிதி தேவைப்படும்.

    ராகுல்காந்தி, மாநிலத்திற்கு மாநிலம் மாறுபட்ட கருத்துக்களுடன் பேசிவருகிறார். கர்நாடகாவில் பேசுகையில், கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டப்படும் என்கிறார். இன்று தமிழ்நாட்டில் சேலம், கிருஷ்ணகிரியில் விவசாயிகளின் நலன் குறித்து பேசுகிறார். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் போது தமிழ்நாட்டு விவசாயிகளின் நலன் பாதிக்கும் என்பது அவருக்கு தெரியாதா?

    கேரளாவில் கம்யூனிஸ்டு கட்சியை எதிர்த்து காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. தமிழ்நாட்டில் கம்யூனிஸ்டு கட்சிக்கு காங்கிரஸ் ஓட்டு கேட்கிறது, காங்கிரஸ் கட்சிக்கு கம்யூனிஸ்டு கட்சி ஓட்டுக்கேட்கிறது. இப்படி கொள்கை அளவிலே ஒருமித்த கருத்து இல்லாத இதுபோன்ற சந்தர்ப்பவாத கூட்டணியால் எப்படி ஒரு நிலையான ஆட்சியை தரமுடியும்.



    கேரளாவிலும், கர்நாடகாவிலும் தமிழர்கள் நலனுக்கு எதிராக பேசிவரும் காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது என்றால், தமிழ்நாடு பாலைவனமாக ஸ்டாலின் துணைபோகிறாரா? உதயநிதி ஸ்டாலின் 4 படங்களில் நடித்திருக்கிறார். கருணாநிதியின் பேரன், ஸ்டாலின் மகன் அவ்வளவு தான். அதைத் தவிர வேறு என்ன தகுதி இருக்கிறது. உதயநிதிக்கு அரசியலில் என்ன அனுபவம் இருக்கிறது.

    ஸ்டாலின் எதைப் பற்றி பேசினாலும் எனக்கு கவலையில்லை. ஏனென்றால், நான் கிராமத்தில் பிறந்து வளந்தவன். கடினமாக உழைத்து நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். நான் எதையும் தாங்கிக் கொள்வேன். ஆனால் ஸ்டாலினுக்கு அந்த சக்தி இருக்கிறதா எனத் தெரியவில்லை.

    ஒரு கூட்டத்தில் பேசும்போது, “எனக்கு ஒரு கட்டி, பிரதமருக்கு ஒரு கட்டி இருக்கிறது அதை அப்புறப்படுத்த வேண்டும்” என பேசியிருக்கிறார். இவர் 6 மாதத்திற்கு ஒரு முறை எதற்காக மருத்துவ பரிசோதனை என்ற பெயரில் லண்டன் சென்று வருகிறார். அதன் மர்மம் என்ன? என்பது நாட்டு மக்களுக்கு ஸ்டாலின் தெரிவித்தால் நன்றாக இருக்கும். நான் அவரைப் பற்றி பேசத்தொடங்கினால் அவரால் தாக்குப்பிடிக்க முடியாது என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இப்பகுதி மக்கள், என்னுடைய மக்கள், எனது சொந்த மாவட்ட மக்கள். நமது மாவட்டத்திற்கு முதல்-அமைச்சர் பதவி கிடைத்தது நமக்கெல்லாம் பெருமை. ஒரு முதல்-அமைச்சரை பார்க்க வேண்டும் என்றால் முன் அனுமதி பெற்றுத்தான் சந்திக்க வேண்டும். ஆனால், நீங்கள் எந்த நேரமும் என்னை சந்தித்து கோரிக்கைகளை வைக்கலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மேச்சேரி பஸ் நிலையம் அருகே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக மு.க.ஸ்டாலின் மட்டும்தான் முன்மொழிந்தார். அவர்கள் கூட்டணியில் உள்ள மற்ற யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே அவர்கள் கூட்டணியில் யார்? பிரதமர் வேட்பாளர் என்பதில் ஒற்றுமை இல்லை. நாடு பாதுகாப்பாக இருக்க மத்தியில் நிலையான ஆட்சி அமைய வேண்டும். அப்போது தான் மாநிலத்துக்கு போதுமான நிதி கிடைக்கும்.

    நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அரசு அமைந்தவுடன், கோதாவரி-காவிரி நதிகள் இணைப்பு திட்டத்தை முதல் கோரிக்கையாக நிறைவேற்ற விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்”. #EdappadiPalanisamy #RahulGandhi
    4 நாட்கள் கவனமாக உழைத்தால் 40 தொகுதிகளிலும் வெற்றி நமக்கே என்று தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ராமதாஸ் கூறியுள்ளார். #Ramadoss
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் மட்டுமின்றி, 18 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல்களுக்கான வாக்குப்பதிவும் வரும் 18-ந்தேதி நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தலை போலவே சட்டசபை தேர்தலும் மிகவும் முக்கியமானதாகும். இந்த இரு தேர்தல்களுக்குமான பிரசாரம் நிறைவடைய இன்னும் 4 நாட்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. அடுத்து வரும் 4 நாட்களுக்கான பணிகள் நமக்கு முக்கியமானவை.

    அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க., பா.ஜ.க., தே.மு.தி.க., த.மா.கா., புதிய நீதிக்கட்சி, புதிய தமிழகம், புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தொண்டர்களும், தேர்தலில் போட்டியிடாமல் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள 25-க்கும் மேற்பட்ட கட்சிகளின் நிர்வாகிகளும் ஆற்றி வரும் களப்பணிகள் மிகவும் அற்புதமானவை. எந்தத் தொகுதியில் எந்த கட்சியின் வேட்பாளர் போட்டியிடுகிறார் என்ற வினாவையே எழுப்பாமல் அனைத்து இடங்களிலும் தங்கள் சொந்த கட்சியின் வேட்பாளரே போட்டியிடுவதை போன்று அனைத்து கூட்டணி கட்சி நிர்வாகிகளும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் பணி பாராட்டத்தக்கதாகும்.

    அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருப்பதை நானே நேரில் பார்த்து அறிந்தேன். களநிலவரம் தொடர்பாக மற்ற தொகுதிகளில் இருந்து வரும் தகவல்களும் மிகவும் உற்சாகம் அளிப்பவையாகவே உள்ளன. 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும், 18 சட்டசபை தொகுதிகளிலும் வெற்றி என்ற இலக்கை நோக்கி நாம் விரைவாக முன்னேறுகிறோம்.

    ஆனாலும், அதிக நம்பிக்கை அலட்சியமாக மாறிவிடக்கூடாது. பயிரை சாகுபடி செய்யும் காலத்தை விட அறுவடை செய்யும் காலத்தில் தான் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதன்படி அடுத்த 4 நாட்களுக்கு பா.ம.க. உள்பட அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் மிகவும் விழிப்புடனும், கடமை உணர்வுடனும் தேர்தல் பணியாற்ற வேண்டும்.

    தி.மு.க. கூட்டணி கட்சியினரின் வன்முறைகள், அவர்கள் அணி வெற்றி பெற்றால் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போகும் சூழல், வணிகர்கள் தொடங்கி அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்படும் அபாயம், அப்பாவி மக்களின் நிலங்கள் உள்ளிட்ட உடமைகள் பறிக்கப்படும் ஆபத்து ஆகியவற்றை மக்களுக்கு புரியும்படி எடுத்துரைக்க வேண்டும்.

    தேர்தல் களமும், களச்சூழலும் நமக்கு ஆதரவாக உள்ளன. மக்களும் நமக்கு வாக்களிக்க விருப்பமாக உள்ளனர். அதை உணர்ந்து அடுத்த 4 நாட்களுக்கு கடுமையாகவும், கவனமாகவும் உழைத்தால் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும், 18 சட்டசபை தொகுதிகளிலும் நமக்கே வெற்றி. இது உறுதி.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Ramadoss
    தேனியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் இன்று உரையாற்றிய ராகுல் காந்தி தமிழ்நாட்டுக்கு வரும் போதெல்லாம் ஒரு மாதத்துக்கு தேவையான புத்துணர்வு பெறுவதாக குறிப்பிட்டார். #feelingenergetic #RahulGandhi #RahulGandhiinTN
    தேனி:

    மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தேனி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்  ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று மாலை பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-  

    காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தனிமனிதனின் அறிக்கை அல்ல, எங்களது தேர்தல் அறிக்கை நாட்டு மக்களின் ஒருமித்த குரல். எங்கள் தேர்தல் அறிக்கையில் அனைத்து தரப்பு மக்களின் குரல் ஒலிக்கும். மக்களின் விருப்பத்தை உள்வாங்கி காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளது.

    காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நீட் தேர்வு குறித்து குறிப்பிட்டோம். நீட் தேர்வு வேண்டுமா? வேண்டாமா? என்பதை அந்தந்த மாநிலங்களே முடிவெடுத்து கொள்ளலாம். தமிழக மக்கள் விரும்பாததை எந்த சக்தியாலும் செயல்படுத்த முடியாது.

    டெல்லியில் இருந்துகொண்டு தமிழகத்தை நிர்வகிக்க பிரதமர் மோடி விரும்புகிறார். மோடி வெறுப்பு அரசியலை வளர்த்து வருகிறார். வெறுப்பாலும் கோபத்தாலும் தமிழக மக்களை பணியவைக்க முடியாது. வெறுப்பு அரசியலை வீழ்த்துவோம். தமிழகமக்களை அவர் தொடர்ந்து அவமதிப்பதை பார்த்து கொண்டு இருக்க முடியாது. தமிழ்மொழியின் தொன்மை அவருக்கு தெரியாது. அதை படித்தாவது அவர் தமிழகத்தை புரிந்து கொள்வார் என நினைக்கிறேன்.

    தமிழக விவசாயிகள் டெல்லியில் போராடியதை நான் நேரடியாக பார்த்தேன். உங்கள் வேதனையிலும் சோதனையிலும் நாங்கள் பங்கேற்போம். அவர்களை நேரில் சென்று தழுவிக்கொண்டேன். விவசாயத்திற்கு தனி பட்ஜெட்  சமர்ப்பிப்போம்.

    ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் கொடுக்கும்போது இந்திய பொருளாதாரம் மேலும் வலுவடையும்.

    வங்கிகளில் பல கோடிகள் கடனாக வாங்கி திருப்பி செலுத்தாத அனில் அம்பானியை சுதந்திரமாக நடமாட விட்டுள்ள மோடியின் அரசு 25 அல்லது 30 ஆயிரம் ரூபாய் கடன் திருப்பி செலுத்தாக விவசாயியை மட்டும் தேடிப்பிடித்து சிறையில் அடைப்பது ஏன்?

    கடனை திருப்பி கொடுக்காத எந்த விவசாயியும் சிறை செல்லும் நிலை மத்திய காங்கிரஸ் ஆட்சியில் வராது.

    பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் தொழில்துறை சீரழிந்து  விட்டது. வேலையில்லா திண்டாட்டத்தால் இளைஞர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழ் இளைஞர்கள் சுயதொழில் தொடங்க விரும்புகிறார்கள். ஆனால் இளைஞர்கள் தொழில் தொடங்க பல அலுவலகம் செல்ல வேண்டி உள்ளது. எந்த  தகுதியும் இல்லாமல் அனில் அம்பானி ராணுவ ஒப்பந்தம் பெறுகிறார். காங்கிரஸ் ஆட்சி அமைந்த பிறகு இளைஞர்கள் தொழில் தொடங்க எந்த லஞ்சமும் கொடுக்க வேண்டியது இல்லை.

    நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசுத்துறைகளில் காலியாக உள்ள 22 லட்சம் பணியிடங்களை நிரப்புவோம்.  ஊராட்சி பணியிடங்களில் 10 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவையும் படிப்படியாக நிரப்பப்படும்.

    நமது கூட்டணி மிகப்பெரிய காரியங்களை செய்து முடிக்க உள்ளது. நமது  யுத்தம் 2 கருத்தியல்களுக்கு இடையிலான யுத்தம். நான் பொய் சொல்வதற்காக இங்கு வரவில்லை. ஒவ்வொரு முறை தமிழ்நாட்டுக்கு வரும் போதெல்லாம் நான் புத்துணர்வு பெற்றதாக உணர்கிறேன். அடுத்த ஒரு மாதத்துக்கு தேவையான புத்துணர்வு எனக்கு கிடைக்கிறது.

    தமிழ்நாட்டுக்கும் எனக்கும் உள்ள பந்தம் இதயப்பூர்வமானது. எனக்கு மகிழ்ச்சியான வரவேற்பை அளித்து எனது பேச்சை கேட்பதற்காக இங்கு திரளாக வந்துள்ள உங்கள் அத்தனை பேருக்கும் நன்றி தெரிவித்து விடைபெறுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #feelingenergetic #RahulGandhi #RahulGandhiinTN  
    சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பாஜக தலைவர் அமித் ஷா, பாஜக எம்எல்ஏ கொல்லப்பட்ட சதி குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்தார். #LoksabhaElections2019 #BJP #AmitShah
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுக்காக பா.ஜ.க. தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே, தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள ஷியாம்கிரி பகுதியில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. பீமா மாண்டவி உள்ளிட்டோர் கடந்த 9ம் தேதி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு மறைந்திருந்த நக்சலைட்கள் பா.ஜ.க.வினர் சென்ற கார்களை நோக்கி சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை வீசியும் துப்பாக்கிகளால் சுட்டும் தாக்குதல் நடத்தினர். இதில் பாஜக எம்.எல்.ஏ. பீமா மாண்டவி உள்பட பாதுகாப்பு படையை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

    இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, பாஜக எம்எல்ஏ கொல்லப்பட்ட சதி குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்தார்.

    இதுதொடர்பாக, ராஜ்நந்தகாவ் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா,  சத்தீஸ்கரின் தண்டேவாடாவில் நடைபெற்ற நக்சலைட்கள் தாக்குதலில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. பீமா மாண்டவி கொல்லப்பட்டார்.

    பீமா மாண்டவி கொல்லப்பட்டது அரசியல் சதி.  எனவே, பாஜக எம்எல்ஏ கொல்லப்பட்ட சதி குறித்து சிபிஐ விசாரணைக்கு சத்தீஸ்கர் முதல் மந்திரி உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார்.  #LoksabhaElections2019 #BJP #AmitShah
    பெரியமுளையூர் பகுதியில் வாக்கு சேகரித்த மன்சூர்அலிகான், உண்ட களைப்பினாலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து அதனால் ஏற்பட்ட சோர்வினாலும் அங்கிருந்த அரசு பள்ளி மரத்தின் அடியில் அயர்ந்து தூங்கினார். #MansoorAlikhan
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி நாம்தமிழர் கட்சி வேட்பாளராக நடிகர் மன்சூர்அலிகான் போட்டியிடுக்கிறார். இதற்காக திண்டுக்கல் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு புரோட்டா செய்வது, டீ போடுவது, டயருக்கு பஞ்சர் ஒட்டுவது, துணிகளை அயன் செய்வது, குழந்தைகளுக்கு தாலாட்டு பாடுவது என விதவிதமான யுக்திகளில் பொதுமக்களிடம் பிரசாரம் செய்து வருகிறார்.

    இன்று திண்டுக்கல் அருகே உள்ள கோபால்பட்டி பகுதியில் பிரசாரம் செய்தார். இவர் ஒத்தக்கடை பகுதியில் சாலையோரம் தென்னை நார் திரிக்கும் பெண் தொழிலாளர்களிடம் வேலை எப்படி போகிறது, கிடைக்கிற வருமானம் போதுமானதாக உள்ளதா? வேறு ஏதும் பிரச்சனைகள் உள்ளதா? என கேட்டறிந்தார். வேலாதயும்பாளையம் பகுதியில் பிரசாரம் மேற்கொள்ளும் போது ஒரு வீட்டில் வளைகாப்பு நடைபெற்றது. அங்கு சென்ற நடிகர் மன்சூர்அலிகான் கர்ப்பிணியை வாழ்த்தி ஆசீர்வதித்தார். பின்னர் கலவை சாதத்தை விரும்பி வாங்கி சாப்பிட்டார்.

    அதன்பின்னர் பெரியமுளையூர் பகுதியில் வாக்கு சேகரித்தபோது உண்ட களைப்பினாலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து அதனால் ஏற்பட்ட சோர்வினாலும் அங்கிருந்த அரசு பள்ளி மரத்தின் அடியில் அயர்ந்து தூங்கினார்.

    அப்போது அவ்வழியாக வந்த சிறுவர் சிறுமிகள் கேப்டன் பிரபாகரன் படத்தில் வந்த மன்சூர்அலிகானின் வீரபத்திரன் கதாபாத்திரத்தை நினைவில் கொண்டு நம்ம ஊருக்கு வீரபத்திரன் வந்துள்ளார் என ஆர்வமாக சத்தம்போட்டுக் கொண்டே சென்றனர். இதனைத் தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் மன்சூர்அலிகானை காண திரண்டனர். குழந்தைகளிடம் நன்றாக படிக்க வேண்டும் என்றார். பொதுமக்களிடம் நல்ல வேட்பாளரை தேர்வு செய்யுங்கள் என கூறி சென்றார். #Loksabhaelections2019 #MansoorAlikhan

    தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி வில்லன் என்று திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் வேலுச்சாமியை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். #Loksabhaelections2019 #UdhayanidhiStalin
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் வேலுச்சாமியை ஆதரித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் சந்தைரோடு, பைபாஸ் சாலை, கோபால்பட்டி உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது மக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-

    மோடி ஆட்சியில் பணம் மதிப்பிழப்பின் போது நாடு முழுவதும் 150 பேர் உயிரிழந்தனர். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் பிரச்சனைக்காக 100 நாட்களாக மக்கள் போராடினர். இதில் மாணவி உள்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இது குறித்து மோடி ஆயிரம் பேரை காக்க 13 பேரை கொல்வதில் தவறில்லை என்று கூறியுள்ளார். எடப்பாடி பழனிசாமி தான் டி.வி.பார்க்கவில்லை என அலட்சியமாக கூறினார். இவர்களை பழி வாங்க வருகிற 18-ந் தேதி மக்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன் மூலம் மத்தியில் ராகுல்காந்தி பிரதமாகவும், தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் முதல்வராகவும் பதவி வகிப்பார்கள்.

    தி.மு.க. பதவி ஏற்றவுடன் விவசாய கடன், கல்விக்கடன், நகைக்கடன் ஆகியவை ரத்து செய்யப்படும். மேலும் மாணவர்களுக்கு இலவச ரெயில் பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நீட் தேர்வால் மாணவி அனிதா உயிரிழந்தார். எனவே நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். திண்டுக்கல்லில் மருத்துவ கல்லூரி பணிகள் மீண்டும் தொடங்கப்படும்.

    சென்னை-மதுரை தேஜஸ் ரெயில் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும். காவிரி கூட்டுக்குடிநீர் மூலம் திண்டுக்கல்லில் குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படும்.

    திரைப்படத்தில்தான் வில்லன், காமெடியன்கள் இருப்பார்கள். ஆனால் தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி வில்லனாக உள்ளார். எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கைக்கூலிகளாக செயல்படுகின்றனர். அதே போல் அனைத்து தமிழக அமைச்சர்களும் காமெடியன்களாக உள்ளனர். மாம்பழம் அழுகிப் போய் விட்டது. அதனால்தான் ஆப்பிள் சின்னத்துக்கு ஓட்டு கேட்கின்றனர். முதல்வர் மற்றும் துணை முதல்வரை கடுமையாக விமர்சித்து விட்டு தற்போது மீண்டும் அவர்களுடன் சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார். #Loksabhaelections2019 #UdhayanidhiStalin
    பிரதமர் மோடி ஏழை விவசாயியோடு உள்ள ஒரு புகைப்படத்தை பார்த்திருக்கிறீர்களா? என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். #LokSabhaElections2019 #RahulGandhi
    சேலம்:

    சேலம் சீலநாயக்கன்பட்டியில் பாராளுமன்ற தேர்தல் பிரசார கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:

    டெல்லியில் உள்ள அதிகாரிகள் தமிழ் மக்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கிறார்கள். இந்தியாவை வலிமைமிக்க நாடாக உருவாக்குவதில் தமிழகத்தின் குரல் முக்கிய பங்கு வகிக்கிறது.

    நாங்கள் தமிழ் மொழியையும், தமிழ் மக்களையும் மதிக்கிறோம். காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மூடிய அறையில் தயாரிக்கப்பட்டது அல்ல,  பல்லாயிரக்கணக்கான மக்களின் கருத்துக்களை கேட்ட பிறகே தயாரிக்கப்பட்டது.

    அனிதாவுக்கு ஏற்பட்ட நிலைமை மற்றொருவருக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். நீட் தேர்வு வேண்டுமா? வேண்டாமா? என்பதை அந்தந்த மாநிலங்களே முடிவெடுத்து கொள்ளலாம். மக்களின் குரலை கேட்கிறோம், கருத்துப்  பரிமாற்றங்களை கேட்கிறோம்.

    கருணாநிதி என்பவர் சாதாரண மனிதர் அல்ல; தமிழர்களின் ஓங்கி ஒலித்த குரலாக இருந்தார். தமிழக அரசு கருணாநிதியை அவமானப்படுத்தியதன் மூலம், தமிழர்களையே அவமானப்படுத்தியதாக எண்ணுகிறேன்.

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். நாட்டில் உள்ள 20% ஏழைகளை கண்டறிந்து அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் கிடைப்பது உறுதிசெய்யப்படும்.

    விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கும் போது அவர்களுக்கு ஆதரவு சொல்லக்கூட பிரதமருக்கு மனமில்லை.  விவசாயிகளை அழைத்து ஏன் போராடுகிறீர்கள் என்று கேட்பதற்குகூட பிரதமருக்கு நேரமில்லை. பிரதமர் மோடி, ஏழைகளோடு அமர்ந்திருக்கும் ஒரு புகைப்படத்தை கூட பார்த்திருக்க முடியாது.

    மத்திய அரசு அலுவலக பணிகளில் 33% இட ஒதுக்கீடு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்வதை உறுதி செய்வோம். கடந்த 5 ஆண்டுகளாக நரேந்திர மோடி இளைஞர்களை ஏமாற்றி வந்தார் என தெரிவித்துள்ளார்.  #LokSabhaElections2019 #RahulGandhi
    பாராளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை விடப்படும் என கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார். #LoksabhaElections2019
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் வருகிற 18-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக், சில்லறை விற்பனை மதுபான கடைகள் மற்றும் அதனை சார்ந்த மது அருந்தும் கூடங்கள் மற்றும் உரிமம் பெற்ற மது அருந்தும் கூடங்கள் அனைத்துக்கும் வருகிற 16-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் தேர்தல் நடைபெறும் நாளான 18-ந் தேதி நள்ளிரவு 12 மணி வரையும் மற்றும் வாக்கு எண்ணும் நாளான அடுத்த மாதம் (மே) 23-ந் தேதி ஆகிய 4 நாட்களுக்கு விடுமுறை விடப்பட உள்ளது.

    இந்த நாட்களில் மதுக்கடைகள் மற்றும் மது அருந்தும் கூடங்கள் மூடப்பட வேண்டும். இதில் விதிமீறல்கள் ஏதேனும் கண்டறியப்பட்டால் உரிமத்தினை ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #LoksabhaElections2019
    சோழிங்கநல்லூரில் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்துவோம் என்று திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்தார். #Loksabhaelections2019 #ThamizhachiThangapandian
    சென்னை:

    தென்சென்னை தொகுதி தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் சோழிங்கநல்லூர் மேடவாக்கம் ஏரிக்கரை தெருவில் இருந்து பிரசாரத்தை தொடங்கினார். தி.மு.க. வர்த்தகர் அணியை சேர்ந்த தீனன், ஜே.சி.பி. இயந்திரத்தில் பூக்களை நிரப்பி தமிழச்சி மீது பூக்களை கொட்டினார். ஆயில் மில் பகுதிக்கு வந்த போது, தமிழச்சி தங்க பாண்டியன் பிரசார வேனில் இருந்து இறங்கி அங்கு சாலையோரத்தில் இருந்த டீக்கடைக்கு உடன்பிறப்புகளோடு சென்று டீ குடித்தார்.

    அப்போது அங்கிருந்த மக்களிடம் “இந்தப் பகுதி சென்னை மாநகராட்சியில் இணைந்தும் குடிநீர் வசதி இல்லை. பாதாள சாக்கடை திட்டம் வரவில்லை. கழிவு நீர் செல்ல குழாய்கள் பதிக்கவில்லை. இதற்கு காரணம், உள்ளாட்சித்துறை முடங்கிக் கிடக்கிறது. விரைவில் தி.மு.க. ஆட்சி அமையும். உங்களுக்கான அத்தனை அடிப்படை வசதிகளையும் செய்து தருவோம்” என்றார் தமிழச்சி.

    பிரசாரத்தின் போது மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன், அரவிந்த் ரமேஷ் எம்.எல்.ஏ., பகுதி செயலாளர் ரவிச்சந்திரன், வட்டச் செயலாளர் திவாகர், மகளிர் அணி சசிகலா, கெளசல்யா, சந்திரா, 169-வது வட்டத்தை சேர்ந்த சங்கர், குமாரசாமி, விநாயகம், லீலாவதி, காங்கிரஸ் மாவட்ட தலைவர் ரூபி மனோகரன், பகத்சிங், ஆர்.வி. குமார், ஆர் கே முத்துராஜ். அனுக்கிரஹா கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பிர சாரத்தில் கலந்து கொண்டனர். #Loksabhaelections2019 #ThamizhachiThangapandian
    சென்னையில் பேட்டியளித்த மத்திய மந்திரி பியூஷ் கோயல் கூறுகையில், பா.ஜ.க.வின் நதிகள் இணைப்பு திட்டத்திற்கு வரவேற்பு அளித்த நடிகர் ரஜினிக்கு நன்றி என தெரிவித்தார். #PiyushGoyal #Rajinikanth
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்காக பா.ஜ.க.வின் தமிழக பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டவர் மத்திய மந்திரி பியூஷ் கோயல்.

    பாராளுமன்ற தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று முடிந்த நிலையில், மத்திய மந்திரி பியூஷ் கோயல் இன்று சென்னைக்கு வந்தார். அவர் பா.ஜ.க. அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    நதிகள் இணைப்பே தண்ணீர் பிரச்சனைக்கு சரியான தீர்வாக இருக்கும். காங்கிரஸ் ஆட்சியில் நதிகளை இணைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    பா.ஜ.க.வின் நதிகள் இணைப்பு திட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்த நடிகர் ரஜினிக்கு நன்றி. பிரதமர் மோடி தலைமையில் அடுத்து அமையும் அரசில், தமிழக பிரதிநிதிகளின் குரல் எதிரொலிக்கும். 2022-ம் ஆண்டில் மீனவர்களின் வருமானம் இரட்டிப்பாகும்.

    நீட் தேர்வு தேவையில்லை என அதிமுக கூறவில்லை. நீட் தேர்வை தமிழில் எழுத வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது; அதை ஏற்றுக் கொண்டோம் என தெரிவித்தார். #PiyushGoyal  #Rajinikanth
    பாராளுமன்ற தேர்தலில் ஓட்டு போட்டதற்கான கை விரல் மையை காட்டினால் ஓட்டல்களில் சாப்பிடுபவர்களுக்கு 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என்று ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. #LoksabhaElections2019
    சென்னை:

    ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் வெங்கடசுப்பு கூறியதாவது:-

    தமிழகத்தில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்கும் நோக்கில் தேர்தல் நாளன்று ஓட்டுபோட்டதற்கான அடையாளமாக கைவிரலில் உள்ள மையை காண்பித்தால் மாலை 6 மணிக்கு மேல் ஓட்டலில் சாப்பிடுபவர்களுக்கு பில் தொகையில் 10 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும்.

    மக்களிடையே வாக்களிப்பதற்கான விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக அனைத்து ஓட்டல்களிலும் தேர்தல் தினத்தன்று இந்த தள்ளுபடியை நடைமுறைபடுத்துகிறோம்.

    அன்றைய தினம் மாலை 6 மணி முதல் இரவு வரை இந்த தள்ளுபடி வழங்கப்படும். சென்னை மாவட்ட ஓட்டல்கள் சங்கத்தின் தலைவர் ரவி கூறும்போது, ‘சென்னை முழுவதும் மொத்தம் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டல்கள் உள்ளன. இதில் 2500 ஓட்டல்கள் எங்களுடைய சங்கத்தில் உள்ளது.

    எங்கள் சங்கத்தில் சேராத ஓட்டல்களிலும் 10 சதவீத தள்ளுபடி வழங்குவோம் என்று உறுதி அளித்துள்ளார். எங்களது அறிவிப்பை சமூக வலைதளங்களில் மக்களுக்கு தெரியப்படுத்தி வருகிறோம். வருகிற 17-ந்தேதி ஓட்டல்கள் முன்பு அறிவிப்பு பலகையும் வைக்க உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ஓட்டுபோட்டதற்கான கைவிரல் மையை காண்பித்தால் அயனாவரம் மார்க்கெட்டில் உள்ள ராஜாஸ் சிக்கன் கடையில் கோழிக்கறி விலையில் 1 கிலோவுக்கு ரூ.50 தள்ளுபடி வழங்கப்படும் என்று அதன் உரிமையாளர் முரளிபாபு அறிவித்திருந்த நிலையில் இப்போது ஓட்டல் உரிமையாளர்களும் 10 சதவீத தள்ளுபடி அறிவித்துள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. #LoksabhaElections2019
    ×