என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    காரமடையில் பறக்கு படையினர் நடத்திய வாகன சோதனையில் வங்கி ஏ.டி.எம்.மிற்கு கொண்டு சென்ற ரூ.19¾ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #Loksabhaelections2019

    சூலூர்:

    கோவையை அடுத்த காரமடையில் பறக்கும் படை குழு அலுவலரும், எஸ்.எஸ்.குளம் வட்டார வளர்ச்சி அலுவலருமான ஜெசிமாலினி, சப்-இன்ஸ்பெக்டர் தேவராஜ் தலைமையிலான குழுவினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த தனியார் நிறுவன வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் வேனுக்குள் இருந்த பெட்டிக்குள் உரிய ஆவணங்கள் இல்லாமல் ஏ.டி.எம்.மில் நிரப்ப கொண்டு சென்ற ரூ.19 லட்சத்து 77 ஆயிரத்து 137-ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்து மேட்டுப்பாளையம் தாசில்தார் அலுவலகத்தில் கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் புனிதாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

    கோவையை அடுத்த கலங்கல் பகுதியில் சூலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் நவமணி தலைமையில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அந்த அதில் கட்டுக்கட்டாக ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் இருந்தது. காரில் வந்தவர் சூலூரை அடுத்த செலக்கரைச்சல் பகுதியை சேர்ந்த கலைச்செல்வன் என்றும், ஒரு தனியார் வங்கிக்கு பணத்தை கட்ட கொண்டு செல்வதாகவும் கூறினார். அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டு சூலூர் தாசில்தார் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலகிருஷ்ணனிடம் ஒப்படைக்கப்பட்டது.

    பொள்ளாச்சி- கோவை சாலையில் கோவில்பாளையத்தில் நேற்று தேர்தல் பறக்கும் படை அதிகாரி சக்திவேல் தலைமையில் அதிகாரிகள் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கேரள மாநிலம் சித்தூரில் இருந்து வந்த காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டனர். இதில் காரில் ரூ.68 ஆயிரத்து 500 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுகுறித்து காரில் வந்த பாலக்காடு மாவட்டம் சித்தூரை சேர்ந்த முகமது பராக் என்பவரிடம் விசாரணை நடத்தியபோது திருப்பூரில் துணி கொள்முதல் செய்வதற்காக பணத்தை எடுத்து செல்வதாக தெரிவித்தார். ஆனால் பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர். இதேபோல், பெரியகளந்தையில் பறக்கும் படை அதிகாரி வினேஷ் தலைமையில், நடந்த வாகன சோதனை நடந்தது. இதில் கிணத்துக்கடவை சேர்ந்த டாக்டர் சுரேந்தினி உரிய ஆவணம் இன்றி வைத்து இருந்த ரூ.70 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. கோவை, பொள்ளாச்சி பகுதிகளில் நடந்த வாகன சோதனையில் 28 லட்சத்து 65 ஆயிரத்து 637 ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். #Loksabhaelections2019

    மோடி மீண்டும் பிரதமர் ஆகிவிட்டால் அரசியலில் இருந்து நான் விலக தயார் என்று தேவேகவுடா மகன் ரேவண்ணா சவால் விடுத்துள்ளார். #LokSabhaElections2019 #Revanna
    மைசூர்:

    கர்நாடகாவில் பொதுப்பணித்துறை மந்திரியாக தேவேகவுடாவின் மகன்களில் ஒருவரான ரேவண்ணா உள்ளார். நேற்று அவர் மைசூர் பகுதியில் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    கர்நாடகாவில் காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி 22 தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெறும். கர்நாடகாவில் எங்கள் கூட்டணிக்கு செல்வாக்கு இருப்பதை இதன் மூலம் நிரூபித்து காட்டுவோம்.

    எங்களுடைய கட்சிக்கு 6, 8, 22 ஆகியவை மிகவும் ராசி நம்பர்களாகும். எனவேதான் 22 தொகுதிகளில் எங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்கிறேன்.

    18 நம்பரும் எங்களுக்கு ராசிதான். எனவேதான் 2018-ல் குமாரசாமி முதல்-மந்திரி ஆனார்.

    2018-ல் வரும் ஒன்றையும் எட்டையும் கூட்டினால் 9 வருகிறது. 2019-ல் தேர்தல் வந்துள்ளது. இந்த எண்கள்படி பார்த்தால் மத்தியில் நிச்சயம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை பிடிக்கும்.

    என் கையில் நான் எப்போதும் எலுமிச்சை பழம் வைத்திருப்பதை கிண்டல் செய்கிறார்கள். எலுமிச்சை சாதாரண கனி அல்ல. பல வி‌ஷயங்களுக்கு எலுமிச்சை பயன்படுகிறது.

    எங்களது குலதெய்வம் சிவபெருமான். எனவே சிவபெருமான் படத்துக்கு நான் தினமும் எலுமிச்சை மாலை அணிவித்து வழிபட்டு வருகிறேன்.

    இதனால்தான் நான் எங்கு சென்றாலும் எனக்கு எலுமிச்சை பழம் தருகிறார்கள். எடியூரப்பா விரும்பினால் அவருக்கும் நான் எலுமிச்சை பழம் கொடுக்க தயாராக இருக்கிறேன்.

    மோடியால் நிச்சயம் மீண்டும் பிரதமர் ஆக முடியாது. இதை நான் சவால் விட்டு சொல்கிறேன். அவர் மீண்டும் பிரதமர் ஆகிவிட்டால் அரசியலில் இருந்து நான் விலக தயார்.

    எனக்கும் என் சகோதரர் குமாரசாமிக்கும் எந்த தகராறும் இல்லை. அப்படி வரும் தகராறுகள் வதந்தி தான். வாழ்நாள் முழுக்க நாங்கள் ஒருபோதும் சண்டைப் போட்டுக் கொள்ள மாட்டோம். நாங்கள் சண்டை போடுவோம் என்று நினைத்தால் அது பகல் கனவாகி விடும்.

    இவ்வாறு ரேவண்ணா கூறினார். #LokSabhaElections2019 #Revanna

    டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் முதல்கட்டமாக 4 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். #Congress #Loksabhaelections2019
    புதுடெல்லி:

    டெல்லியில் மொத்தம் 7 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் கூட்டணி அமைத்து போட்டியிட காங்கிரஸ் கட்சியும், ஆம் ஆத்மி கட்சியும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தன.

    ஆனால் அந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படவில்லை. இதனால் 7 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

    டெல்லியில் 7 தொகுதிகளிலும் யார் யாரை வேட்பாளர்களாக நிறுத்தலாம் என்று நேற்று மாலை நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அப்போது ஏற்கனவே போட்டியிட்ட மூத்த தலைவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது.

    அந்த கோரிக்கையை காங்கிரஸ் தலைவர் ராகுல் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் முதல்கட்டமாக 4 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    புதுடெல்லி தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய்மக்கான் நிறுத்தப்பட்டுள்ளார். மற்றொரு மூத்த தலைவர் கபில்சிபல் சாந்தினி சவுக் தொகுதியில் போட்டியிடுகிறார்.

    வடகிழக்கு டெல்லி தொகுதியில் ஜே.பி.அகர்வால், வடமேற்கு டெல்லி தொகுதியில் ராஜ்குமார் சவுகான், காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளனர். கடந்த 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் கபில் சிபல், அஜய்மக்கான், அகர்வால் ஆகிய மூவரும் போட்டியிட்டு பா.ஜனதா வேட்பாளர்களிடம் தோல்வியடைந்தனர்.

    தற்போது அவர்கள் மூவருக்கும் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    தெற்கு டெல்லி, மேற்கு டெல்லி, கிழக்கு டெல்லி ஆகிய 3 தொகுதிகளுக்கும் காங்கிரஸ் வேட்பாளர்களாக யாரை நிறுத்தலாம் என்று ஆலோசனை நடந்து வருகிறது. ஓரிரு நாட்களில் அவர்கள் பெயர் வெளியிடப்படும் என்று டெல்லி மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் பி.சி.சாக்கோ தெரிவித்தார். #Congress #Loksabhaelections2019
    சேலத்தில் இன்று நடைபெற்ற பிரசாரப் பொதுக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு பேசிய மு.க.ஸ்டாலின், வெற்றி என்பது திமுக கூட்டணிக்கு உறுதி என கூறியுள்ளார். #MKStalin #DMK #LoksabhaElections2019
    சேலம்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

    இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சேலத்தில் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு,  திமுக, காங்கிரஸ் மற்றும் மதிமுக  வேட்பாளர்களை ஆதரித்து  பேசியதாவது:

    இங்கு வருகை தந்திருக்கும் காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல் காந்தியை வரவேற்கிறேன். ராகுல் காந்தியை இளம் தலைவர் என கூறுவதை விட வருங்கால பிரதமர் என கூறுவதே பொருத்தமாக இருக்கும்.



    மத்தியில் அமைந்திருக்கும் பாஜக அரசின் ஆட்சியும், மாநிலத்திலே ஆளும் அதிமுக அரசின் செயல்பாடுகளும் மக்களை எந்த அளவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்பதை தினமும் பார்க்கிறேன். அவர்கள் ஆட்சியிலே செய்த சாதனையை கூறாமல் தொடர்ந்து எங்களையே குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறார்கள். 

    ஏதேனும் நல்லது செய்திருந்தால் தானே சொல்லமுடியும்? மோடி தலைமையிலான பாசிச ஆட்சி முடிவுக்கு வர வேண்டும். இதற்காக மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். அதன்பின்னர் தமிழ்நாடு வளர்ச்சி அடையும்.

    மோடி ஆட்சியினை அப்புறப்படுத்திய பின்னர், ஆளும் அதிமுகவின் ஆட்சியும் கலையும். நாட்டில் நல்ல ஆட்சி மலர மக்களாகிய நீங்கள் துணை நிற்க வேண்டும்.  எடப்பாடியின் உதவாக்கரை ஆட்சியையும், மோடியின் சர்வாதிகார ஆட்சியையும் நீங்கள் கவிழ்க்க தயாராகி விட்டீர்கள். வரும் 18ம் தேதி முக்கிய பங்கு ஆற்றவிருக்கும் நீங்கள், மறக்காமல் செய்து விடுங்கள்.

    மத்திய, மாநில ஆட்சியில் மாற்றத்தை உருவாக்கக்கூடிய தேர்தல், இந்த தேர்தல் தான். பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கை ஜீரோ. ஆனால் காங்கிரஸ் மற்றும் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கை ஹீரோவை போல் உள்ளது. மத்தியில் நாம் கை காட்டியவர்களுக்கு தான் ஆட்சி.  நாட்டில் வறுமையை ஒழிக்க மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களிப்பீர்கள் என நம்புகிறேன்.   

    இவ்வாறு அவர் பேசினார். #MKStalin #DMK #LoksabhaElections2019  
    வண்ணாரப்பேட்டை அருகே பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் மலேசியா சென்று வந்த வியாபாரியிடம் ரூ.87 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. #LokSabhaElections2019

    ராயபுரம்:

    கொருக்குப்பேட்டையை சேர்ந்தவர் பாலு (65) மளிகை கடை  உரிமையாளர். சில தினங்களுக்கு முன்பு மலேசியாவுக்கு சுற்றுப் பயணம் சென்ற பாலு இன்று சென்னை திரும்பினார். அதிகாலையில் விமான நிலையத்தில் இருந்து காரில் வீட்டுக்கு சென்றார்.

    அப்போது, பழைய வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானா அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். பாலு சென்ற காரை பறக்கும்படை அதிகாரி தமிழரசன் சோதனை செய்தார்.

    இதில், வியாபாரி பாலுவிடம் ரூ.87 ஆயிரத்து 500 ரூபாய் இருந்தது தெரிய வந்தது. அது மலேசியா சுற்றுப் பயணம் செய்து விட்டு வந்த பிறகு மீதம் உள்ள பணம் என்று பாலு கூறினார். என்றாலும், தகுந்த ஆவணம் இல்லாமல் பணம் வைத்திருந்ததாக கூறி, 87 ஆயிரத்து 500 ரூபாயை பறிமுதல் செய்தனர். இந்த பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. #LokSabhaElections2019

    குளச்சல் பகுதியில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.1½ லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. #LokSabhaElections2019

    குளச்சல்:

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டசபை தொகுதிகளிலும் தேர்தல் முறைகேடுகளை தடுக்க பறக்கும்படை சோதனை முடுக்கி விடப்பட்டுள்ளது.

    குளச்சல் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ரீத்தாபுரம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை தாசில்தார் ஷீலா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சாந்தகுமார், ரெகு தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அந்த வழியாக சென்ற கார்கள், இருசக்கர வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். இதில் குறும்பனையைச் சேர்ந்த தம்பதி உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற ரூ. 1½ லட்சம் பணத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். அதனை அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

    இதுபோல குளச்சல் பகுதியில் இன்னொரு நபரிடம் ரூ.60 ஆயிரம் பணமும் கைப்பற்றப்பட்டது. நேற்று ஒரு நாளில் மட்டும் ரூ.4 லட்சத்து 10 ஆயிரத்து 400 பணம் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

    தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நாள் முதல் இதுவரை கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் மட்டும் ரூ. 2 கோடியே 33 லட்சத்து 76 ஆயிரம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 623 கிராமம் தங்கமும், 1300 கிராமம் வெள்ளியும் கைப்பற்றப்பட்டுள்ளது. #LokSabhaElections2019

    மகாபாரதத்து அர்ச்சுனனின் வில்வித்தை போன்றது அதிமுக தொண்டர்களின் தேர்தல் யுக்தி என்பதை உணர்த்திடும் வண்ணம் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று ஓபிஎஸ், ஈபிஎஸ் கேட்டுக்கொண்டுள்ளனர். #ADMK #EPS #OPS
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஆகியோர் தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    எனக்குப் பின்னாலும் நூறு ஆண்டுகள் ஆனாலும், அ.தி.மு.க.தான் தமிழகத்தை ஆளும் என சட்டமன்றப் பேரவையில் நம் அம்மா ஒலித்திட்ட கடைசி சூளுரையை இதயத்தில் நிறுத்தி, நம் கருணைத் தாயின் அந்த நம்பிக்கையில் கடுகளவும் குறை நிகழ்ந்துவிடக்கூடாது எனும் குறிக்கோளோடு 40 பாராளுமன்றத் தொகுதிகளிலும் கழகத்தின் கூட்டணிக்கே வெற்றி என்னும் லட்சியத்திற்காகவும்; இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகள் அனைத்தும் இலைத் தேர்தலாகும் என்னும் உறுதியோடும் அயராது உழைத்துவரும் கழகத்தின் அன்பு உடன்பிறப்புகளே, கனவுமிக்க இந்த இயக்கத்தை மடியிட்டு வளர்த்து வரும் அன்பிற்குரிய தாய்மார்களே, ஆற்றல் மிக்க செயல் மறவர்களே, கழகத்தின் பல்வேறு நிலைகளில் கடமையாற்றிவரும் கழக அடலேறுகளே!

    தாயில்லாப் பிள்ளைக்கு நடக்கிற தலைப் பிரசவம் போல, முப்பது ஆண்டு காலத்திற்கும் மேலாக நம்மையும், நம் கழகத்தையும் வழிநடத்திய நம் அம்மா இல்லாத நிலையில், நாம் சந்திக்கும் முதல் பாராளுமன்ற பொதுத் தேர்தல் இது என்றாலும், நாம் அமைத்திருக்கும் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மெகா கூட்டணி, தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளையும் வென்று காட்டும் என்பது நிதர்சனமான உண்மை.

    இதனை உணர்ந்து கொண்ட எதிர்க்கட்சிகள், கருத்துக் கணிப்பு என்னும் பெயரில் தங்களது குடும்ப ஊடகங்களையும், கூலிக்கு மாறடிக்கும் சிலரையும் வைத்துக்கொண்டு, கழகக் கூட்டணிக்கு வாக்களிக்க திடமாக எண்ணி இருக்கும் வாக்காளர்களையும், பொதுமக்களையும் திசை திருப்பும் நோக்கோடும், எந்தச் சூழ்நிலையிலும் மனம் தளராமல் போராடி வரும் நம் கழகத் தொண்டர்களின் எழுச்சியைத் தடுத்து, அவர்களிடையே ஒரு மனச் சோர்வை உருவாக்கிடும் யுக்தியோடும் பெரும் சதியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் அடித்துக் குவித்து வைத்திருக்கும் அலைக்கற்றை பணங்களை இறக்கி, விதவிதமான விளம்பரங்களால் வாய்மையை வென்றுவிடலாம் என கனவு காண்கிறார்கள்.

    ஆனால், இதற்கெல்லாம் அஞ்சுகிற பழக்கமோ, கவன சிதைவுக்கு ஆளாகிற வழக்கமோ நம் கழகத் தொண்டர்களுக்கு ஒருபோதும் இல்லை. “வெல்லப் பாயும் குதிரை, கொல்லையும் நோக்காது, புல்லையும் பார்க்காது” என்பது போல, கொண்ட குறிக்கோளை வென்றெடுப்பதில் இம்மியளவும் விலகாமல் சரித்திரம் படைப்பது தான் நம் கழகத்தின் வரலாறு.

    எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால் நமது பாதை சரியாக இருக்கிறது என்பது தானே அர்த்தம். இன்று மாநிலத்திலும், மத்தியிலும் ஆட்சியில் இருக்கக்கூடிய நாமும், பாரதிய ஜனதா கட்சியும் செய்திருக்கும் மகத்தான சாதனைகளை, மக்கள் நலப் பணிகளை மக்களிடம் எடுத்துச் சொல்கிறோம்.

    எஞ்சியிருக்கும் பணிகளை விரைவில் செய்து முடித்திடுவோம் என்கிற உளமார்ந்த உறுதியையும் அவர்களிடம் தருகிறோம். இதனால், அலை அலையாய் அணிவகுக்கும் மக்கள் இலைக்கும், பூவுக்கும், கனிக்குமே எங்கள் ஓட்டு என்று முரசடித்துச் சொல்கிறார்கள்.

    ஆனால், ஐந்து முறை ஆட்சி செய்த திமுகவும் சரி, ஐம்பதாண்டு காலம் ஆட்சி செய்த காங்கிரசும் சரி, தாங்கள் செய்த சாதனைகள் என்று சொல்வதற்கு ஏதும் இல்லாதவர்களாய்.... கச்சத்தீவை தாரை வார்த்ததும், காவிரி துரோகமும், இலங்கையில் அவர்கள் கரம் கோர்த்து நடத்திய இன அழிப்புப் படுகொலைகளும், அவர்கள் கண் முன்னே வந்து நிற்பதால், வெட்கப்பட்டுக்கொண்டு எடுத்துச் சொல்ல சாதனை எதுவும் இல்லாத காரணத்தால், எங்கள் மீதும், கழகத்தின் மீதும், பாரதப் பிரதமர் மீதும் தரம் தாழ்ந்த விமர்சனங்களைத் தொடுக்கிறார்கள்.

    ஏற்கெனவே குற்றம் புரிந்தவர்களைக் கூட்டி வந்து, கொலைப் பழி சுமத்த சதித் திட்டம் தீட்டி மூக்கறுபட்டவர்கள், இனி என்ன செய்வது என்றே தெரியாத கையறு நிலையில் நின்றுகொண்டு கரன்சிகளை அள்ளிவிட்டு தி.மு.க.வின் அன்றைய திருமங்கலம் பாணியில் தேர்தல் ஜனநாயகத்தை விலைபேசத் திட்டமிடுகிறார்கள். இதற்கு சாட்சி தான்,



    தி.மு.க. பொருளாளர் துரை முருகன் வீட்டில் மலை மலையாய், கத்தை கத்தையாய் கைப்பற்றப்பட்டிருக்கும் கோடான கோடி பணம்.

    ஆனால், நெறிபிறழாத வழியில் எதற்கும் அஞ்சாது நாம் செய்த சாதனைகளை, நாம் மீட்டெடுத்த உரிமைகளின் பெருமைகளை மக்களிடம் வீடு வீடாய் எடுத்துச்சொல்லி ஓட்டு வேட்டையாடிவரும் எங்களின் உயிரினும் மேலான கழகக் கண்மணிகளுக்கும், கூட்டணி இயக்கங்களின் குலையா உறுதிகொண்ட தொண்டர்களுக்கும் எங்களது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

    நாம் தர்மத்தின் வழியில் நிற்கிறோம். பாரதிய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கழகம், தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி, அகில இந்திய சூ.சு. காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றோம்.

    மேலும், தோழமைக் கட்சிகளான அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம், அகில இந்திய புரட்சி பார்வர்ட் பிளாக், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, மனித உரிமை காக்கும் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, புரட்சி பாரதம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், கொங்குநாடு முன்னேற்றக் கழகம், இந்திய தேசிய முஸ்லீம் லீக், கிறிஸ்தவ முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும், இயக்கங்களும், சங்கங்களும், கழகக் கூட்டணிக்கு ஆதரவாக தங்களின் உளமார்ந்த ஈடுபாட்டுடன் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

    பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கையை அனைவரும் பாராட்டுகின்றனர். இப்படி, மக்களை ஈர்க்கும் காந்தங்கள் எல்லாம் நம்முடன் இருப்பதோடு, புரட்சித்தலைவர், அம்மா ஆகியோரது மனமார்ந்த ஆசியும், வாழ்த்தும், மக்களின் ஏகோபித்த ஆதரவும் நமக்குள்ளது. அதனால், நம் கூட்டணியின் வெற்றி உறுதிசெய்யப்பட்ட ஒன்று. எனவே, வாக்களிக்கும் வைபவத் திருநாளான ஏப்ரல் 18 வரை கழக கண்மணிகள் அனைவரும் மிகுந்த விழிப்போடு கண் துஞ்சாமல் களப்பணியாற்றிட வேண்டுகிறோம்.

    நாம் வலைதளத்தில் மட்டுமே வாழும் கட்சி அல்ல. நாம் தரைதளத்தில் ஆழமாய் வேர்விட்டு ஆயிரம் ஆயிரம் கிளைகள் பரப்பி பூத்துக் குலுங்குகின்ற ஆலவிருட்ச இயக்கம்.

    நாம் ஊடகங்களால் மட்டுமே தூக்கிப் பிடிக்கிற இயக்கம் அல்ல. ஊர் சனங்களின் உள்ளத்திலும், இல்லத்திலும் நிறை யாசனமிட்டு அமர்ந்திருக்கும் நிகரில்லா பேரியக்கம். இதனை கழகத்தின் தொண்டர்கள் ஒவ்வொருவரும் நெஞ்சத்தில் நிறுத்தி, விரோதமும், குரோதமும், துரோகமும் திரை மறைவு கூட்டுவைத்து கழகத்தை வீழ்த்தலாம் என காணும் கனவை சுக்குநூறாக்கி, நாம் “கோடிச் சிங்கத்தின் தைரியம் குடியிருக்கும் வீரத்திருமகளின் வளர்ப்பு” என்பதை உறுதிசெய்யும் தருணம் இது.

    ஒருவன் சொர்க்கத்தின் வாசலில் ஆயிரம் ஆண்டு தவம் இருந்தானாம்; சொர்க்க வாசல் எப்போது திறக்கும் என்று. அப்போது ஒரு கணம் கண்மூடி திறந்திருக்கிறான்.

    அந்த இடைவெளியில் சொர்க்கவாசல் கதவு திறந்து மூடிக்கொண்டதாம். அதுபோல, சில நேரங்களில் சில வருடங்களை விட சில விநாடிகள் முக்கியமாகி விடும். ஆம், கழகத் தொண்டர்களாகிய நமக்கு இப்போதைய ஒவ்வொரு விநாடியும் உன்னதமானவை என்பதை உணர்ந்து செயல்படுவோம்.

    ஆளுக்கு ஒரு ஓட்டு, நம் அம்மாவுக்கு ஒரு ஓட்டு, நம் இல்லத்து ஓட்டோடு மக்கள் திலகத்திற்காக இன்னொரு ஓட்டு என்பதையும் நெஞ்சத்தில் நிறுத்தி கடமையாற்றிடவும், கழகத்தை வெல்வதற்கு இவ்வுலகில் இன்னொரு இயக்கம் இல்லை என்பதை சித்திரைத் திங்களில் முத்திரைப் பதித்து உணர்த்திடவும், எங்கள் அருமை கழகத் தொண்டர்களே, நீங்கள் அனைவரும் கண் துஞ்சாமல் கடமையாற்றிட அன்போடு வேண்டுகிறோம்.

    மரம் தெரியவில்லை, கிளை தெரியவில்லை, கிளி தெரியவில்லை, கிளியின் கழுத்து மட்டுமே தெரிகிறது என்று சொல்லியடித்த மகாபாரதத்து அர்ச்சுனனின் வில்வித்தை போன்றது அ.தி.மு.க. தொண்டர்களின் தேர்தல் யுக்தி என்பதை உணர்த்திடும் வண்ணம் உழைத்திடுவீர்.

    கழகத்தின் ஆட்சிக் கால பெருமையையும், நாம் காவேரி உரிமையை மீட்ட பெருமிதத்தையும், நீர்நிலைகளை தூர்வாரி நீராபானம் கொண்டு வந்ததையும், மின் மிகை மாநிலமாய் மீட்டெடுத்த பெருமையையும், நிலப்பறிப்பு, அபகரிப்பு இல்லாத நிம்மதியான சட்டம்-ஒழுங்கை நிகழ்த்தி காட்டிய சிறப்பையும், மீத்தேனுக்கு முற்றுப்புள்ளி வைத்த மேன்மையையும், அரை நூற்றாண்டு கனவாகிய அத்திக்கடவுஅவிநாசி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய பெருமையையும், மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனையைக் கொண்டுவந்த நம் மகோன்னதத்தையும் மக்களிடம் பணிவோடு எடுத்துரைத்து வாகைத் தோரணம் அமைப்போம்.

    நாற்பது பாராளுமன்றத் தொகுதிகளில் மகத்தான வெற்றியையும், இம்மியளவும் குறையாத வகையில் இடைத்தேர்தலில் மொத்த வெற்றியையும் ஒருசேர வென்றெடுத்து, வங்கக் கடலோரம் சந்தனப் பேழையில் சாய்ந்துறங்கும் நம் தங்கத் தாரகையாம் அம்மா, பூக்களுக்கும் புன்னகையை கற்றுத் தந்த பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆகியோரது பொற்பாதக்கமலங்களில் காணிக்கையாய் சமர்ப்பிப்போம்; அ.தி.மு.க.வின் கூட்டணிக்கே மகத்தான வெற்றி என்பதை இனிப் பாக்குவோம்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். #Loksabhaelections2019 #ADMK #EPS #OPS
    திருப்போரூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் திருப்போரூர் பேரூராட்சி பகுதியில் கொளுத்தும் வெயிலில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். #LokSabhaElections2019 #ADMK

    திருப்போரூர்:

    திருப்போரூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் திருப்போரூர் பேரூராட்சி பகுதியில் கொளுத்தும் வெயிலில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அனைத்து வார்டுகளிலும் வீதி வீதியாக சென்று இப்பகுதி மக்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறி பாராளுமன்றம், சட்டமன்றத்துக்கு இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.

    முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, சிட்லபாக்கம் ராஜேந்திரன், தண்டரை மனோகரன், ஒன்றிய செயலாளர் குமரவேல், நகர செயலாளர் முத்து, டி.டி.மோகன், பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா. புரட்சி பாரதம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், வேட்பாளருடன் சென்று வாக்கு சேகரித்தனர். #LokSabhaElections2019 #ADMK

    கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் செல்லக்குமாரை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியபோது, வெறுப்பு அரசியலால் தமிழக மக்களை வழிநடத்த இயலாது என கூறினார். #LokSabhaElections2019 #RahulGandhi
    கிருஷ்ணகிரி:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

    இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று கிருஷ்ணகிரியில்  நடைபெற்ற பிரசாரப்பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு, பாராளுமன்ற தேர்தலின் காங்கிரஸ் வேட்பாளர் செல்லக்குமாரை  ஆதரித்து  பேசியதாவது:

    இங்கு வந்திருக்கக்கூடிய தொண்டர்கள், மக்களுக்கு மனமார வணக்கம் தெரிவிக்கிறேன். இந்தியா எனும் ஒரு நாட்டிற்கு பல்வேறு வித்தியாசங்கள் உள்ளன. அனைத்தும் தனித்தன்மை வாய்ந்தது. இந்த வித்தியாசங்கள், நாகரீகம் , பண்பாடு,  வரலாறு, மொழி, ஆகியவற்றை நாம் அதிகம் மதிக்கின்றோம்.

    நாட்டில் ஒவ்வொருவருக்கும் தனி அடையாளம் உண்டு. திமுக, காங்கிரஸ் மற்றும் தோழமை கட்சிகள் கூட்டணி, பாஜகவை எதிர்க்கின்றது. அவரது ஒரு சிந்தனை மக்களை வழிநடத்தும் என பிரதமர் மோடி நினைக்கிறார். இந்த நாட்டில் கோடிக்கணக்கான மக்களுக்கு தனிப்பட்ட சிந்தனை இருப்பதை மறந்துவிடுகிறார்.



    தமிழக மக்கள் நினைத்தால் மத்தியிலும் ஆட்சியை மாற்ற இயலும். தமிழ் மக்களின் கலாச்சாரம், தமிழ் மீதான பற்று ஆகியவற்றை மற்றவர்களால் கட்டுப்படுத்த முடியாது. தமிழர்களால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். தமிழக மக்களை அவமதிப்பதால் பாஜக, அதிமுக ஆகியன எப்போதும் ஆட்சி நடத்த இயலாது. அன்பு செலுத்தினால் மட்டுமே ஆட்சி செய்ய இயலும். நான் அதை நன்கு புரிந்திருக்கிறேன். வெறுப்பு அரசியலால் தமிழக மக்களை வழிநடத்த இயலாது. பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலம் தமிழ்நாடு என தெரியும்.

    மக்களுக்கு செல்ல வேண்டிய பணம் அனைத்தும் பாஜகவைச் சேர்ந்த 15 பேருக்கு மட்டுமே செல்கிறது. தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்திய போது பிரதமர் மோடி பார்க்கக்கூட இல்லை. இளைஞர்களுக்கு எங்கும் வேலையும்  கிடைக்கவில்லை. எனவே தான் நாட்டில் அனைத்து தரப்பு மக்களுக்கும்  நியாயம் கிடைக்கவே காங்கிரஸ் கட்சியினர்  போராடி வருகிறோம்.

    ஜிஎஸ்டி வரி வணிகத்தை அழித்திருக்கிறது. திருப்பூர் வேலைக்கொடுக்கக்கூடிய நகரம், அது இந்த ஆட்சியில் அழிக்கப்பட்டுள்ளது. இந்த கபர்சிங் வரியால் மக்கள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டனர். சரியான நேரத்தில் நியாய் திட்டத்தின் மூலம் ரூ.72 ஆயிரம் பணம் நாட்டில் வாழும் 20% ஏழை மக்களுக்கு அளிக்கப்படும்.

    ஏழைகளின் எண்ணிக்கையை கணக்கெடுத்த பின்னர் தான் பணம் வங்கிக்கணக்கில் போடப்படும். ஏழைக் குடும்பங்கள் இதனால் பலன் பெறும்.   மேலும் தமிழகத்தில் தமிழனான ஸ்டாலின் முதல்வராக வேண்டும்.

    வறுமைக்கு எதிராக சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்த வேண்டும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், உங்கள் குழந்தைகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். காஞ்சிபுரம், திருப்பூர் மீண்டும் புத்துயிர் பெறும். காலியாக இருக்கும் பணியிடங்கள் நிரப்பப்படும்.  நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் விவசாயிகளுக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். அரசு எப்போதும் விவசாயிகளுடன் இருக்கும் என்பதை உணர்த்தும் வகையில் ஆட்சி நடத்துவோம்.

    இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #RahulGandhi


    மேற்கத்திய நாடுகள் மூலம் பாகிஸ்தான் பொருளாதாரத்தை மேம்படுத்த மோடியை இம்ரான்கான் புகழ்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. #PMModi #Imrankhan
    புதுடெல்லி:

    ‘இந்தியாவில் மீண்டும் மோடி ஆட்சி அமைத்தால் பேச்சுவார்த்தை மூலம் காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க முடியும்’ என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கருத்து வெளியிட்டு இருந்தார். இது காங்கிரஸ் கட்சியால் விமர்சிக்கப்பட்டது. இந்தநிலையில் பிரதமர் மோடி சிறந்தவர் என இம்ரான்கான் புகழ்ந்தது ஏன் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    பாகிஸ்தானில் ஆட்சி செய்யும் இம்ரான்கானின் அரசு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. சர்வதேச நிதியகம் பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த நிதி உதவியை நிறுத்தி விட்டது. பயங்கரவாதிகள் பிரச்சனையால் அதிருப்தி ஆன அமெரிக்காவும் நிதி உதவி வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளது. இத்தகைய காரணங்களால் தற்போது பாகிஸ்தானில் கடும் நிதி நெருக்கடி உள்ளது.

    அதை சமாளிக்க இம்ரான் கான் தனது பாரம்பரிய நட்பு நாடுகளான வளைகுடா நாடுகளிடம் கூடுதல் நிதி உதவியை பெற்றார். இருந்தும் அது போதுமானதாக இல்லை. இதுதவிர அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக நட்பு நாடுகளான சீனாவும், பாகிஸ்தானுக்கு பொருளாதார உதவிகள் அளித்து வருகிறது.



    அத்துடன் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளிடம் இருந்து நிதி உதவி பெற்று அதன் மூலம் பாகிஸ்தான் பொருளாதாரத்தை மேம்படுத்த இம்ரான்கான் விரும்புகிறார். அதற்காகவே அண்டை நாடான இந்திய பிரதமர் மோடியை பாராட்டி புகழ்ந்ததாக தெரிகிறது.

    பாகிஸ்தானில் பிப்ரவரி மாத அன்னிய செலாவணி கையிருப்பு 8 பில்லியன் டாலராக இருந்தது. அது 2 மாதங்களுக்கான இறக்குமதிக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் அன்னிய செலாவணி கையிருப்பு 12 பில்லியன் டாலர் இருந்தது. #PMModi #Imrankhan
    தேர்தலில் போட்டியிட நான் சீட் கேட்கவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு கூறினார். #LokSabhaElections2019 #Kushboo
    பெங்களூரு:

    நடிகை குஷ்பு நிருபர்களிடம் கூறியதாவது:-

    நான் தேர்தலில் போட்டியிட போகிறேன் என்று சொன்னேனா? எனக்கு இதுபோன்ற வதந்திகள் புதிதல்ல. தி.மு.க.வில் இருக்கும்போது 2011-ல் இதே பேச்சு வந்தது. 2014, 2016 மற்றும் 2019 வரை இதே பேச்சு தொடர்ந்து கொண்டிருகிறது. எனக்கு இது பழக்கம் ஆகிவிட்டது.

    ஒவ்வொரு முறையும் சீட் கொடுக்கவில்லை. அதனால் குஷ்பு வருத்தத்தில் இருக்கிறார் என்கிறார்கள். நான் எப்போது சீட் கேட்டேன்? தி.மு.க.விலோ, காங்கிரசிலோ இதுவரை நான் சீட்டு கேட்டதேயில்லை.

    நான் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர். அது தொடர்பான பணிகளே நிறைய இருக்கிறது. பல்வேறு மாநிலங்களுக்கும் செல்ல வேண்டியிருக்கிறது.

    தேசிய பொறுப்பில் இருப்பதால் இந்தியா முழுவதும் சென்று கொண்டிருக்கிறேன். அதற்காக நான் செல்லும் இடமெல்லாம், நானும் ஜெயிலுக்கு போறேன் என்று தண்டோரா போட முடியாது என்னைப் பற்றி கட்சிக்கு நன்றாக தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #Kushboo
    பாரதிய ஜனதா கட்சி இதுவரை இல்லாத அளவில் பாராளுமன்ற தேர்தலில் அதிக அளவிலான தொகுதிகளில் போட்டியிடுகிறது. #Loksabhaelections2019 #BJP
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி ஆட்சியை பிடிப்பதற்காக பா.ஜனதா, காங்கிரஸ் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

    இரு தேசிய கட்சிகளும் பெரும்பாலான மாநிலங்களில் மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளன. அந்த கட்சிகளுக்கு கணிசமான தொகுதிகளையும் விட்டு கொடுத்துள்ளன.

    இதற்கிடையே பாராளுமன்றத்தில் 272 எம்.பி.க்களுக்கு மேல் பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற இலக்கையும் பா.ஜனதாவும், காங்கிரசும் கொண்டுள்ளன. இதை கருத்தில் கொண்டு இரு கட்சிகளும் அதிக தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன.

    நாடு முழுவதும் மொத்தம் 543 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. காங்கிரஸ் கட்சி சுமார் 400 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. ஆனால் பாரதிய ஜனதா கட்சி அதையும் விட அதிகமான இடங்களில் களம் இறங்கி உள்ளது.

    பாரதிய ஜனதா கட்சி கடந்த 1999-ம் ஆண்டு 339 தொகுதிகளில் போட்டியிட்டது. 2004-ம் ஆண்டு 364 தொகுதிகளில் போட்டியிட்டது. 2009-ம் ஆண்டு 433 தொகுதிகளில் போட்டியிட்டது.

    2014-ம் ஆண்டு 428 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்த ஆண்டு அதையும் விட அதிகமாக வேட்பாளர்களை நிறுத்த பா.ஜனதா தலைவர்கள் முடிவு செய்தனர்.

    இதுவரை பா.ஜனதா சார்பில் 408 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 135 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட வேண்டி உள்ளது. இதில் பெரும்பாலான தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும்.

    பா.ஜனதா இன்னும் 30 முதல் 40 தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அறிவிக்கும்போது பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை சுமார் 440-ஐ எட்டும்.

    பா.ஜனதா வரலாற்றில் இவ்வளவு அதிக தொகுதிகளில் அந்த கட்சி போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும்.

    டெல்லியில் மொத்தம் 7 தொகுதிகள் உள்ளன. அந்த 7 தொகுதிகளுக்கு பா.ஜனதா வேட்பாளர்களை அறிவிக்க உள்ளது. உத்தரபிரதேசத்திலும் இன்னும் 8 தொகுதிகளுக்கு பா.ஜனதா வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும்.

    அதுபோல மத்திய பிரதேசத்திலும் மிக முக்கிய தொகுதிகளான இந்தூர், போபால் உள்பட 8 தொகுதிகளுக்கு பா.ஜனதா வேட்பாளர்களை அறிவிக்காமல் உள்ளது. பஞ்சாபில்-3, அரியானாவில்-2, ராஜஸ்தானில் ஒரு தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்க வேண்டியது உள்ளது.

    ஆந்திரா, தெலுங்கானாவில் கூட்டணி அமையாததால் பா.ஜனதா கட்சி அங்குள்ள 42 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. இதனால்தான் இந்த தடவை பா.ஜனதா வேட்பாளர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து விட்டது. #Loksabhaelections2019 #BJP
    ×