search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மக்களவை தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டியிடும் பாஜக
    X

    மக்களவை தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டியிடும் பாஜக

    பாரதிய ஜனதா கட்சி இதுவரை இல்லாத அளவில் பாராளுமன்ற தேர்தலில் அதிக அளவிலான தொகுதிகளில் போட்டியிடுகிறது. #Loksabhaelections2019 #BJP
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி ஆட்சியை பிடிப்பதற்காக பா.ஜனதா, காங்கிரஸ் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

    இரு தேசிய கட்சிகளும் பெரும்பாலான மாநிலங்களில் மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளன. அந்த கட்சிகளுக்கு கணிசமான தொகுதிகளையும் விட்டு கொடுத்துள்ளன.

    இதற்கிடையே பாராளுமன்றத்தில் 272 எம்.பி.க்களுக்கு மேல் பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற இலக்கையும் பா.ஜனதாவும், காங்கிரசும் கொண்டுள்ளன. இதை கருத்தில் கொண்டு இரு கட்சிகளும் அதிக தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன.

    நாடு முழுவதும் மொத்தம் 543 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. காங்கிரஸ் கட்சி சுமார் 400 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. ஆனால் பாரதிய ஜனதா கட்சி அதையும் விட அதிகமான இடங்களில் களம் இறங்கி உள்ளது.

    பாரதிய ஜனதா கட்சி கடந்த 1999-ம் ஆண்டு 339 தொகுதிகளில் போட்டியிட்டது. 2004-ம் ஆண்டு 364 தொகுதிகளில் போட்டியிட்டது. 2009-ம் ஆண்டு 433 தொகுதிகளில் போட்டியிட்டது.

    2014-ம் ஆண்டு 428 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்த ஆண்டு அதையும் விட அதிகமாக வேட்பாளர்களை நிறுத்த பா.ஜனதா தலைவர்கள் முடிவு செய்தனர்.

    இதுவரை பா.ஜனதா சார்பில் 408 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 135 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட வேண்டி உள்ளது. இதில் பெரும்பாலான தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும்.

    பா.ஜனதா இன்னும் 30 முதல் 40 தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அறிவிக்கும்போது பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை சுமார் 440-ஐ எட்டும்.

    பா.ஜனதா வரலாற்றில் இவ்வளவு அதிக தொகுதிகளில் அந்த கட்சி போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும்.

    டெல்லியில் மொத்தம் 7 தொகுதிகள் உள்ளன. அந்த 7 தொகுதிகளுக்கு பா.ஜனதா வேட்பாளர்களை அறிவிக்க உள்ளது. உத்தரபிரதேசத்திலும் இன்னும் 8 தொகுதிகளுக்கு பா.ஜனதா வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும்.

    அதுபோல மத்திய பிரதேசத்திலும் மிக முக்கிய தொகுதிகளான இந்தூர், போபால் உள்பட 8 தொகுதிகளுக்கு பா.ஜனதா வேட்பாளர்களை அறிவிக்காமல் உள்ளது. பஞ்சாபில்-3, அரியானாவில்-2, ராஜஸ்தானில் ஒரு தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்க வேண்டியது உள்ளது.

    ஆந்திரா, தெலுங்கானாவில் கூட்டணி அமையாததால் பா.ஜனதா கட்சி அங்குள்ள 42 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. இதனால்தான் இந்த தடவை பா.ஜனதா வேட்பாளர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து விட்டது. #Loksabhaelections2019 #BJP
    Next Story
    ×