search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் 4 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு
    X

    டெல்லியில் 4 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு

    டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் முதல்கட்டமாக 4 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். #Congress #Loksabhaelections2019
    புதுடெல்லி:

    டெல்லியில் மொத்தம் 7 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் கூட்டணி அமைத்து போட்டியிட காங்கிரஸ் கட்சியும், ஆம் ஆத்மி கட்சியும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தன.

    ஆனால் அந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படவில்லை. இதனால் 7 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

    டெல்லியில் 7 தொகுதிகளிலும் யார் யாரை வேட்பாளர்களாக நிறுத்தலாம் என்று நேற்று மாலை நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அப்போது ஏற்கனவே போட்டியிட்ட மூத்த தலைவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது.

    அந்த கோரிக்கையை காங்கிரஸ் தலைவர் ராகுல் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் முதல்கட்டமாக 4 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    புதுடெல்லி தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய்மக்கான் நிறுத்தப்பட்டுள்ளார். மற்றொரு மூத்த தலைவர் கபில்சிபல் சாந்தினி சவுக் தொகுதியில் போட்டியிடுகிறார்.

    வடகிழக்கு டெல்லி தொகுதியில் ஜே.பி.அகர்வால், வடமேற்கு டெல்லி தொகுதியில் ராஜ்குமார் சவுகான், காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளனர். கடந்த 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் கபில் சிபல், அஜய்மக்கான், அகர்வால் ஆகிய மூவரும் போட்டியிட்டு பா.ஜனதா வேட்பாளர்களிடம் தோல்வியடைந்தனர்.

    தற்போது அவர்கள் மூவருக்கும் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    தெற்கு டெல்லி, மேற்கு டெல்லி, கிழக்கு டெல்லி ஆகிய 3 தொகுதிகளுக்கும் காங்கிரஸ் வேட்பாளர்களாக யாரை நிறுத்தலாம் என்று ஆலோசனை நடந்து வருகிறது. ஓரிரு நாட்களில் அவர்கள் பெயர் வெளியிடப்படும் என்று டெல்லி மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் பி.சி.சாக்கோ தெரிவித்தார். #Congress #Loksabhaelections2019
    Next Story
    ×