என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சுனிரை ஆதரித்து முதல்-மந்திரி பினராயி விஜயன் வயநாடு தொகுதி கல்பட்டாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரசாரம் செய்தார். #LokSabhaElections2019 #PinarayiVijayan
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் பாராளுமன்ற தேர்தலில் கம்யூனிஸ்டு கூட்டணிக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் கடும் போட்டி நிலவுகிறது.

    கேரளாவில் உள்ள 20 எம்.பி. தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்றும் எண்ணத்துடன் வியூகம் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். இது கேரள காங்கிரசாரிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    வயநாடு தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சுனிர், பா.ஜனதா கூட்டணி சார்பில் பாரத் தர்ம ஜனசேனா கட்சி தலைவர் துஷார் வெள்ளாப் பள்ளி ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

    கேரளாவில் வயநாடு தொகுதியில் தான் அதிகபட்சமாக 20 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வயநாடு தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக கருதப்படுவதால் இங்கு ராகுல் வெற்றி பெறுவது எளிது என்று அந்த கட்சியினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.

    அதே சமயம் வயநாடு தொகுதியில் ராகுலை தோற்கடித்து தங்கள் கட்சி வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதில் ஆளும் கம்யூனிஸ்டு கட்சி தீவிரமாக உள்ளது.

    இதற்காக கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சுனிரை ஆதரித்து முதல்-மந்திரி பினராயி விஜயன் வயநாடு தொகுதி கல்பட்டாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு கேரள மாநிலத்திற்கு எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. ஆனால் பாராளுமன்ற தேர்தலையொட்டி மக்களை திசை திருப்பி, அவர்களை ஏமாற்றி ஓட்டுகளை பெற அவர்கள் பொய் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

    2014-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கூறியதை பா.ஜனதா ஏன் நிறைவேற்றவில்லை? தற்போது மீண்டும் தாங்கள் செயல்படுத்த போகும் திட்டங்களை கூறி ஓட்டு கேட்கிறார்கள்.

    சொன்னதை கூறி அவர்களால் ஓட்டு கேட்க முடியவில்லை. அதனால் பா.ஜனதா இதுபோன்ற கபட நாடகம் நடத்தி வெற்றி பெறலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் வயநாடு தொகுதி மட்டுமல்ல கேரளாவில் உள்ள 20 பாராளுமன்ற தொகுதியிலும் கம்யூனிஸ்டு கூட்டணி தான் வெற்றி பெறும். மக்கள் கம்யூனிஸ்டு கட்சி பக்கம் தான் உள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.  #LokSabhaElections2019 #PinarayiVijayan



    தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் பெற்ற நன்கொடை தொடர்பான விவரங்களை தாக்கல் செய்யும்படி அரசியல் கட்சிகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #LokSabhaElections2019 #ElectoralBonds #SupremeCourt
    புதுடெல்லி:

    தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் நிதி பெறுவதில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வருவதற்காக தேர்தல் பத்திரங்களை மத்திய அரசு கடந்த 2016ல் அறிமுகப்படுத்தியது. இந்திய குடிமக்கள், அமைப்புகள் யார் வேண்டுமானாலும் தேர்தல் பத்திரங்களை வாங்கி அரசியல் கட்சிகளுக்கு கொடுக்கலாம். இவற்றை அரசியல் கட்சிகள் வங்கியில் செலுத்தி பணமாக்கிக் கொள்ளலாம்.

    இந்த தேர்தல் பத்திரம் திட்டத்தை எதிர்த்து தன்னார்வ தொண்டு நிறுவனமான ஜனநாயக சீர்த்திருத்த அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

    இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் வேணுகோபால், தேர்தல் நிதி பத்திரங்கள் வாங்கி, அதன்மூலமாக அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை கொடுப்பது என்பது, ரொக்கமாக கொடுப்பதை விட சிறந்தது என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், மறுநாள் உத்தரவு வழங்குவதாக கூறினர்.



    அதன்படி இவ்வழக்கில் இன்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். அப்போது தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் நன்கொடை பெற்ற அரசியல் கட்சிகள், நன்கொடையாளர்களின் பெயர்கள் மற்றும் பெறப்பட்ட தொகை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் மே 30ம் தேதிக்குள் தாக்கல் செய்யவேண்டும் என தெரிவித்தனர். இந்த அறிக்கையை சீலிட்ட உறையில் வைத்து, தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டனர். #LokSabhaElections2019 #ElectoralBonds #SupremeCourt
    உத்தரகாண்டில் நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவின்போது , வாக்குச்சாவடிக்குள் செல்பி எடுத்த பாஜக தலைவர்கள் உட்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #Casefiled #ModelCodeofConduct
    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலத்தில் நேற்று ஒரே கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணி முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவில் ஏராளமான மக்கள் தங்கள் ஜனநாயக கடமை ஆற்ற, வாக்குச்சாவடிகளில் சென்று வாக்களித்தனர். இந்த வாக்குப்பதிவில் புதிய வாக்களர்களும் மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் வாக்களித்தனர்.

    தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடிகளில் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறக்கூடாது எனவும், தேர்தல் விதிகளை மீறி மக்கள் செயல்படுவதை தடுக்கவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. மேலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.



    வாக்குச்சாவடிக்குள் செல்போன் எடுத்துச் செல்லவும் அங்கு உள்ள ஆவணங்கள், மற்றும் வாக்கு இயந்திரங்களை புகைப்படம் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று உத்தரகண்டில் பாஜக தலைவர்கள் 4 பேர் உட்பட 11 வாக்காளர்கள், வாக்குச்சாவடிக்குள் வாக்களித்துவிட்டு செல்பி எடுத்துள்ளனர்.

    இதையடுத்து அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் செல்பி எடுத்தது தொடர்பாக அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. #Casefiled #ModelCodeofConduct



    பாரதிய ஜனதா தேர்தல் அறிக்கை குறித்த ரஜினிகாந்தின் கருத்து மகிழ்ச்சி அளிக்கிறது என்று இல.கணேசன் தெரிவித்தார். #Loksabhaelections2019 #BJP #LaGanesan #Rajinikanth
    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து இல.கணேசன் எம்.பி. நாகர்கோவிலில் நேற்று பிரசாரம் செய்தார்.

    முன்னதாக இல.கணேசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கை விவசாயிகள் மற்றும் ஏழை மக்கள் பயன்பெறும் வகையிலும், பயங்கரவாதத்தை அழிக்கும் வகையிலும் இருக்கிறது.

    ஆனால் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பயங்கரவாதத்திற்கு இடம் அளிக்கும் வகையில் உள்ளது. கி.வீரமணி இந்து கடவுளை அவதூறாக பேசியதை மூடி மறைக்கும் வகையில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பதில் அளிக்கிறார்.

    கடந்த தேர்தலிலேயே காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சிக்கான அந்தஸ்தை இழந்து விட்டது. இந்த தேர்தலில் நாடு முழுவதும் 40 தொகுதிகளில் வெற்றி பெறுவதே காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சவாலாக இருக்கும்.

    தன்னை கொல்ல சதி நடப்பதாக ராகுல் மலிவான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஸ்டாலினின் பேச்சுக்கள் பண்பில்லாதவை. போலித்தனமாவை. தற்போது கண்ணியம் என்பது பிரசாரத்தில் இல்லாமலே போய் விட்டது. பாரதிய ஜனதா தேர்தல் அறிக்கை குறித்த ரஜினியின் கருத்து மகிழ்ச்சி அளிக்கிறது.

    தமிழகம் மற்றும் புதுவையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி 40 தொகுதிகளையும் கைப்பற்றும். தமிழகத்தில் பா.ஜனதா போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Loksabhaelections2019 #BJP #LaGanesan #Rajinikanth
    அண்ணாநகரில் உள்ள தி.மு.க. பிரமுகர் பரமசிவம் வீட்டில் இன்று காலை மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இதில் வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்தது. #PetrolBomb
    சென்னை:

    அண்ணாநகர் தி.மு.க. பகுதி செயலாளராக இருப்பவர் பரமசிவம். டி.பி.சத்திரம் தர்மராஜா கோவில் தெருவில் இவரது வீடு உள்ளது.

    இன்று காலை 6 மணியளவில் பரமசிவத்தின் வீட்டுக்கு வந்த மர்ம கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீசியது. வீட்டின் முன்பகுதியில் பெட்ரோல் நிரப்பிய பாக்கெட்டுகளையும், பாட்டில்களையும் வீசியதில் அது வெடித்து சிதறியது.

    இதில் வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த பரமசிவத்தின் கார் தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக அங்கிருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் டி.பி.சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பரமசிவத்தின் வீட்டு முன்பு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை போட்டு பார்த்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெட்ரோல் குண்டுகளை வீசியது யார்? என்பது தெரியவில்லை. அவர்களை பிடிக்க போலீசார் வலை விரித்துள்ளனர். பரமசிவம் வீட்டை சுற்றியுள்ள சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.



    பெட்ரோல் குண்டுகளை வீசியவர்களை பிடிக்க கீழ்ப்பாக்கம் உதவி கமி‌ஷனர் ஜெகதீஸ்வரன் தலைமையிலான போலீசார் தனிப்படை அமைத்து தேடிவருகிறார்கள்.

    அமைந்தகரை மஞ்சாங் கொள்ளை தெரு பகுதியில் நேற்று தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர், எஸ்.டி.பி.ஐ. வேட்பாளர் தெகலான்பாகவிக்கு ஆதரவு திரட்டினர். இந்திய தவ்கீத் ஜமாத் அமைப்பை சேர்ந்த பெண்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் வாக்காளர் பட்டியலை வீடு வீடாக சரிபார்த்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு திரண்ட தி.மு.க.வினர், தவ்கீத் ஜமாத் பெண்களை தாக்கியதாக தெரிகிறது. இது தொடர்பாக அமைந்தகரை போலீசில் பரமசிவம் உள்பட 10-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் மீது புகார் கூறப்பட்டுள்ளது.

    அதில் எஸ்.டி.பி.ஐ. வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்த பெண்களை தி.மு.க.வினர் தாக்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் நேற்று இரவு 9.30 மணியளவில் நடந்தது. இதன் பின்னர் அமைந்தகரை போலீஸ் நிலையத்தில் தி.மு.க.வினரும், தினகரன் கட்சியினரும், எஸ்.டி.பி.ஐ. கட்சியினரும் நூற்றுக்கணக்கில் திரண்டிருந்தனர். இதனால் நள்ளிரவு வரையில் பரபரப்பு நிலவியது.

    இந்த நிலையில்தான் தி.மு.க. பிரமுகர் பரமசிவம் வீட்டில் இன்று காலையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இதனால் மோதல் சம்பவத்துக்கும், பெட்ரோல்  குண்டு வீச்சு சம்பவத்துக்கும் தொடர்பு உள்ளதா? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. #PetrolBomb
    வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். #LokSabhaElections2019 #ITRaids
    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடாவைத் தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனைகளில் பலகோடி ரூபாய் பணம் சிக்கி உள்ளது. இதேபோல் வருமான வரித்துறையினரும் சோதனை நடத்தி, கோடிக்கணக்கில் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.



    இந்நிலையில், சென்னை, நெல்லை மற்றும் நாமக்கல் உள்டபட 18 இடங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை மற்றும் நாமக்கல்லில் தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான 7 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக, கணக்கில் வராத பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. #LokSabhaElections2019 #ITRaids
    தேனியில் மோடி பிரசார கூட்டத்தில் இறங்க வேண்டிய ராணுவ ஹெலிகாப்டர் ராகுல் காந்தி பேசும் மேடை அருகே இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. #Loksabhaelections2019 #PMModi #Rahulgandhi
    தேனி:

    தேனி பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் போட்டியிடுகிறார். ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக லோகிராஜனும், பெரியகுளம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக மயில்வேலும் போட்டியிடுகின்றனர்.

    இவர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய ஆண்டிப்பட்டி அருகே எஸ்.எஸ்.புரத்தில் நாளை (13-ந் தேதி) பிரதமர் நரேந்திரமோடி தேனி வருகிறார். இதற்காக பிரசார மேடை மற்றும் ஹெலிகாப்டர் தளம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இதே போல தேனி அன்னஞ்சிபிரிவு அருகே இன்று மாலை தேனி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரசாரம் செய்ய உள்ளார். இதற்காக மேடை அருகே ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட்டுள்ளது.



    தேனியில் பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் அடுத்தடுத்து வருகை தருவதால் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டத்துக்கு மதுரையில் இருந்து கூட்டம் நடக்கும் ஆண்டிப்பட்டி பிரசார மேடைப்பகுதியில் உள்ள ஹெலிகாப்டர் தளத்துக்கு ராணுவ ஹெலிகாப்டர் சோதனை ஓட்டம் நடத்தி பார்க்கப்பட்டது. ராணுவ ஹெலிகாப்டர் மோடி பங்கேற்கும் ஆண்டிப்பட்டி தளத்தில் இறங்குவதற்கு பதிலாக தேனியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு அமைக்கப்பட்ட ஹெலிகாப்டர் தளத்தில் வந்து இறங்கியது.

    சிறிது நேரம் கழித்தே தவறுதலாக தரை இறங்கியது பைலட்டுக்கு தெரிய வந்தது. இதனையடுத்து விரைவாக அங்கிருந்து கிளம்பிய ராணுவ ஹெலிகாப்டர் ஆண்டிப்பட்டியில் மோடிக்கு அமைத்திருந்த தளத்துக்கு சென்றது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் மீண்டும் ஒரு முறை சோதனை ஓட்டம் நடத்தி இடத்தை உறுதி செய்தனர். #Loksabhaelections2019 #PMModi #Rahulgandhi
    உத்தரபிரதேசத்தில் அமேதி தொகுதியில் போட்டியிடும் ஸ்மிரிதி இரானி பட்டப்படிப்பு முடிக்கவில்லை எனவும், சொத்து மதிப்பு ரூ.4.71 கோடி எனவும் வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #SmritiIrani
    அமேதி:

    பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசம் மாநிலம் அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் , வேட்பாளருமான ராகுல் காந்தியை எதிர்த்து  பாஜக சார்பில் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி போட்டியிடுகிறார்.

    இதையடுத்து வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று அமேதி தொகுதியை  அடைந்த ஸ்மிரிதி இரானி, உத்தரபிரதேச மாநிலம் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உடன் ஊர்வலமாக வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    கடந்த 2014ம் ஆண்டு ஸ்மிர்தி இரானி  வேட்புமனு தாக்கல் செய்தபோது, 1994ம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார்.   இதனை எதிர்கட்சியினர் தொடர்ந்து மறுத்து வந்தனர்.



    இந்நிலையில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தபோது சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில்  ஸ்மிரிதி இரானி பட்டப்படிப்பை முடிக்கவில்லை எனவும், அவரது சொத்து மதிப்பு ரூ.4.71 கோடி எனவும் கூறப்பட்டுள்ளது.

    இதில் ரூ.1.75 கோடி அசையும் சொத்துக்கள் ஆகும். இரானிக்கு ரூ.13.14 லட்சம் மதிப்புள்ள வாகனங்களும், ரூ.21 லட்சம் மதிப்புள்ள நகைகளும் உள்ளன. ரூ.1.45 கோடி மதிப்புள்ள விவசாய நிலம் மற்றும்  ரூ.1.50 கோடி மதிப்புள்ள தங்கியிருக்கும் வீடுஆகியவற்றுடன் சேர்த்து ரூ.2.96 கோடி அசையா சொத்துக்களும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஸ்மிரிதி இரானியின் கணவர் ஜுபின் இரானியின் சொத்து மதிப்பில் ரூ.1.69கோடி அசையும் சொத்துக்கள் எனவும், ரூ.2.97கோடி அசையா சொத்துக்கள் எனவும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  #LokSabhaElections2019 #SmritiIrani
    ஆந்திர பிரதேசத்தில் இயந்திர கோளாறு மற்றும் வன்முறை காரணமாக வாக்குப்பதிவு தாமதம் ஆனதால், பல வாக்குச்சாவடிகளில் நள்ளிரவு வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. #LokSabhaElections2019 #AndhraVoterTurnout
    அமராவதி:

    17-வது மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது. 18 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆந்திராவில் மக்களவை தேர்தலோடு அம்மாநில சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு தொடங்கியபோது, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பல்வேறு பூத்களில் செயல்படவில்லை. இதனால் நீண்ட நேரம் காத்திருந்த வாக்காளர்கள் திரும்பி சென்றுவிட்டனர். அதேசமயம், ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்களும் நடைபெற்றன.



    இயந்திரக்கோளாறு, மோதல் ஆகியவற்றால் சுமார் 400 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தாமதம் ஆனது. 6 மணிக்குள் வாக்களிக்க வந்து காத்திருந்த அனைத்து வாக்காளர்களையும் ஓட்டுப்பதிவு செய்ய அதிகாரிகள் அனுமதித்தனர். குந்துர், கிருஷ்ணா, நெல்லூர், கர்னூல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நள்ளிரவு வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனால் வாக்குப்பதிவு அதிகரித்தது.

    மாலை 6 மணி நிலவரப்படி சராசரியாக 74 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. வன்முறை உள்ளிட்ட காரணங்களால் பல வாக்குச்சாவடிகளில் இரவு வரை வாக்குப்பதிவு நடைபெற்றதால், கிட்டத்தட்ட 80 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #LokSabhaElections2019 #AndhraVoterTurnout
    உத்தரபிரதேசம் மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியோர் தேர்தல் விதிகளை மீறியதால், 24 மணிநேரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. #ECNotice #ModelCodeofConduct
    புது டெல்லி:

    உத்தரபிரதேசம் மாநிலத்தில் 7 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.  நேற்று முதற்கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் கடந்த ஏப்ரல் 7 மற்றும் ஏப்ரல் 9 ஆகிய தேதிகளில் உத்தரபிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி ஆகியோர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    கடந்த ஏப்ரல் 7ம் தேதி சகரன்பூரில் நடைபெற்ற பிரசாரப்பொதுக்கூட்டத்தில் மாயாவதி பேசுகையில் , 'முஸ்லிம் வாக்காளர்களுக்கு ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். உங்கள் வாக்குகளை உறவினர்கள் என்பதாலோ, நண்பர்கள் என்பதாலோ பதிவிடக்கூடாது. உத்தரபிரதேசத்தில் பாஜகவை வீழ்த்த எண்ணினால், உங்கள் வாக்குகளை பிரிக்காதீர்கள். அதற்கு பதிலாக மாபெரும் கூட்டணிக்கு பதிவிடுங்கள்.  இதனை முஸ்லிம் மக்களுக்கு நான் வேண்டுகோளாக வைக்கிறேன்' என பேசினார்.

    மாயாவதிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஏப்ரல் 9ம் தேதி மீரட்டில் நடைபெற்ற பிரசாரப்பொதுக்கூட்டத்தில் யோகி ஆதித்யநாத் பேசுகையில், 'ஒரு நாளுக்கு முன்னர் மாயாவதி என்ன பேசினார் என்பதை கேட்டிருப்பீர்கள். அவருக்கு முஸ்லிம் மக்களின் வாக்குகளே தேவை. மாபெரும் கூட்டணி மற்ற மக்களின் வாக்குகளை விரும்பவில்லை. உங்களுக்கு ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளுக்கு அலி மீது நம்பிக்கை உள்ளது என்றால், எங்களுக்கு பஜ்ரங்பலி மீது நம்பிக்கை உள்ளது' என பேசினார்.



    இந்நிலையில் 2017ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு, சாதி மற்றும் மதத்தினை தேர்தல் பிரசாரங்களில் உபயோகிக்க தடை விதித்துள்ளது.

    இதையடுத்து தேர்தல் விதிகளை மீறி பிரசாரத்தில் பேசியதாக  நேற்று தேர்தல் ஆணையம் யோகி ஆதித்யநாத் மற்றும் மாயாவதி ஆகியோருக்கு, 24 மணி நேரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  #ECNotice #ModelCodeofConduct




    17-வது மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு முதல் கட்டமாக 91 தொகுதிகளில் தொடங்கி பலத்த பாதுகாப்புடன் விறுவிறுப்பாக இன்று நடந்து முடிந்தது. #LokSabhaElections2019
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளுக்கு இன்று (ஏப்ரல் 11-ம் தேதி) தொடங்கி அடுத்த மாதம் 19-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. மேலும், ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் முதல் கட்டமாக 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் முன்னதாகவே வாக்குப்பதிவு மையங்களுக்கு ஆர்வமுடன் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். 



    அத்துடன் ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய மாநிலங்களின் அனைத்து தொகுதிகளுக்கும் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று ஒரே நாளில் நடைபெற்றது.

    காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. அனைத்து மாநிலங்களிலும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது. ஒரு சில இடங்களில் வாக்குச்சாவடி மையங்களில் அடிதடி, வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு உள்ளிட்ட சம்பவங்களும் நடைபெற்றுள்ளன என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். #LokSabhaElections2019
    ஆர்.கே.நகர் போல் சுயேச்சையாக போட்டியிட்டு அ.தி.மு.க.வை புறமுதுகிட்டு ஓட செய்வோம் என தஞ்சையில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் டிடிவி தினகரன் கூறியுள்ளார். #TTVDinakaran
    தஞ்சாவூர்:

    தஞ்சை பாராளுமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் பேராசிரியர் பொன்.முருகேசன், தஞ்சை சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர் ரெங்கசாமி ஆகியோரை ஆதரித்து அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தஞ்சை கீழவாசல் காமராஜர் சிலை அருகே பிரசாரம் செய்தார்.

    தஞ்சை சட்டசபை தொகுதி வேட்பாளராக போட்டியிடும் ரெங்கசாமியை பற்றி நான் சொல்ல வேண்டியது இல்லை. எனக்கு சில சமயத்தில் கோபம் வரும். ஆனால் அவர் கோபப்படமாட்டார். அரசியலில் பொறுமை, சகிப்புதன்மை அவசியம். அவர் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது வைத்திலிங்கத்தால் எவ்வளவோ பாதிக்கப்பட்டார். தொகுதிக்கே வரவிடாமல் செய்தார்.

    எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி தொடர வேண்டும் என சசிகலா சொன்னதால் அவருக்கு ஆதரவாக ரெங்கசாமி செயல்பட்டதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். சோழநாட்டு மக்கள் நியாயத்தின் பக்கம் இருப்பார்கள். துரோகத்திற்கு துணை போகமாட்டார்கள். வைத்திலிங்கத்திற்கு ஒரத்தநாட்டில் முடிவு கட்டியதைப்போல, அவரது பினாமியான அ.தி.மு.க. வேட்பாளர் காந்தி டெபாசிட் கூட வாங்க விடக்கூடாது.

    காங்கிரஸ் கட்சியை விட்டு ஜி.கே.மூப்பனார் பிரிந்து வந்தாலும் பா.ஜ.க.வுடன் அவர் கூட்டணி வைக்கவில்லை. மதசார்பின்மையை கடைபிடித்தார். ஆனால் அவரது மகன் ஜி.கே.வாசன், மதசார்பின்மையை கடைபிடிக்காமல் வழிதவறி சென்று பா.ஜ.க. இடம்பெற்றுள்ள கூட்டணியில் சேர்ந்துள்ளார். ஜி.கே.மூப்பனாருடன் வாசனை ஒப்பிட முடியாது. பெரிய வீட்டு பிள்ளைகள் சில சமயத்தில் இப்படி தான் இருப்பார்கள். தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. நின்றிருக்க வேண்டும். ஆனால் தோல்வி அடைந்து விடும் என்று பயந்து த.மா.கா.வுக்கு சீட் கொடுத்து விட்டார்கள்.

    நாங்கள் இந்துக்களுக்கு எதிரி அல்ல. எங்கள் குடும்பத்து பெண்களும் கோவிலுக்கு செல்கிறார்கள் என மு.க.ஸ்டாலின் சொல்கிறார். அவர் பா.ஜ.க.வின் ‘பி டீம்’ போல் செயல்பட்டு வருகிறார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட போது பார்வையிட வந்த ஸ்டாலின் புயலை விட வேகமாக சென்று விட்டார். அதனால் மக்கள் அவருக்கு ‘கஜா’ என்று பெயர் வைத்துள்ளதாக என்னிடம் தெரிவித்தனர்.

    மீத்தேன் திட்டத்திற்கு கையெழுத்து போட்டது ஸ்டாலின் தான். தஞ்சை மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு உள்ளது. 80 சதவீத இளைஞர்கள் அ.ம.மு.க.வில் உள்ளனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்கப்படும். விவசாயம் செழிக்க, நல்ல விளைபொருட்கள் கிடைக்க அரசு உதவி செய்ய வேண்டும். பூமிக்கு அடியில் வைரமே கிடைத்தாலும் மக்களை பாதிக்கும் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம். விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகளை கொண்டு வருவோம்.

    ஆர்.கே.நகர் தேர்தலில் அ.தி.மு.க.வினர் ரூ.10 ஆயிரம் வரை பட்டுவாடா செய்தனர். ஆனால் மக்கள் நமக்கு தான் வாக்களித்தனர். ஆர்.கே.நகர் தேர்தலின்போது பணம் பட்டுவாடா நடந்ததாக கூறி அமைச்சர் விஜயபாஸ்கரிடம் ஒரு துண்டு சீட்டை கைப்பற்றியதாக கூறி தேர்தலை நிறுத்தினர். தற்போது துரைமுருகன் வீட்டில் கட்டு, கட்டாக பணம் எடுக்கப்பட்டும் தேர்தல் நிறுத்தப்படவில்லை.

    ஆர்.கே.நகரில் சுயேச்சையாக போட்டியிட்டு தி.மு.க.வை டெபாசிட் இழக்க செய்தோம். அ.தி.மு.க.வை புறமுதுகிட்டு ஓட, ஓட விரட்டினோம். நம்மை சுயேச்சை என கிண்டல் செய்கிறார்கள். சுயேச்சைகள் இப்படி ஒரே சின்னத்தில் போட்டியிடுவது இந்திய வரலாற்றிலேயே இது தான் முதல் முறை. சுயேச்சையாக ஒரே சின்னத்தில் 39 தொகுதிகளில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்று இந்தியாவின் பிரதமரை தீர்மானிக்க இருக்கிறார்கள். இந்தியாவில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழகம் திகழ, லஞ்ச-லாவண்யம் இல்லாத ஆட்சி மலர பரிசுப்பெட்டகத்திற்கு வாக்களிக்க வேண்டும்.

    22 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் 6 தொகுதிகளில் கூட வெற்றிபெறவில்லை என்றால் தற்போது நடக்கும் ஆட்சி ஆட்டம் கண்டு விடும். தமிழக மக்களை தொடர்ந்து வஞ்சிக்கின்ற துரோகத்தின் கூட்டணி, மோடியின் கூட்டணியாகும்.

    இவ்வாறு அவர் பேசினார். #TTVDinakaran
    ×