என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    சித்திரை திருவிழா தேரோட்டத்தின் போது பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவும் நடைபெற உள்ளதால் கூடுதலாக 3,700 போலீசாரை பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று டி.ஜி.பி.க்கு மதுரை கலெக்டர் கடிதம் எழுதியுள்ளார். #LSPolls
    மதுரை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 18-ந் தேதி நடக்கிறது. அன்றைய தினம் மதுரையில் காலை சித்திரை திருவிழா தேரோட்டமும், மாலை கள்ளழகர் எதிர்சேவையும் நடைபெறுவதால் மதுரை பாராளுமன்ற தொகுதிக்கு தேர்தலை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

    இது தொடர்பாக கலெக்டர் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்திலும் அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் தேர்தலை வேறு தேதிக்கு நடத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

    இது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளையிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதன் மீதான விசாரணை நாளை நடைபெற உள்ளது.

    இந்த நிலையில் மதுரை மாவட்ட கலெக்டர் நடராஜன், மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழக டி.ஜி.பி.க்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

    அதில், வழக்கமாக ஒவ்வொரு வருடமும் சித்திரை திருவிழாவின் போது 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

    இந்த ஆண்டு சித்திரை திருவிழா தேரோட்டத்தின் போது பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவும் நடைபெற உள்ளது. எனவே கூடுதலாக 3,700 போலீசாரை பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    மேற்கண்டவாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. #LSPolls #MaduraiConstituency
    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு பிரதமர் மோடி முக்கிய வேண்டுகோள் ஒன்றை வெளியிட்டுள்ளார். #Modiurges #RahulGandhi #MKStalin
    சென்னை:

    நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்ட அன்று இந்த தேர்தலில் முதன்முறை வாக்காளர்கள் அதிகமாக பங்கேற்று வாக்களிக்க வேண்டும் என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

    தற்போது அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ள நிலையில் மீண்டும் இதே கருத்தை மோடி வலியுறுத்தியுள்ளார்.

    பிரபல தொழிலதிபர் ரத்தன் டாட்டா, விளையாட்டு வீராங்கனை பி.வி.சிந்து உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களை குறிப்பிட்டு இன்று அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘இந்த தேர்தலில் மக்கள் அதிக அளவில் வாக்களிப்பதை நீங்கள் ஊக்குவிக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

    மற்றொரு டுவீட்டில் ‘வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிகமான வாக்குகள் பதிவாகும் வகையில் ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, சரத்பவார், மாயாவதி, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர்  ஊக்கப்படுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதே கருத்தை நடிகர்கள் நாகார்ஜுனா, மோகன்லால் ஆகியோருக்கும் அவர் வலியுறுத்தியுள்ளார். நீண்ட ஆண்டுகளாக உங்களது திரைத்தோற்றத்தின் மூலம் பல கோடி மக்களை நீங்கள் மகிழ்வித்து இருக்கிறீர்கள். பல விருதுகளையும் பெற்றிருக்கிறீர்கள். இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதிகமான அளவில் அவர்கள் வாக்களிக்க நீங்கள் எல்லாம் ஊக்குவிக்க வேண்டும் என மோடி வலியுறுத்தியுள்ளார்.
    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜிஎஸ்டி வரியில் மாற்றம் வரும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். #Congress #RahulGandhi

    சென்னை:

    காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று காலை சென்னை வந்தார்.

    விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    விமான நிலையத்தில் இருந்து நேராக போயஸ் கார்டனில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் பெண்கள் கல்லூரிக்கு சென்றார். அங்கு மாணவிகள் மத்தியில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஜீன்ஸ்பேண்ட், டி-சர்ட்டுடன் இளமை தோற்றத்தில் வந்த ராகுல்காந்தி மாணவிகள் மத்தியில் மகிழ்ச்சியுடன் உரையாடினார். “சேஞ்ச் மேக்கர்ஸ்” என்ற தலைப்பில் மாணவிகள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து ராகுல் கூறியதாவது:-

    இந்தியாவில் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் குறைந்த அளவிலேயே செலவிடுகிறது.

    நிதி ஒதுக்குவது மட்டுமல்லாமல் அந்த நிறுவனங்களை சுதந்திரமாக இயங்க அனுமதிக்க வேண்டும். சவால்களை மேற்கொள்ளும் வகையில் கல்வி தரம் உயர வேண்டும்.

    வட இந்தியாவை விட தமிழ்நாடு உள்பட தென் இந்தியாவில் பெண்களை சிறப்பாக நடத்துகிறார்கள்.

    பெண்கள் இரண்டாம் நிலை என்று கருத வேண்டாம். சமநிலை என்றே கருத வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மத்திய அரசு வேலை வாய்ப்பில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

    நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜி.எஸ்.டி. வரியில் மாற்றம் கொண்டு வரப்படும். அது ஒரே வரியாக இருக்கும். அதுவும் குறைந்த வரியாக இருக்கும்.

    பா.ஜனதா கொண்டு வந்துள்ள ஜி.எஸ்.டி. வரியால் சிறு, குறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    நிரவ் மோடிக்கு மத்திய அரசு ரூ.35 ஆயிரம் கோடியை கடனாக வழங்கியது. அவர் எத்தனை பேருக்கு வேலை தந்தார். நிரவ் மோடி, விஜய் மல்லையா, முகுல் சோக்ஷி மக்கள் பணத்தை திருடி விட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டனர்.

    குறிப்பிட்ட சிலரை மட்டும் (ராபர்ட் வதேரா) விசாரணை வளையத்துக்கு கொண்டு வருவது ஏன்? யார் மீது வேண்டுமானாலும் விசாரணை நடத்த அரசுக்கு அதிகாரம் உள்ளது.

    அனில் அம்பானியின் நிறுவனம் விமானங்களை தயாரித்தது கிடையாது. எந்த அடிப்படையில் எச்.சி.எல். நிறுவனத்துக்கு ரபேல் விமான ஒப்பந்தம் மறுக்கப்பட்டு அந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.

    எனவே ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மோடியை விசாரிக்க வேண்டும்.

    காஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் மோடியின் கொள்கை தவறாக உள்ளது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பயங்கரவாத தாக்குதல் குறைவாக இருந்தது.

    புல்வாமா தாக்குதலை தடுக்க அரசு தவறி விட்டது. இந்த தாக்குதலை பாகிஸ்தான் தான் நடத்தியது என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அந்த தாக்குதலை முன் கூட்டியே தடுக்காதது ஏன்?

    காஷ்மீர் இளைஞர்களை மற்ற இளைஞர்களுடன் பழக வைப்பதன் மூலம் பயங்கரவாதத்தை குறைக்க முடியும். காங்கிரஸ் ஆட்சியின்போது காஷ்மீர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டது. சுயஉதவி குழுக்களுக்கு நிதி உதவி அளிக்கப்பட்டது.

    காஷ்மீரில் இந்திய பிரதமரை நேசிக்கும் நிலையை உருவாக்க வேண்டும். பயங்கரவாதத்துக்கு எதிராக போரிட்டாலும் காஷ்மீர் மக்களை நேசிக்கவும் வேண்டும்.

    பஞ்சாயத்து ராஜ் மூலம் காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தல் நடத்தினோம். அங்கு மக்களுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலம் பயங்கரவாதத்தை தடுக்க முடியும்.

    நாட்டின் வளர்ச்சிக்கு ஊழல் தடையாக உள்ளது. தேர்தலில் வெற்றி பெற்றால் நிர்வாகத்தில் தமிழ்நாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

    எனது தாயார் சோனியா காந்தியிடம் இருந்து நான் அனைத்தும் கற்றுக் கொண்டேன்.

    காங்கிரஸ் ஆட்சியில் அனைத்து மாநிலங்களுக்கும் சம முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ஒரு மாநில மக்கள் மற்ற மாநில மக்களை நினைத்து சண்டை போடக் கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார். #Congress #RahulGandhi

    பாராளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் அரசு பணிகளில் 33 சதவீத இட ஒதுக்கீடு எனும் கொள்கையில் காங்கிரஸ் உறுதியாக உள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்தார். #LSPolls #Rahul #RahulCampaign
    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைப்பதற்காக தமிழகம் வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சென்னையில்  இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சமூக நல்லிணக்கமே காங்கிரஸ் கட்சியின் முக்கிய நோக்கமாக உள்ளது. நாட்டில் இப்போது பயங்கரவாதத்தைவிட வேலையின்மையை மக்கள் பெரிய பிரச்சினையாக கருதுகிறார்கள். பாஜக ஆட்சியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் வேலையின்மை அதிகரித்துள்ளது. அதிக வேலைவாய்ப்புகளை தரக்கூடிய சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

    எனவே, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையை முன்னேற்றுவதன் மூலம் வேலைவாய்ப்பை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கான திட்டங்கள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும்.  ஜிஎஸ்டி வரி சிக்கல்கள் எளிமையாக்கப்படும்.

    காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் விவசாயக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும். விவசாயிகளும் விவசாயமும் இல்லாத இந்தியா வலிமையாக இருக்காது என்பது காங்கிரசின் நம்பிக்கை. உற்பத்தி மாநிலமான தமிழகத்தில் வேலைவாய்ப்பை அதிகரிக்க முயற்சிப்போம்.

    நான் ஒவ்வொரு முறையும் செய்தியாளர்களை சந்திக்கிறேன். ஆனால், பிரதமர் மோடி சந்திக்கிறாரா?  நாக்பூரில் இருந்து நாட்டை ஆட்சி செய்ய நினைத்தால் இனி முடியாது. நாட்டில் உள்ள ஜனநாயக அமைப்புகள் எல்லாம் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று மோடி திணித்து வருகிறார்.



    ரபேல் விவகாரத்தில் விசாரணை நடத்தப்பட்டால் அனில் அம்பானியும், பிரதமர் மோடியும் குற்றவாளிகள் ஆவார்கள். அனில் அம்பானிக்கு ரூ.30 ஆயிரம் கோடி ஒப்பந்தம் கிடைக்க, பிரதமர் தலையிட்டு பேசியுள்ளார். ரபேல் ஒப்பந்தம் குறித்து பாதுகாப்புத்துறை பேசும்போது, பிரதமர் அலுவலகமும் பேசியது பிரச்சினை.

    தமிழகம் தற்போது பிரதமர் மோடியால் இயக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரம் மீது தாக்குதல் நடக்காமல் பார்த்துக்கொள்வோம். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர்  மீது எனக்கு தனிப்பட்ட கோபம் எதுவும் இல்லை. அவர்களை விடுவிப்பது தொடர்பாக நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். இலங்கையில் நடந்த படுகொலையில் காங்கிரசுக்கு தொடர்பு இருப்பதாக யாரும் கருதவில்லை.

    பாராளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் அரசு பணிகளில் 33 சதவீத இடஒதுக்கீடு எனும் கொள்கையில் உறுதியாக உள்ளோம். காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் இது இடம்பெறும். மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும்.

    நீட் தேர்வால் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உயர்கல்வியைப் பொருத்தவரை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதுதான் சரியாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #LSPolls #Rahul #RahulCampaign 
    மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவை அதிகரிக்க வாக்காளர்களுக்கு ஊக்கம் கொடுக்கும்படி அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். #Modi #LSPolls
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் பதவிக்காலம் நிறைவடைய  உள்ளதையடுத்து, பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு  நடத்தப்படுகிறது. இதற்காக விரிவான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை தவறாமல் நிறைவேற்றும்படி தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

    இந்நிலையில், வரும் மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவில் உலக சாதனை படைக்கவேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். வாக்குப்பதிவை அதிகரிக்க அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



    அரசியல், விளையாட்டு, சினிமா உள்ளிட்ட துறைகளின் முக்கிய பிரபலங்களின் டுவிட்டரை டேக் செய்த மோடி, வாக்குப்பதிவை அதிகரிக்க மக்களுக்கு தங்களது கருத்துக்களை தெரிவிக்கும்படி கூறியிருந்தார்.

    பிரதமரின் வேண்டுகோளை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஏற்றுக்கொண்டு, டுவிட்டரில் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். #Modi #LSPolls

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இணைகிறது. இதற்கான கூட்டணி உடன்பாடு இன்று மாலை கையெழுத்தாகிறது. #LSPolls #ADMK #GKVasan #ADMKAlliance
    சென்னை:

    அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., பா.ஜனதா, தே.மு.தி.க., புதிய தமிழகம், புதிய நீதிகட்சி ஆகியவை உள்ளன.

    இந்த கூட்டணியில், தமிழ் மாநில காங்கிரசையும் சேர்க்க பேச்சுவார்த்தை நடந்து வந்தது. தங்களுக்கு 2 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வற்புறுத்தி வந்தார்.

    இந்த நிலையில், நேற்று மாலை அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் ஆழ்வார்பேட்டையில் உள்ள ஜி.கே.வாசன் வீட்டுக்கு சென்றனர். அங்கு பேச்சுவார்த்தை நடந்தது.

    பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்ததாகவும், இன்று காலை ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியூரில் இருப்பதால் இன்று காலை கையெழுத்தாகவில்லை.



    இன்று மதியம், ஓ.பன்னீர் செல்வம் சென்னை திரும்புகிறார். அதன்பிறகு தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

    அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா.வுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. மயிலாடுதுறை தொகுதி த.மா.கா.வுக்கு கிடைக்கும் என்று அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் ஜி.கே.வாசன் கையெழுத்திடுவதன் மூலம் ஜி.கே.வாசன், அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணியில் முதல் முறையாக இணைகிறார். இதனால் இந்த கூட்டணியில் கட்சியின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. #LSPolls #ADMK #GKVasan #ADMKAlliance
    திருச்சி மத்திய மண்டலத்தில் மட்டும் ஒரே நாளில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள ரொக்கம், வெள்ளி நகை உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    திருச்சி:

    பாராளுமன்ற தேர்தல் விதிமுறை அமலுக்கு வந்துள்ள நிலையில் திருச்சி மத்திய மண்டலத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் படைகாத்து தலைமையில், பறக்கும் படையினர் பெரம்பலூர், அரியலூர் பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செந்துறையில், சேலம் மாவட்டம் சொர்ணபுரியை சேர்ந்த பாஸ்கர் என்பவர் தனது காரில் உரிய ஆவணம் இன்றி எடுத்து சென்ற 16¼ கிலோ வெள்ளி கொலுசுகள் மற்றும் ரூ.96 ஆயிரத்து 500-ஐ பறிமுதல் செய்தனர்.

    அதேபோல் பேரளி கிராமத்தில் உள்ள சுங்கச்சாவடியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ஆசிக்கான் தனது காரில் எடுத்து சென்ற ரூ.1 லட்சத்து 38 ஆயிரம் மதிப்பிலான எல்.இ.டி. டிவி, ஹோம் தியேட்டர் மற்றும் கியாஸ் அடுப்புகள் ஆகியவற்றை குன்னம் துணை வட்டாட்சியர் பழனிசெல்வன் தலைமையில் கைப்பற்றப்பட்டு பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மஞ்சுளாவிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து தேர்தல் அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே மதனத்தூர் கொள்ளிடம் பாலம் அருகே தேர்தல் நிலையான கண்காணிப்புக்குழுவை சேர்ந்த கூட்டுறவு சார்பதிவாளர் சசிக்குமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கும்பகோணத்தில் இருந்து வேலூர் நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டபோது அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வேலூர் கிராமத்தை சேர்ந்த அமுதா தியோஸ் என்பவர் தனது காரில் உரிய ஆவணங்களின்றி ரூ.12 லட்சத்து 76 ஆயிரத்து 500 எடுத்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து அந்த தொகையை பறிமுதல் செய்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான உடையார்பாளையம் கோட்டாட்சியர் ஜோதியிடம் ஒப்படைத்தனர். பின்னர் கோட்டாட்சியர் அந்த தொகையினை ஜெயங்கொண்டம் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தார்.

    திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எடமலைப்பட்டிபுதூர் கிருஷ்ணாபுரம் சோதனைச்சாவடியில் பறக்கும்படை தாசில்தாரும் மணப்பாறை நத்தம் தனிதாசில்தாருமான இளவரசி தலைமையிலான குழுவில் இடம்பெற்ற ராஜேந்திரன், தேவசேனாபதி உள்ளிட்ட 5 பேர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியாக காரில் வந்த கருமண்டபத்தை சேர்ந்த அந்தோணி நவீன் என்பவர் ரூ.7 லட்சத்து 40 ஆயிரத்து 400 ரொக்கமாக எடுத்து சென்றார். அந்த பணத்திற்காக உரிய ஆவணமோ அல்லது ரசீதோ அவரிடம் இல்லை. விசாரணையில், எடமலைப்பட்டி புதூர்- மதுரை ரோட்டில் அவர் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருவதாகவும், வங்கியில் செலுத்த பணம் எடுத்து செல்வதாகவும் தெரிவித்தார். ஆனால், உரிய ஆவணங்கள் ஏதும் இல்லை என்பதால் அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

    இதுபோன்று, திருச்சி வயலூர் ரோட்டில் ரெங்காநகர் சோதனைச்சாவடியில் தனிதாசில்தார் (மணப்பாறை சிப்காட்) வசந்தா தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சண்முகாநகரை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் கருணாகரன் அவ்வழியாக காரில் வந்தார். அவரது காரை சோதனை செய்தபோது, ஒரு பையில் ரூ.1 லட்சம் இருந்தது. அந்த தொகைக்கான ஆவணம் ஏதும் அவரிடம் இல்லை. விசாரணையில், நாச்சிக்குறிச்சி பஞ்சாயத்தில் கட்டுவதற்காக பணத்தை எடுத்து செல்வதாக கருணாகரன் தெரிவித்தார். ஆனால், உரிய ஆவணம் ஏதும் இல்லை என்பதால் பறக்கும் படையினர் ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

    திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இடத்தில் 2 பேரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மொத்த தொகையான ரூ.8 லட்சத்து 40 ஆயிரத்து 400-ஐ திருச்சி மேற்கு தாசில்தார் ராஜவேலுவிடம் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர். பின்னர் அந்த தொகை ஒரு கவரில் ‘சீல்’ வைக்கப்பட்டு கருவூலத் தில் ஒப்படைக்கப்பட்டது. திருச்சி மத்திய மண்டலத்தில் மட்டும் ஒரே நாளில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள ரொக்கம், வெள்ளி நகை உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று சென்னை வந்தார். #RahulGandhi #LSPolls #DMKCongressAlliance
    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை தி.மு.க-காங்கிரஸ் இணைந்து சந்திக்கிறது. தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை இணைந்துள்ளன.

    தமிழகத்தின் பிரதான கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ள காங்கிரஸ், தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கி விட்டது.

    தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் முதல் பிரசார கூட்டம் நாகர்கோவிலில் இன்று நடக்கிறது. இதில், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி கலந்து கொள்கிறார்.

    இதற்காக அவர், இன்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்பு மதியம் 2 மணிக்கு திருவனந்தபுரம் செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவில் செல்கிறார்.

    நாகர்கோவிலில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் மாலை 3 மணிக்கு தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் முதல் தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் நடக்கிறது.  

    இதற்காக அங்கு பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேடையில் கூட்டணி கட்சி தலைவர்களின் படங்கள் வைக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ். அழகிரி தலைமை தாங்குகிறார்.



    தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். இந்த மேடையில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினும் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். இதுதவிர கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேச உள்ளனர்.

    தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியின் முதல் தேர்தல் பிரசார கூட்டம் என்பதால் தொண்டர்கள், நிர்வாகிகள் உற்சாகத்தில் உள்ளனர். #RahulGandhi #LSPolls #DMKCongressAlliance
    தே.மு.தி.க. சார்பில் எந்தெந்த தொகுதியில் யார், யார் போட்டியிடுவார்கள்? என்பது குறித்து 3 அல்லது 4 நாட்களில் அறிவிப்பு வெளியாகும் என்று பிரேமலதா கூறினார். #LSPolls #DMDK #PremalathaVijayakanth
    மதுரை:

    மதுரை விமான நிலையத்தில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    பொள்ளாச்சியில் நடைபெற்றுள்ள பாலியல் பலாத்கார சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். பெண்கள் யாரிடம் பழகினாலும் ஆராய்ந்து பழக வேண்டும்.



    தே.மு.தி.க. வேட்பாளர்கள் தேர்வு குறித்து கட்சித் தலைவர் விஜயகாந்த் இன்று நேர்காணல் நடத்துகிறார். அ.தி.மு.க. கூட்டணி தலைவர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தின் முடிவில் எந்தெந்த தொகுதிகள், எந்தெந்த கட்சிக்கு ஒதுக்கப்படும் என்பது தெரியவரும்.

    தே.மு.தி.க. சார்பில் எந்தெந்த தொகுதியில் யார், யார் போட்டியிடுவார்கள்? என்பது குறித்து 3 அல்லது 4 நாட்களில் அறிவிப்பு வெளியாகும். கட்சித் தலைவர் விஜயகாந்த்தின் அறிவிப்பே இறுதியானதாகும்.

    இவ்வாறு அவர் கூறினார். #LSPolls #DMDK #PremalathaVijayakanth
    கோரிக்கைகளை ஏற்காவிட்டால் மோடிக்கு எதிராக போட்டியிடபோவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். #PMModi #Ayyakannu

    திருச்சி:

    தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    விவசாயிகள் கோரிக்கைக்காக 140 நாட்கள் டெல்லி சென்று போராடினோம். அப்போது, மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் 5 முறை எங்களை சந்தித்து உரிய உதவி செய்வதாக கூறினார்.

    ஆனால், இன்று வரை உதவி செய்யவில்லை. வருகிற பாராளுமன்ற தேர்தல் அறிக்கையில், லாபகரமான விலையை விவசாயிகளின் விளை பொருட்களுக்கும், கடன் தள்ளுபடியும், பென்சன், தனிநபர் இன்சூரன்ஸ் அளிப்பதாக தெரிவிக்க வேண்டும்.

    இல்லையென்றால், மோடி ஒரு தொகுதியில் போட்டியிட்டால், அவருக்கு எதிராக தமிழகத்தில் இருந்து விவசாயிகள் 111 பேர், 2 தொகுதியில் போட்டியிட்டால் 222 பேர், 3 தொகுதியில் போட்டியிட்டால் 333 பேர் சுயேச்சையாக மனு தாக்கல் செய்வார்கள்.

    ஒரு மாதம் விவசாயி அலைந்து திரிந்து சோறு இல்லாமல் போய், சுயேச்சை வேட்பாளர் இறந்தால் அந்த தொகுதியில் தேர்தல் நடக்குமா? இல்லையா? என்பது அவருக்கு தெரியும். தமிழகத்தை பொறுத்தவரை, எங்களது கோரிக்கைகளை ஏற்காத கட்சிகளை எதிர்த்து வேலை செய்வோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #PMModi #Ayyakannu

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றாலும் மோடி பிரதமர் ஆக மாட்டார் என தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். #SharadPawar #PMModi
    மும்பை:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி வெற்றி பெறும். அதே நேரத்தில் கடந்த தேர்தலை போன்று பா.ஜனதாவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காது என கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

    இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் கருத்து தெரிவித்து இருக்கிறார். மும்பையில் நடைபெற்ற தனது கட்சி விழாவின் போது நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெறும். அதே நேரத்தில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தான் ஆட்சி அமைக்க முடியும்.

    இத்தகைய தருணத்தில் மோடி பிரதமராக ஆதரவு கிடைக்காது. எனவே அவர் 2-வது தடவை மீண்டும் பிரதமராக மாட்டார்.



    நாளையும் (14-ந் தேதி), நாளை மறுதினம் (15-ந் தேதி) டெல்லியில் மாநில கட்சிகளை சந்தித்து மெகா கூட்டணி அமைப்பதுகுறித்து ஆலோசனை நடத்த இருக்கிறேன்.

    மராட்டியத்தில் காங்கிரஸ் - தேசிய வாத காங்கிரஸ் கூட்டணியில் சில மாநில கட்சிகள் பிரிந்து சென்றுவிட்டன. ஆனால் விவசாய தொழிலாளர் கட்சி (பி.டபிள்யூ.பி.) தேசிய வாத காங்கிரசை தொடர்ந்து ஆதரிக்கிறது. அதற்கு பாராட்டு தெரிவிக்கிறேன்.

    மேலும். ‘சுவாபிமனி ஷெட்கரி சங்காதனா’ கட்சியுடன் தொகுதி ஒதுக்கீடு குறித்து தொடர்ந்து பேசி வருகிறோம். விவசாயிகள் முன்னணி கட்சிக்கு காங்கிரஸ் கட்சியிடம் சில எதிர்பார்ப்பும் உள்ளன. இது குறித்து காங்கிரசும், தேசிய வாத காங்கிரசும் முடிவு செய்யும்’ என்றார். #SharadPawar #PMModi
    அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 38 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை டி.டி.வி.தினகரன் வெளியிட வாய்ப்பு உள்ளது. #LSPolls #AMMK #TTVDhinakaran
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 38 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணி கட்சியான எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் 2-ம் ஆண்டு விழா வருகிற 15-ந்தேதி காலை 9 மணிக்கு சென்னை அசோக்நகரில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கிறது. விழாவில் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பங்கேற்று கட்சிக் கொடி ஏற்றி வைக்கிறார்.

    இந்த விழாவில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள், அனைத்து வார்டு அவைகளின் செயலாளர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

    அப்போது தமிழகத்தில் 38 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை டி.டி.வி.தினகரன் வெளியிட வாய்ப்பு உள்ளது. #LSPolls #AMMK #TTVDhinakaran
    ×