என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை பா.ம.க. தலைவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சந்தித்து பேசினர். #Vijayakanth #Ramadoss #AnbumaniRamadoss
    சென்னை:

    அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும் தே.மு.தி.க.வுக்கு 4 தொகுதிகளும், ஒதுக்கப்பட்டுள்ளன.

    இந்தநிலையில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கு டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இன்று காலை 11.15 மணிக்கு வந்தனர்.

    அவர்களுடன் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, மாவட்ட செயலாளர் வெங்கட்ராமன் வந்திருந்தார்கள்.

    காரை விட்டு இறங்கி நின்ற சிறிது நேரத்தில் அ.தி.மு.க. அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மற்றும் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா ஆகியோரும் வந்தனர்.

    அவர்களை விஜயகாந்த்தின் மைத்துனர் எல்.கே. சுதீஷ் வாசலுக்கு வந்து அழைத்து சென்றார். விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா தொகுதி பங்கீட்டு குழுவினர் டாக்டர் இளங்கோவன், மோகன் ராஜ், பார்த்தசாரதி ஆகியோரும் இந்த சந்திப்பின் போது இருந்தனர்.

    டாக்டர் ராமதாஸ், விஜயகாந்துக்கு சால்வை அணிவித்தார். அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார். 30 நிமிடம் இந்த சந்திப்பு நடந்தது. பின்னர் டாக்டர் ராமதாஸ் வெளியே வந்தார்.

    உடல்நலம் பாதிக்கப்பட்ட விஜயகாந்த் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று சென்னை திரும்பிய பிறகு அவரை சந்தித்து உடல்நலம் விசாரித்தேன். பா.ம.க.- தே.மு.தி.க. தொகுதி பங்கீடு பற்றி எதுவும் பேசவில்லை. தேர்தல் நேரத்தில் தொகுதிகளை பிரிப்பதில் இழுபறி ஏற்படுவது வழக்கமான நடைமுறைதான். தேர்தல் பற்றி பேசவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகிய இருவரும் பிரேமலதா சுதீசுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு புறப்பட்டு சென்றனர். #Vijayakanth #Ramadoss #AnbumaniRamadoss
    டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பொதுமக்களின் கருத்தை கேட்டிருக்கிறார். #ParliamentElection #RahulGandhi #AamAadmi
    புதுடெல்லி:

    டெல்லியில் மொத்தம் 7 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 7 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சி விரும்பியது.

    ஆனால் தொகுதிகளை பங்கீட்டு கொள்வதில் காங்கிரஸ் தலைவர்களுக்கும், ஆம்ஆத்மி கட்சி தலைவர்களுக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இதனால் 7 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட போவதாக கெஜ்ரிவால் அறிவித்தார். வேட்பாளர்களின் பெயரையும் அவர் வெளியிட்டார்.



    இதற்கிடையே ஆம்ஆத்மியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் சார்பில் சில மூத்த தலைவர்கள் முயற்சி மேற்கொண்டனர். பஞ்சாப், அரியானா உள்பட மேலும் சில மாநிலங்களிலும் ஆம்ஆத்மியுடன் கூட்டணி அமைக்கும் திட்டத்தை அந்த தலைவர்கள் மேற்கொண்டுள்ளனர்.

    இதையடுத்து ஆம்ஆத்மி கட்சியும் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துள்ளது. டெல்லியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுடெல்லி மற்றும் சாந்தினிசவுக் உள்பட 3 தொகுதிகளை மட்டுமே விட்டுக்கொடுக்க இயலும் ஆம்ஆத்மி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் காங்கிரஸ் சார்பில் 5 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 தொகுதிகளை மட்டுமே ஆம்ஆத்மிக்கு கொடுக்க பேச்சு நடந்து வருகிறது. ஆனால் இதை ஆம்ஆத்மி ஏற்குமா? என்பது தெரியவில்லை.

    இதற்கிடையே டெல்லியில் காங்கிரசும், ஆம்ஆத்மியும் தலா 3 தொகுதிகளை எடுத்துக்கொண்டு ஒரு தொகுதியை திரிணாமுல் காங்கிரஸ் அல்லது தேசியவாத காங்கிரசுக்கு கொடுக்க புதிய சமரச திட்டம் அளிக்கப்பட்டுள்ளது. இது காங்கிரசும், ஆம்ஆத்மியும் ஆலோசித்து வருகின்றன.

    டெல்லியில் மே மாதம் 12-ந்தேதி தான் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே இந்த மாதம் இறுதி வரை பேச்சு நடத்தி தொகுதி உடன்பாடு செய்து கொள்ள அவகாசம் இருக்கிறது.

    இதனால் இரு கட்சி தலைவர்களும் நிதானமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் ஆம்ஆத்மியுடன் கூட்டணி அமைக்கலாமா? என்று காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் டெல்லியில் உள்ள பொதுமக்களிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கருத்து கேட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். இதற்காக காங்கிரஸ் சார்பில் ஆடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

    அதில் காங்கிரசின் திட்டங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆம்ஆத்மியுடன் சேர்ந்தால் நல்லதா? என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் காங்கிரஸ் கட்சியின் சக்தி செயலியை பயன்படுத்தி தங்களது கருத்துக்களை தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்களின் முடிவுக்கு ஏற்ப ஆம்ஆத்மியுடன் கூட்டணி அமைக்கலாமா? வேண்டாமா? என்பது பற்றி தீர்மானிக்க ராகுல் திட்டமிட்டுள்ளார். #ParliamentElection #RahulGandhi #AamAadmi

    தி.மு.க. வேட்பாளர் பட்டியலை வருகிற 17-ந்தேதி மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என்றும் புதுமுகங்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. #LSPolls #DMK #DMKCandidates
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. 8 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

    காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள், ம.தி.மு.க., ஐ.ஜே.கே., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு தலா 1 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

    கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது போக 20 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடுகிறது.

    இந்த கூட்டணியில் எந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதி என்ற விபரம் நேற்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல் பிரசாரம் காரணமாக நேற்று தொகுதி பட்டியல் வெளியாகவில்லை.

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை தவிர மற்ற கட்சிகள் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து கையெழுத்திட்டு உள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி இன்று அறிவாலயம் சென்று தொகுதி பங்கீட்டில் கையெழுத்திடுகிறார்.



    அதன் பிறகு கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகிறது என்ற பட்டியலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார்.

    இந்த தேர்தலில் தி.மு.க. 20 தொகுதிகளில் போட்டியிடுவதால் அதற்கான வேட்பாளர்களையும் நேர்காணல் மூலம் மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுத்து வைத்துள்ளார்.

    தி.மு.க. வேட்பாளர் பட்டியலை வருகிற 17-ந்தேதி (ஞாயிறு) மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இந்த தேர்தலில் தி.மு.க.வில் 10-க்கும் மேற்பட்ட புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிகிறது.

    தி.மு.க. வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    வடசென்னை- டாக்டர் கலாநிதி (ஆற்காடு வீராசாமி மகன்)

    மத்திய சென்னை- தயாநிதிமாறன்

    தென்சென்னை- தமிழச்சி தங்கபாண்டியன்

    தூத்துக்குடி- கனிமொழி

    ஸ்ரீபெரும்புதூர்- டி.ஆர்.பாலு

    அரக்கோணம்- ஜெகத்ரட்சகன்

    காஞ்சிபுரம்- மூர்த்தி

    கள்ளக்குறிச்சி - பொன்.கவுதம சிகாமணி (பொன்முடி மகன்)

    வேலூர்- கதிர் ஆனந்த் (துரைமுருகன் மகன்)

    கடலூர் - கதிரவன் (எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மகன்). #LSPolls #DMK #DMKCandidates
    தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படையினால் இதுவரை 3.39 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார். #ParliamentElection #TNCEO
    சென்னை:

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ, தலைமை செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பாராளுமன்றத் தேர்தல் பணிகள் தொடர்பாக அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தேர்தல் ஆணையத்திற்கு பல்வேறு புகார்கள் வந்துள்ளன. தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக பொதுமக்கள் 94454 67707 என்ற வாட்ஸ்அப் எண்ணில் புகார் அனுப்பலாம். மேலும், 1800-4256-669 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு புகாரை தெரிவிக்கலாம்.

    சந்தேகப்படும்படியான பணப்புழக்கம் குறித்து உரிய நடவடிக்கை  எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணம் இல்லாமல் பணம் கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும். அதேசமயம், ரூ.10 லட்சத்துக்கு மேல் உரிய ஆவணத்துடன் கொண்டு சென்றால், வருமான வரித்துறையிடம் தகவல் தெரிவிக்கப்படும்.

    தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படைஇதுவரை நடத்திய சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.3.39 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  வணிகர்கள் பாதிக்கப்படாத வகையில் சோதனை நடைமுறைகள் இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ParliamentElection #TNCEO
    தேமுதிக நேர்காணலில் பங்கேற்ற நிர்வாகி ஒருவர், ‘உங்களைப் பார்த்ததே போதும், சீட் எதுவும் வேண்டாம் என்று’ கூறியதைக் கேட்ட விஜயகாந்த் மகிழ்ச்சியில் கண்கலங்கினார். #LSPolls #DMDK #Vijayakanth
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி அரசியல் கட்சிகளில் வேட்பாளர் நேர்காணல் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க கட்சி அ.தி.மு.க பா.ஜனதா கூட்டணியில் இடம்பெற்றுள்ளது.

    தே.மு.தி.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களுக்கான நேர்காணல் நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேர்காணலில் கலந்து கொள்பவர்கள் கல்வி சான்றிதழ், தனித்தொகுதி என்றால் அதற்கான சான்றிதழை கொண்டு வர வேண்டும் என்று கட்சித் தலைமை அறிவித்திருந்தது.

    அதன்படி நேர்காணலில் பங்கேற்றவர்கள் கல்விச் சான்றிதழ் கொண்டு வந்திருந்தனர். உங்கள் தொகுதியில் எத்தனை வாக்காளர்கள், எத்தனை பூத் என்ற கேள்வியும் நேர்காணலில் கேட்கப்பட்டுள்ளது.

    நேர்காணலை விஜயகாந்த் தலைமையில் நிர்வாகிகள் நடத்தினர். தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஆனந்தமணி என்பவர் நெல்லை தொகுதியில் போட்டியிட விருப்ப மனுத்தாக்கல் செய்திருந்தார். அவரிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. நேர்காணல் அறைக்கு சென்ற ஆனந்தமணியிடம் நேர்காணல் குழுவினர் தொகுதியின் வெற்றி வாய்ப்பு குறித்து கேட்டுள்ளனர்.

    அதற்கு பதிலளித்த ஆனந்தமணி, ‘நான் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுத்தாக்கல் செய்யவில்லை. கேப்டனை பார்க்கத்தான் வந்தேன்’ என்று கூறியுள்ளார். இதைக் கேட்ட விஜயகாந்த், கண் கலங்கியபடி சிரித்துள்ளார்.

    கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இந்த நேர்காணலின்போது இல்லை. அவர் நெல்லையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்குள்ள கோயிலில் சாமிதரிசனம் செய்ய சென்றிருப்பதாக கட்சியினர் தெரிவித்தனர்.

    நீண்ட இடைவெளிக்கு பிறகு நேர்காணலின்போது விஜயகாந்தை சந்தித்து பேசியது அவரது கட்சியினருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. விஜயகாந்த் இந்த தேர்தலில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்து உள்ளனர். #LSPolls #DMDK #Vijayakanth

    தமிழகத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு நாளை முதல் 2 நாட்களுக்கு விருப்ப மனுக்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #ParliamentElection #TamilNaduCongress
    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 18-ம்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளன.

    திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. திமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இன்று அறிவிக்கப்பட உள்ளன.



    இந்நிலையில், காங்கிரஸ் அலுவலகத்தில் விருப்ப மனு விநியோகம் நாளை தொடங்க உள்ளது. மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோர், கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து கொடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. #ParliamentElection #TamilNaduCongress
    பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக விழா கோவையில் வரும் 24-ந்தேதி நடைபெற உள்ளது. #LSPolls #MakkalNeedhiMaiam #KamalHaasan
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது.

    ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக மூன்றாவது நாளாக நேர்காணல் நடந்தது.

    இரவும், பகலுமாக நடக்கும் வேட்பாளர் தேர்வில் இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இன்னும் 2 நாட்களுக்கு நேர்காணல் நடக்க இருக்கிறது.

    மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் அறிமுக விழா, கோவையில் வரும், 24-ந்தேதி நடக்க இருக்கிறது. இது குறித்து அந்த கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர் அறிமுக விழா, கோவை கொடிசியா வளாகத்தில் 24-ந்தேதி மாலை 6 மணி அளவில் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடக்கிறது.

    தேர்தலில் தமிழர்களின் ஒலியாய் தமிழகத்தின் ஒளியாய் வருங்காலத்தின் வழியாய் நமக்கான ஆட்சி அமைய உங்கள் வேட்பாளர்களின் அறிமுக விழாவில் அனைவரும் பங்கேற்க வேண்டும்.’

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #LSPolls #MakkalNeedhiMaiam #KamalHaasan
    ஐயப்பன் பெயரில் ஓட்டு கேட்பதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும் என்று கேரள தலைமை தேர்தல் அதிகாரி அறிவுறுத்தி உள்ளார். #ParliamentElection #Sabarimala
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் எல்லா வயது பெண்களையும் அனுமதிக்க மாநில அரசு எடுத்த முடிவால் மாநிலமே போராட்டக்களமானது. இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலையொட்டி, திருவனந்தபுரத்தில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி டீக்காராம் மீனா கூறியதாவது:-

    சபரிமலை என்பது மத வழிபாட்டு தலம். எனவே, கோவில் பெயரிலோ, மசூதி பெயரிலோ யாராவது ஓட்டு கேட்டால், அது தேர்தல் நடத்தை விதிமீறல் ஆகும்.



    ஐயப்பன் பெயரில் ஓட்டு கேட்பதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும். சபரிமலை பிரச்சினையை எந்த அளவுக்கு பிரசாரத்தில் பயன்படுத்தலாம் என்பதை முடிவு செய்வதில் கட்சிகள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ParliamentElection #Sabarimala
    ‘சென்னை மற்றும் நாகர்கோவில் கல்லூரிகளில் நடந்த நிகழ்ச்சிகளில் ராகுல் காந்தி கலந்து கொண்டது தேர்தல் நடத்தை விதி மீறல் ஆகாது’ என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார். #SatyabrataSahoo #RahulGandhi
    சென்னை:

    தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு சென்னையில் தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தேர்தல் தேதியன்று மதுரை சித்திரைத் திருவிழா நடப்பதால் ஏற்படும் சிக்கல் குறித்து மாவட்ட கலெக்டரிடம் அறிக்கை கேட்கப்பட்டு உள்ளது. கிடைத்த உடன் தேர்தல் ஆணையத்திற்கு முறைப்படி அனுப்பி வைக்கப்படும். பின்னர், ஐகோர்ட்டு மதுரை கிளைக்கும் அளிக்கப்படும். அதேபோல் தமிழகத்தில் உள்ள 3 சட்டசபை தொகுதிகளின் வழக்கு விவரங்கள் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

    அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் (மாவட்ட கலெக்டர்கள்) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது. தி.மு.க. சார்பில் உளவுப் பிரிவு அதிகாரிகளை உடனடியாக மாற்ற வேண்டும் என்று கோரி புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது. இந்த மனு குறித்து இந்தியத் தேர்தல் ஆணையம் தான் முடிவு எடுக்கும்.

    பாராளுமன்றம் மற்றும் இடைத்தேர்தலுக்காக இதுவரை 702 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் வீடியோ படம் எடுத்து கண்காணிக்கும் குழு ஒன்று மற்றும் வீடியோ படங்களை கவனித்து நடவடிக்கை எடுக்கும் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

    தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.1 கோடியே 87 லட்சத்து 99 ஆயிரத்து 500 இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் வெள்ளி குங்கும சிமிள்கள், பரிசு பொருட்கள் மற்றும் மதுபாட்டில்கள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. அதிகப்படியான பணம் பரிவர்த்தனை நடைபெற்றால் தகவல் தெரிவிக்க அனைத்து வங்கிகளுக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ரூ.10 லட்சத்து மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டால் அதுகுறித்து வருமானவரித்துறைக்கு முதலில் தகவல் அளிக்கப்படும்.

    தனி நபர் ரூ.50 ஆயிரம் வரையில் கொண்டு செல்ல எந்த தடையும் இல்லை. ரூ.50 ஆயிரத்துக்கு அதிகமாக யார் கொண்டு சென்றாலும் அதற்கு உரிய ஆவணம் இருக்க வேண்டும். இல்லை என்றால் பணம் பறிமுதல் செய்யப்படும். நட்சத்திர பேச்சாளர் ரூ.1 லட்சம் வரை வைத்துக் கொள்ளலாம்.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் உரிமம் பெற்ற துப்பாக்கிகள் 3 ஆயிரத்து 479 ஒப்படைக்கப்பட்டுள்ளது. உரிமத்தை நீடிப்பு செய்யாத 6 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 4 துப்பாக்கிகளுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை 1,312 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 321 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சென்னை மற்றும் நாகர்கோவிலில் கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது, தேர்தல் நடத்தை விதி முறைகள் மீறிய செயலா? என்று ஆய்வு செய்யப்பட்டது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தும்போது தேர்தல் ஆணையம் விதித்துள்ள 5 கட்டுப்பாடுகளை கணக்கில் கொள்ள வேண்டும். அதன் அடிப்படையில், ராகுல் கலந்து கொண்டதில் தேர்தல் நடத்தை விதிமீறல் இல்லை. முன் அனுமதி பெற்று நடத்துவதில் எந்த தவறும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.  #SatyabrataSahoo #RahulGandhi
    பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக, அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகள், தேர்தல் பார்வையாளர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா டெல்லியில் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். #ElectionCommissionMeeting #SunilArora
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி முதல் தொடங்கி 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது.

    இதையடுத்து, மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக, பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.



    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக, அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் பார்வையாளர்களுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நாளை டெல்லியில் ஆலோசனை நடத்த உள்ளார்.

    இந்த கூட்டத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  #ElectionCommissionMeeting #SunilArora
    பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான உடன்படிக்கையில் இருகட்சி தலைவர்களும் இன்று கையொப்பமிட்டனர். #LSpolls #TMConeseat #AIADMKallaiance
    சென்னை:

    அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., பா.ஜனதா, தே.மு.தி.க., புதிய தமிழகம், புதிய நீதிகட்சி ஆகியவை உள்ளன.  

    இந்த கூட்டணியில், தமிழ் மாநில காங்கிரசையும் சேர்க்க பேச்சுவார்த்தை நடந்து வந்தது. தங்களுக்கு 2 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வற்புறுத்தி வந்தார்.

    இந்த நிலையில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஜி.கே.வாசன் வீட்டுக்கு சென்றனர். அங்கு பேச்சுவார்த்தை நடந்தது.

    பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்த நிலையில் தமாகாவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான உடன்படிக்கையில் இருகட்சி தலைவர்களும் இன்று கையொப்பமிட்டனர். #LSpolls #TMConeseat #AIADMKallaiance 
    பாராளுமன்ற தேர்தலில் பதேபூர்சிக்ரி தொகுதியில் ஹேமமாலினியை போட்டியிட வைக்க பா.ஜனதா மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். #ParliamentElection #HemaMalini
     ஆக்ரா:

    பிரபல இந்தி நடிகை ஹேமமாலினி கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலின்போது பா.ஜனதா சார்பில் மதுரா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அந்த தொகுதி பா.ஜனதாவின் செல்வாக்கு மிக்க தொகுதிகளில் ஒன்றாகும்.

    ஹேமமாலினி மீண்டும் இந்த தடவையும் பா.ஜனதா சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளார். அவர் மதுரா தொகுதியிலேயே மீண்டும் போட்டியிட விரும்புகிறார்.

    கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலின்போது அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ராஷ்டீரிய லோக்தள வேட்பாளர் ஜெயந்த் சவுத்திரியை 3 லட்சத்து 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்த தடவையும் அதே போன்று அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற முடியும் என்று ஹேமமாலினி நம்புகிறார்.

    ஆனால் உத்தரபிரதேசத்தில் உள்ள பா.ஜனதா மூத்த தலைவர்கள் ஹேமமாலினியை வேறு ஒரு தொகுதியில் நிறுத்த ஆலோசனை நடத்தி வருகிறார்கள். குறிப்பாக பதேபூர்சிக்ரி தொகுதியில் ஹேமமாலினியை போட்டியிட வைக்க ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    பதேபூர்சிக்ரி தொகுதியில் பா.ஜனதா எம்.பி.யாக இருக்கும் பாபுலால் சவுத்திரி மீது அந்த தொகுதி மக்களிடம் அதிருப்தி நிலவுகிறது. அந்த தொகுதியில் உள்ள பா.ஜனதா நிர்வாகிகளிடமும் பாபுலால் சவுத்திரி மீது நல்ல அபிப்பிராயம் இல்லை.

    இந்த நிலையில் பதேபூர்சிக்ரியில் மீண்டும் பாபுலாலை நிறுத்தினால் சிக்கல் ஏற்பட்டு விடும் என்று உத்தரபிரதேச பா.ஜனதா தலைவர்கள் கருதுகிறார்கள். எனவே பதேபூர்சிக்ரி தொகுதியில் பா.ஜனதா வெற்றியை உறுதி செய்ய ஹேமமாலினியை களம் இறக்க நினைக்கிறார்கள்.

    ஆனால் ஹேமமாலினிக்கு பதேபூர் சிக்ரி தொகுதியில் போட்டியிட விருப்பம் இல்லை. அவர் மதுரா தொகுதியிலேயே போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.

    மதுரா தொகுதி மக்களிடம் அவருக்கு நல்ல ஆதரவு இருக்கிறது. எனவே அவர் அந்த தொகுதியில் எளிதாக வெற்றி பெற முடியும் என்று பா.ஜனதா மூத்த தலைவர்களிடம் தெரிவித்து இருக்கிறார். #ParliamentElection #HemaMalini
    ×