என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    டெல்லி புறநகரான நொய்டா தொகுதியில் ராஜ்நாத்சிங்கை போட்டியிட வைக்க ஏறுபாடுகள் நடந்து வருகிறது. #RajnathSingh

    புதுடெல்லி:

    பாரளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ் வாடி கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இதனால் உத்தரபிரதேசத்தில் கடும் சவாலான நிலையை பா.ஜனதா சந்தித்துள்ளது.

    கடந்த 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 71 தொகுதிகளை கைப்பற்றி பா.ஜ.க. சாதனை படைத்தது. ஆனால் இந்த தடவை அகிலேஷ்- மாயாவதியின் கூட்டணி காரணமாக பா.ஜ.க.வின் வெற்றி பாதியாக குறையும் என்று கூறப்படுகிறது.

    கருத்து கணிப்புகளிலும் பா.ஜனதாவுக்கு மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 20 முதல் 30 தொகுதிகளே கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது. இதையடுத்து முக்கிய தலைவர்களை வேறு தொகுதிகளில் போட்டியிட வைக்க பா.ஜ.க.வில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்திய உள்துறை மந்திரியுமான ராஜ்நாத் சிங் கடந்த தேர்தலில் லக்னோ தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டிருந்தார். இந்த தடவை அவரை நொய்டா தொகுதியில் போட்டியிட வைக்க ஏறுபாடுகள் நடந்து வருகிறது.

    அதுபோல மதுரா தொகுதியில் இருந்து எம்.பி.யான நடிகை ஹேமமாலினியை இந்த தடவை பதேபூர்சிக்ரி தொகுதிக்கு மாறும்படி பா.ஜ.க. மூத்த தலைவர்கள் கூறி வருகிறார்கள். அந்த தொகுதியில் எம்.பி.யாக இருந்த சவுதரி பாபுலால் மீது கடும் அதிருப்தி நிலவுவதால் அந்த தொகுதிக்கு ஹேமமாலினியை மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

    உன்னவ் தொகுதியில் இருந்து சாக்சிமகாராஜ் என்ற சாமியார் எம்.பி.யாக தேர்வாகி இருந்தார். அவர் பேசிய பல கருத்துக்கள் சர்ச்சையை உருவாக்கின. இதனால் தொகுதியில் அவர் மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.

    இதையடுத்து அந்த தொகுதியில் பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவருமான உமாபாரதியை களம் இறக்க முடிவு செய்துள்ளனர். உத்தர பிரதேசத்தில் கடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் சுமார் 40 எம்.பி.க் களை தொகுதி மாற்றம் செய்ய பா.ஜ.க. முடிவு செய்துள்ளது. #RajnathSingh

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக மனிதநேய ஜனநாயக கட்சியின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. #LSPolls #DMK #Congress
    சென்னை:

    மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் ‘இரட்டை இலை’ சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கட்சி கூட்டணி அமைத்துள்ளது. இதையடுத்து தமிமுன் அன்சாரி தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளிக்கப் போவதாக அறிவித்திருந்தார்.

    இந்த நிலையில் மனித நேய ஜனநாயக கட்சியின் 6-வது தலைமை செயற்குழு கூட்டம் சென்னை திருவல்லிக்கேணியில் நடந்தது. அவைத் தலைவர் நாசர் உமர் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி, பொருளாளர் ஹாரூன் ரஷீது மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    பாராளுமன்ற தேர்தலில் பாசிசம் ஒழிக்கப்பட்டு சமூக நீதி நிலைநாட்டப்பட காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு இந்திய மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்.

    தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.முக., முஸ்லிக் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு பாடுபட வேண்டும்.

    சமூக ஆர்வலர் முகிலனை கண்டுபிடித்து ஒப்படைக்க வேண்டும். பாலியல் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    28 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்டவர்களையும், கோவை அபுதாகீர், திண்டுக்கல் மீரான் மைதீன் போன்றவர்களையும் விடுதலை செய்ய வேண்டும்.

    மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. #LSPolls #DMK #Congress
    நிருபர்களை சந்திக்காத பிரதமர் மோடி பதவி விலகும் நேரம் வந்து விட்டது என்று சத்ருகன் சின்கா கூறியுள்ளார். #ShatrughanSinha #PMModi

    பாட்னா:

    நடிகரும், பா.ஜனதா அதிருப்தி எம்.பி.யுமான சத்ருகன் சின்கா கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி உள்ளார். அவர் பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதா தலைவர் அமித்ஷாவை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

    இந்த நிலையில் அவர் பிரதமர் மோடியின் ஆட்சி பற்றி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் மோடி ஒருமுறை கூட நிருபர்கள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்று ஒரு கேள்விக்குகூட பதில் அளிக்க வில்லை. இதனால் தனது நிறை, குறைகளை அவரால் அறிந்து கொள்ள முடியாமல் போய்விட்டது.

    இப்போது பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. இனிவரும் நாட்களில் மோடி நிருபர்களை சந்திக்க நேரிடும். அதற்காக இப்போது இருந்தே ஒத்திகை பார்த்து எப்படி நடிக்க வேண்டும் என்று உங்களை (மோடி) நீங்களே இயக்கி தயார் படுத்திக் கொள்ளுங்கள்.

     


    நான் அறிந்த வரையில் ஜனநாயக உலகில் தனது ஆட்சிக் காலத்தில் ஒருமுறை கூட கேள்வி-பதில்களை எதிர்கொள்ளாத பிரதமர் என்ற மோசமான வரலாறை நீங்கள் ஏற்படுத்தி விட்டீர்கள்.

    மோடி தலைமை பொறுப்பில் இருந்து விலகிக்கொள்ள இதுவே மிகச் சரியான சிறந்த தருணம் ஆகும். எனவே மாற்று அரசு ஏற்படுவதற்கு முன்பு புதிதாக நல்ல தலைமை பொறுப்பேற்க வேண்டியது அவசியம்.

    உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 150-க்கும் மேற்பட்ட புதிய திட்டங்களை அவசரமாக ஒரே மாதத்தில் அறிவித்தீர்கள். இதை மேலோட்டமாக காணும் போது தேர்தல் நடத்தை விதிகளுக்குட் பட்டதாகவே இருக்கும்.

    ஆனால் உண்மையில் இது மிக தாமதமாகவும், மிக குறைந்த அளவில் நடத்தப்படும் ஒரு மொத்த வியாபாரத்துக்கு இணையான செயலாகும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #ShatrughanSinha #PMModi

    சங்கராபுரம் அருகே பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.1 லட்சம் 40 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. #LSPolls

    ரிஷிவந்தியம்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் மற்றும் பரிசு பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்கும் பொருட்டு விழுப்புரம் மாவட்டத்தில் 33 பறக்கும்படை குழுவினர்கள், 33 நிலையான கண்காணிப்பு குழுவினரும் நெடுஞ்சாலைகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் நேற்று இரவு சங்கராபுரம் மூரார்பாளையம் பகுதியில் உள்ள கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படை தாசில்தார் ராஜகோபால் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராயப்பன் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அந்த வழியாக வந்த ஒரு காரை போலீசார் தடுத்து நிறுத்தி டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குபின் முரணான தகவலை தெரிவித்தார்.

    இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த காரை சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் இருந்து ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. அந்த பணத்திற்கான ஆவணங்கள் எதுவும் டிரைவரிடம் இல்லை.

    இதையடுத்து அந்த பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் கார் டிரைவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் சேலம் மாவட்டம் ஆரகனூர் அண்ணாமலைநகர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார்(வயது 35) என்பதும் குளிர்பானங்கள் மொத்தமாக எடுத்து சென்று பல்வேறு இடங்களில் உள்ள கடைகளில் விற்பனை செய்வார்.

    அவர் கடைகளில் குளிர்பானங்கள் விற்ற தொகை ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்தினை வசூலித்து செல்வது தெரியவந்தது. இருப்பினும் சதீஷ்குமார் வைத்திருந்த பணத்திற்கு ஆவணங்கள் எதுவும் இல்லாததால் பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் அந்த பணத்தை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ரெத்தின மாலாவிடம் ஒப்படைத்தனர்.  #LSPolls

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து விஜயகாந்த் பிரசாரத்துக்கு வருவார் என்றும் ஆனால் பேச மாட்டார் என்றும் சுதீஷ் தெரிவித்தார். #DMDK #Vijayakanth #LKSudhish
    சென்னை:

    தே.மு.தி.க. துணைப் பொதுச்செயலாளர் சுதீஷ் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    பா.ஜனதா தலைமையிலான கூட்டணியில் சேருவதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. தொகுதி எண்ணிக்கை ஒதுக்கீட்டில்தான் பிரச்சனை எழுந்தது.

    நாங்கள் 8 தொகுதிகள் கேட்டோம். மேல்சபையில் ஒரு இடம் ஒதுக்கி தரும்படி கோரிக்கை விடுத்தோம். ஆனால் எங்களது கோரிக்கை ஏற்கப்படவில்லை.

    என்றாலும் நாங்கள் விரும்பிய தொகுதிகளை அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியில் தந்ததால் அதை ஏற்றுக்கொண்டோம்.

    இதற்கிடையே பா.ஜனதா தலைவர்கள் எங்களுக்கு சில வாக்குறுதிகளை அளித்துள்ளனர். மத்தியில் மீண்டும் ஆட்சி அமைந்ததும் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று கூறியுள்ளனர். எனவே அந்த நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

    கூட்டணி அமைத்த வி‌ஷயத்தில் எங்களை அனைவரும் பாராட்டுகிறார்கள். கட்சியின் நலன் கருதியே நாங்கள் முடிவுகளை எடுத்துள்ளோம். கூட்டணி பேசியபோது சில வி‌ஷயங்கள் நடந்தது. என்றாலும் பா.ஜனதா கூட்டணியில் நாங்கள் இருப்போம் என்பதை உறுதிப்படுத்தினேன்.



    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசும், அவரது மகன் அன்புமணி ராமதாசும் கேப்டனை சந்தித்து பேசினார்கள். இதன் மூலம் இரு கட்சி தொண்டர்களும் தமிழகம் முழுவதும் அடிமட்ட அளவில் இணைந்து செயல்பட வாய்ப்பு உருவாகியுள்ளது.

    இந்த கூட்டணியில் முதலில் நாங்கள் பா.ஜனதா தலைவர்களுடன் பேசினோம். பிறகுதான் அ.தி.மு.க. வுடன் பேசத்தொடங்கினோம். இதனால் தான் கூட்டணியில் சில முடிவுகளை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டு விட்டது.

    தமிழக அரசியலில் இப்போதும் நாங்கள்தான் மாற்று சக்தியாக இருக்கிறோம். தற்போது நடக்கும் தேர்தல் பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தல். மக்கள் விருப்பத்திற்கேற்ப எங்கள் கூட்டணி அமைந்துள்ளது.

    அடுத்த தேர்தல் பற்றி இப்போதே உறுதிபட கூற இயலாது. கூட்டணி மாறலாம். மாறாமலும் போகலாம். கேப்டனை முதல்-அமைச்சராக்கவே தே.மு.தி.க. தொடங்கப்பட்டது. அந்த இலக்கில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

    சில பிரச்சனைகள் அடிப்படையில் நாங்கள் முன்பு மோடி அரசை விமர்சனம் செய்து இருக்கலாம். ஆனால் அதே சமயத்தில் மோடி அரசின் நல்ல கொள்கைகளை மனம் திறந்து பாராட்டியுள்ளோம்.

    தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 இடங்களிலும் வெற்றி பெறுவோம். நிச்சயமாக மத்திய அரசில் இடம் பெறுவோம். தற்போதைய அரசியல் சூழ்நிலையில் நாங்கள் மகிழ்ச்சியாகவே உள்ளோம்.

    அ.தி.மு.க-பா.ஜனதா கூட்டணியில் நாங்கள் எங்களுக்குரிய தொகுதிகளை (வடசென்னை, கள்ளக்குறிச்சி, திருச்சி, விருதுநகர்) மிகவும் கவனமாக தேர்வு செய்துள்ளோம்.

    2014-ம் ஆண்டு தேர்தலில் நாங்கள் 14 தொகுதிகளில் போட்டியிட்டோம். பா.ம.க. 8 இடங்களில் போட்டியிட்டது. எனவே இந்த தடவை 10 இடங்களிலாவது போட்டியிட வேண்டும் என்று நினைத்தோம்.

    ஆனால் பிப்ரவரி 20-ந் தேதியே பா.ம.க. மற்றும் பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. ஒப்பந்தம் செய்து விட்டது. இது எங்களுக்கு கடும் அதிருப்தியை தந்தது.2014-ம் ஆண்டு ஒரே நேரத்தில் எல்லா கட்சிகளுக்கும் ஒப்பந்தம் செய்ததைபோல இந்த தடவையும் தேர்தல் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று நாங்கள் கூறி வந்தோம். அது நடக்காமல் போய் விட்டது.

    எங்களுக்கு தொகுதிகள் ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டது. தி.மு.க. தரப்பில் இருந்து அழைத்தனர். அவர்களிடம் நாங்கள் 8 தொகுதிகள் கேட்டோம். அதில் உடன்பாடு ஏற்படவில்லை.

    இதற்கிடையே கேப்டன் பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். எனவே அவரது அறிவுரையை ஏற்று முடிவு எடுக்கப்பட்டது.

    தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட வி‌ஷயத்தில் தி.மு.க.வினர் மிக மோசமான அரசியல் விளையாட்டை நடத்தி விட்டனர். துரைமுருகன் மீது நாங்கள் மிகுந்த மரியாதை வைத்துள்ளோம். அரசியலுக்காக அந்த நட்பு மாறாது. இப்போதும் நான் அவரை அண்ணன் என்றுதான் அழைக்கிறேன்.

    தி.முக.விடம் நாங்கள் குழு அமைத்து பேசவில்லை. எங்கள் தரப்பில் இருந்து சென்றவர்கள் அவர்களது சொந்த வேலைக்காக சென்றனர். ஆனால் அரசியலில் அது வேறுமாதிரி பேசப்பட்டு விட்டது.

    விஜயகாந்த் இப்போது நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். அவர் இந்த தேர்தலில் தமிழகம் முழுவதும் பிரசாரம் பயணம் மேற்கொள்வார். ஆனால் பேசமாட்டார்.

    அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் வந்தாலே போதும் என்று கட்சி நிர்வாகிகள் கருதுகிறார்கள். எனவே அவர் தொகுதி வாரியாக வரும்போது தே.மு.தி.க. தொண்டர்கள் மகிழ்ச்சியும், எழுச்சியும் அடைவார்கள்.

    கேப்டன் விரைவில் தீவிர கட்சி பணிகளை மேற்கொள்வார். அவரது உடல்நலம் நன்கு தேறிவருகிறது. தே.மு.தி.க. வேட்பாளர்கள் பற்றி அவர்தான் முடிவு செய்வார். நான் போட்டியிடுவது பற்றியும் கேப்டன்தான் இறுதி முடிவு எடுப்பார்.

    இவ்வாறு சுதீஷ் கூறினார். #DMDK #Vijayakanth #LKSudhish
    நாகையில் தேர்தல் பறக்கும் படை நடத்திய வாகன சோதனையில் ரூ.2½ லட்சம் மதிப்பிலான கவரிங் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. #LSPolls

    நாகப்பட்டினம்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி நாகை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் நேற்று தமிழக எல்லையான நாகையை அடுத்த வாஞ்சூர் சோதனைச்சாவடி அருகே தாசில்தார் கார்த்திகேயன் தலைமையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்தனர். காரில் ரூ. 2½ லட்சம் மதிப்பிலான கவரிங் நகைகள் இருந்தது தெரியவந்தது.

    அந்த நகைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் அந்த கவரிங் நகைகளை பறிமுதல் செய்து, நாகை சப்-கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மேலும், உரிய ஆவணங்கள் இல்லாமல் கவரிங் நகைகளை கொண்டு வந்த சிதம்பரத்தை சேர்ந்த கணேசன், சரவணன் ஆகிய 2 பேரிடம் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் ராஜாமடம் சோதனை சாவடியில் மண்டல துணை தாசில்தார் கண்ணகி தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது வேதாரண்யத்தில் இருந்து வந்த ஒரு காரை வழிமறித்து அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது காரில் 2 துப்பாக்கிகள் இருந்தன. அதில் ஒன்று இத்தாலி நாட்டில் தயாரிக்கப்பட்ட இரட்டைக்குழல் துப்பாக்கி ஆகும். மற்றொன்று இங்கிலாந்து நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒற்றைக்குழல் துப்பாக்கி ஆகும்.

    இந்த 2 துப்பாக்கிகளுக்கு உரிமம் புதுப்பிக்கப்படவில்லை என்பதும், இவை நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கருப்பம்புலம் கிராமத்தை சேர்ந்த குழந்தைவேல் என்பவருக்கு சொந்தமானது என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 2 துப்பாக்கிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து பட்டுக்கோட்டை தாசில்தார் அருள்பிரகாசம் முன்னிலையில் பட்டுக்கோட்டை கருவூலத்தில் ஒப்படைத்தனர். #LSPolls

    வட இந்தியா, தென் இந்தியா என்று பிரித்து பேசும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியால் எப்படி தேசிய தலைவராக முடியும்? என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். #TamilisaiSoundararajan #PMModi #RahulGandhi
    சென்னை:

    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேற்று முன்தினம் தமிழகம் வந்தபோது, பிரதமர் நரேந்திரமோடியை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார்.

    இந்த நிலையில், ராகுல்காந்திக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் 10 கேள்விகளை கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அதன் விவரம் வருமாறு:-

    * தமிழக மக்கள் மீது அன்பு உண்டு என்று தமிழர்களுக்காக உருகும் நீங்கள் காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு எதிராக காவிரி பிரச்சினை மற்றும் மேகதாது அணை போன்ற தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசாங்கத்தில் காங்கிரஸ் முதல்-மந்திரியாக இருந்த சித்தராமையாவிடம் காவிரி நீரின் தமிழகத்தின் உரிமை பற்றி என்றைக்காவது பேசியிருக்கிறீர்களா?.

    * பிரதமர் வேட்பாளர் ஒருவர் பெயரை அறிவித்து தேர்தலை சந்திப்பது அராஜகம் என்று கூறும் ராகுல்காந்தி, சுதந்திர இந்தியாவில் 60 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே குடும்பத்தின் கையில் ஒரு தேசிய கட்சி இருப்பதும் நாட்டின் பிரதமராக இருப்பதும் ஒரு பெரிய அராஜகம் இல்லையா?

    * ஒரே கட்சிக்கு பெரும்பான்மை கிடைப்பது சர்வாதிகார ஆட்சிக்கு இட்டுச்செல்லும் எனக்கூறும் ராகுல்காந்தி, கடந்த காலத்தில் உங்கள் கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்ற காலத்தில் கூட்டாக ஊழல் நடைபெற்றது உங்களுக்கு தெரியாதா?

    * முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை வேலூர் சிறையில் உங்கள் சகோதரி பிரியங்கா எதற்காக ரகசியமாக சந்தித்தார் என்பதை விளக்க முடியுமா?.

    * இலங்கைத்தமிழர் படுகொலைக்கு பொங்கியவர்கள், கண்ணீர் விட்டவர்கள், கள்ளத்தோணியில் சென்றவர்கள், கோடம்பாக்கத்தில் சென்று சினிமா பாணியில் ராணுவ உடை வாங்கி பாவனை காட்டியவர்கள், எல்லாம் பொன்னாடை போர்த்தி தேர்தலுக்காக நாடகமாடுபவர்களுடன் சேர்ந்து நீங்களும் தமிழர்களை காப்பாற்றுங்கள் என்று கேட்பது நியாயமா? அப்பாவி இலங்கைத் தமிழர் படுகொலைக்கு காங்கிரஸ் ஆட்சியின் பங்கு எதுவுமில்லை என்று பதில் கூற உங்களுக்கு தைரியமிருக்கிறதா?.

    * வட இந்தியா, தென் இந்தியா என்று இந்தியாவை 2 பிரிவுகளாக பிரித்து பேசும் ராகுல், நீங்கள் எப்படி தேசிய தலைவர் ஆவீர்கள்?.



    * மதச்சார்பின்மையை ஆதரிக்கிறோம் எனக்கூறும் ராகுல், உங்கள் தமிழக கூட்டணி கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு மதம் சார்ந்த கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பது ஏன் என்று கேட்டீர்களா?

    * ஊழல் இல்லாத நல்லாட்சி புரிந்த காமராஜர் பெயரைச்சொல்லி மோடி ஓட்டுக் கேட்கிறார் என்று கூறுகிறீர்களே, அதே காமராஜரை ஒதுக்கி வைத்தது உங்கள் காங்கிரஸ் கட்சி தானே?

    * பிரதமர் மோடியின் ‘மேக்கின் இந்தியா’ திட்டத்தை போன்றே ‘மேட் இன் தமிழ்நாடு’ என தமிழ்நாட்டை மாற்றுவோம் எனக்கூறும் ராகுல், புதிதாக வேறு ஏதேனும் திட்டத்தை துவக்க தெரியாதா? உங்கள் சொந்த தொகுதி அமேதியில் கொண்டு வந்த தொழிற்சாலைகளை பட்டியலிட முடியுமா? இதில் உங்கள் சொந்த தொகுதியில் வளர்ச்சிக்கான திட்டங்கள் எதையும் செய்யாமலே தமிழ்நாட்டை ‘மேட் இன் தமிழ்நாடு’ என மாற்றுவோம் எனக்கூறுவது நியாயமா?

    * தமிழகத்தில் மோடியின் பினாமி ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்று கூறுகிறீர்களே, கடந்த காலத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 10 ஆண்டு ஆட்சி காலத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை ‘ரிமோட் கண்ட்ரோல்’ மூலம் இயக்கியது யார் என்று கூறமுடியுமா?

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #TamilisaiSoundararajan #PMModi #RahulGandhi
    விவசாயிகள், மீனவர்கள் மற்றும் சிறு வணிகர்களின் கோரிக்கைகளை பிரதமர் மோடி கேட்பதில்லை எனவும், பெரும் தொழில் அதிபர்களுக்கு மட்டுமே அவர் செவிசாய்ப்பார் என்றும் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். #ParliamentElection #RahulGandhi #PMModi
    திருச்சூர்:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று கேரளாவில் பிரசாரம் தொடங்கினார். இதற்காக மாநிலம் முழுவதும் ஒருநாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசினார்.

    அந்தவகையில் திருச்சூர் அருகே உள்ள திரிப்ரயார் பகுதியில் அகில இந்திய மீனவர் காங்கிரஸ் சார்பில் தேசிய மீனவர் பாராளுமன்றத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மீனவர்கள் ராகுல் காந்தியிடம் பல்வேறு கோரிக்கைகளை எடுத்துரைத்தனர்.

    இதைத்தொடர்ந்து ராகுல் காந்தி பேசும்போது கூறியதாவது:-

    மீனவர்கள் விவகாரத்தில் என்னுடைய உறுதி என்னவென்றால் வருகிற பாராளுமன்ற தேர்தலில் நாம் வெற்றிபெறும் தருணத்தில், நாட்டில் உள்ள அனைத்து மீனவர்களும் டெல்லியில் தங்களுக்கான தனி அமைச்சகத்தை பெறுவார்கள். இதற்கு தாங்கள் தகுதியானவர்கள் என்பதை தினந்தோறும் அவர்கள் நிரூபித்து வருகிறார்கள்.



    நான் மோடியை போல பொய் வாக்குறுதிகளை கொடுக்கமாட்டேன். எனது உரையை நீங்கள் கவனித்துப்பாருங்கள். நான் ஒரு விஷயத்தை கூறுகிறேன் என்றால், அது குறித்து முடிவு செய்தே பேசுவேன்.

    இன்றைய மத்திய அரசில் அனில் அம்பானி அல்லது நிரவ் மோடிக்குத்தான் ஏராளமான செல்வாக்கு இருக்கிறது. அவர்கள் என்ன விரும்புகிறார்களோ அதை 10 வினாடிக்குள் நிறைவேற்ற முடிகிறது. அதை சத்தம் போட்டும் கேட்கவேண்டாம், ரகசியமாக கேட்டாலே கிடைத்து விடுகிறது.

    ஆனால் மீனவர்கள், விவசாயிகள், சிறு வணிகர்கள் உள்ளிட்ட எளிய மனிதர்கள், தங்களை கவனிக்குமாறு அரசுக்கு முன் நின்று கத்துகிறார்கள். ஆனால் அவர்களின் கோரிக்கைகளை மோடி கேட்பதில்லை. தொழிலதிபர்களுக்கு மட்டுமே அவர் செவிசாய்ப்பார்.

    இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

    முன்னதாக காசர்கோட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களான கிரிபேஷ், சரத்லால் ஆகியோரின் வீட்டுக்கு நேரில் சென்று அவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார். மேலும் புல்வாமாவில் வீரமரணம் அடைந்த சி.ஆர்.பி.எப். வீரர் வசந்தகுமாரின் வீட்டுக்கும் அவர் சென்றார்.

    இதைப்போல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொண்டர்களால் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட இளைஞர் காங்கிரஸ் பிரமுகர் சுகைபின் குடும்பத்தினரை கண்ணூர் விமான நிலையத்தில் ராகுல் காந்தி சந்தித்தார். சுமார் ½ மணி நேரம் அவர்களுடன் பேசிக்கொண்டு இருந்த அவர், அவர்களுக்கு தேவையான உதவிகளை காங்கிரஸ் கட்சி வழங்கும் என உறுதியளித்தார்.

    ராகுல் காந்தியின் இந்த பயணத்தின் போது கட்சியின் மாநில தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா, பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.  #ParliamentElection #RahulGandhi #PMModi
    மாண்டியா தொகுதியில் ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் நிகில் குமாரசாமி போட்டியிடுவார் என்று தேவேகவுடா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். #ParliamentElection #MandyaConstituency #NikhilKumaraswamy
    பெங்களூரு:

    கர்நாடகத்தில் மொத்தம் 28 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு இருகட்டமாக அடுத்த மாதம் (ஏப்ரல்) 18, 23-ந்தேதிகளில் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலை காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து எதிர்கொள்கின்றன. இருகட்சிகள் இடையே நீண்ட நாட்களாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்தது. நீண்ட இழுபறிக்கு பிறகு நேற்று முன்தினம் இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி காங்கிரஸ் 20 தொகுதிகளிலும், ஜனதாதளம்(எஸ்) 8 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

    இருகட்சிகள் இடையேயும் தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்படுவதற்கு முன்பே, ஹாசன் மற்றும் மாண்டியா ஆகிய தொகுதிகளில் தேவேகவுடா பேரன்கள் போட்டியிடுவார்கள் என்ற தகவல் வெளியானது. அதாவது ஹாசனில் மந்திரி எச்.டி.ரேவண்ணாவின் மகன் பிரஜ்வல் ரேவண்ணாவும், மாண்டியா தொகுதியில் முதல்-மந்திரி குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமியும் போட்டியிடுவதாக கூறப்பட்டது. இதனால் அவர்களும் தங்களின் தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டினார்கள்.

    இந்த நிலையில் ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் மாண்டியாவில் நேற்று நடைபெற்றது. இதில் தேவேகவுடா கலந்துகொண்டு, மாண்டியா தொகுதியில் நிகில் குமாரசாமி தான் வேட்பாளர் என்று அறிவித்து அறிமுகம் செய்து வைத்தார். அவர் பேசியதாவது:-

    கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசித்த பிறகு மாண்டியா தொகுதியில் நிகில் குமாரசாமியை வேட்பாளராக நிறுத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி அவர் இந்த தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார். பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு பாடம் புகட்ட வேண்டும். அதற்காக காங்கிரஸ் தலைவர்கள் தேர்தல் பிரசாரத்திற்கு என்னை அழைத்துள்ளனர். நான் கண்டிப்பாக பிரசாரம் செய்வேன். நான் பிரதமராக இருந்தபோது தான், ராணுவத்தில் முஸ்லிம்களை சேர்க்க விதிக்கப்பட்டிருந்த தடையை ரத்து செய்தேன்.

    இவ்வாறு தேவேகவுடா பேசினார்.



    இதைதொடர்ந்து முதல்-மந்திரி குமாரசாமி பேசியதாவது:-

    மாண்டியா தொகுதியில் நிகில் குமாரசாமியின் வெற்றியை கட்சி நிர்வாகிகள் உறுதி செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. நான் மக்களின் நலனுக்காக பணியாற்றுகிறேன், பணம் சம்பாதிப்பதற்காக அல்ல.

    கர்நாடக மக்களாகிய நீங்கள் தான் எனது சொத்து. பணம் சம்பாதிப்பதில் எனக்கு ஆர்வம் இல்லை. அம்பரீஷ் இறந்தபோது, அவரது உடலை மாண்டியாவுக்கு எடுத்து வந்து இறுதி அஞ்சலி செலுத்த நடவடிக்கை எடுத்தேன். இதை அம்பரீசின் ரசிகர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

    ராணுவத்துறை மந்திரியிடம் பேசி, ஹெலிகாப்டரை பெற்று அம்பரீசின் உடலை இங்கு கொண்டு வந்தேன். ஆனால் என்னையும், எனது மகனையும் பற்றி அம்பரீசின் ரசிகர்கள் தவறான முறையில் கருத்து தெரிவித்தனர். இதனால் நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

    இவ்வாறு குமாரசாமி பேசினார். #ParliamentElection #MandyaConstituency #NikhilKumaraswamy

    தேர்தல் பிரசாரத்தையொட்டி பொது இடங்களில் அரசியல் கட்சிகள் பேனர்கள், கட்அவுட் வைக்க தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #HighCourtMaduraiBench #ParliamentElection
    மதுரை:

    பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் ஏப்ரல் 18-ந்தேதி நடைபெற உள்ளது. வேட்பாளர் தேர்வில் அனைத்துக் கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

    இந்த நிலையில் அரசியல் கட்சிகளுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் மதுரையைச் சேர்ந்த வக்கீல் ரமேஷ், மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    கடந்த சில வருடங்களாக தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது.

    2014 பாராளுமன்ற தேர்தலின்போது அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் வழங்கியதாக செய்திகள் வெளியாகின. அதே போல 2016-ல் நடந்த தமிழக சட்டசபை தேர்தலின் போது பணம் பட்டுவாடா செய்யப்பட்டது.

    பணம் பட்டுவாடா செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் கமி‌ஷன் தவறிவிட்டது. 2016 சட்டசபை தேர்தலின்போது சுமார் 750 கோடி வரை கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த தொகை வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

    இதே குற்றச்சாட்டை முன் வைத்து அப்போது நடக்க இருந்த தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதி தேர்தல்கள் தள்ளி வைக்கப்பட்டன. இந்த நிலை வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் தொடரலாம்.

    எனவே தேர்தல் ஆணையம் தீவிரமாக கண்காணித்து ஓட்டுக்கு பணம் பட்டுவாடா செய்யும் நடைமுறையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பினேன். இதுவரை எந்த பதிலும் இல்லை.



    எனது மனுவின் அடிப்படையில் பணம் பட்டுவாடா செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், கணக்கில் வராத பணம் பிடிபட்டால் கடும் தண்டனை விதிக்கப்படும் என்றும் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மூலம் விளம்பரப்படுத்த வேண்டும். இது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகும் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தேர்தல் பிரசாரத்தையொட்டி பொது இடங்களில் அரசியல் கட்சிகள், பிளக்ஸ் போர்டுகள் மற்றும் பேனர்கள் வைக்கவும் தடை விதிக்க வேண்டும்.

    பணப்பட்டுவாடா குற்றச்சாட்டுகளால் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட கட்சிகளிடமோ, கட்சி தலைவர்களிடமோ தேர்தல் செலவுகளை வசூலிக்க உத்தரவிட வேண்டும்.

    மேற்கண்டவாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

    தேர்தல் பிரசாரத்தின்போது நடைபெறும் பொதுக்கூட்டங்களுக்கு பஸ்கள், கார்கள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்களில் மொத்தமாக பொதுமக்களை அழைத்துச் செல்ல தடை விதிக்கப்படுகிறது.

    இதேபோல் பொது இடங்களில் கட்-அவுட், பேனர்கள் வைக்கவும் தடை விதிக்கப்படுகிறது. மேலும் ஓட்டுக்கு பணம் கொடுத்த குற்றச்சாட்டுக்கு ஆளான கட்சியின் வேட்பாளர், தலைவரிடம் வசூலிக்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் எதிர் மனுதாரர்களாக சேர்த்து உத்தரவிடப்படுகிறது.

    அவர்கள் இதுகுறித்து பதில் அளிக்க விசாரணை 21-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.

    இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர். #HighCourtMaduraiBench #ParliamentElection

    ஓசூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் மனைவி ஜோதி அ.தி.மு.க. தலைமை கழகத்தில் மனு கொடுத்துள்ளார். #LSPolls
    சென்னை:

    கடந்த 1998-ம் ஆண்டு ஓசூர் அருகே கள்ளச்சாரயத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது அரசு பஸ்சின் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

    இதுதொடர்பாக தமிழக அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டி மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டு இருந்தது.

    அவர் மீதான வழக்கை விசாரித்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

    இதனால் அவர் தனது அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ. பதவியையும் (ஓசூர் தொகுதி) ராஜினாமா செய்தார்.

    இதையடுத்து ஓசூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. பாராளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள ஓசூர் உள்பட 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது.

    இதற்கிடையே ஓசூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் மனைவி ஜோதி அ.தி.மு.க. தலைமை கழகத்தில் மனு கொடுத்துள்ளார்.

    இது குறித்து பாலகிருஷ்ணரெட்டி கூறும்போது, “எனது மனைவி 2006-ம் ஆண்டு முதல் 5 ஆண்டுகள் ஓசூர் பஞ்சாயத்தில் கவுன்சிலராக இருந்துள்ளார். பொது வாழ்வில் அவருக்கு நல்ல அனுபவம் உள்ளது.

    ஓசூர் தொகுதியில் எனது மனைவி போட்டியிடுவது பற்றி கட்சி மேலிடம் முடிவு செய்யும்” என்றார். #LSPolls
    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வும், அதன் கூட்டணி கட்சிகளும் போட்டியிடும் உத்தேசி தொகுதிகள் ஓரளவு முடிவாகி உள்ளன. #LSPolls #ADMK #ADMKAlliance
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க.,புதிய தமிழகம், த.மா.கா., புதிய நீதிக்கட்சி, என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய 8 கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகளும், பா.ம.க. வுக்கு 7 தொகுதிகளும், தே.மு.தி.க.வுக்கு 4 தொகுதிகளும், புதிய தமிழகம், த.மா.கா., புதிய நீதிக்கட்சி, என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க. 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுகிறது.

    இந்த நிலையில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் கட்சிகள் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகள் அடங்கிய பட்டியலை அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவிடம் ஒப்படைத்துள்ளன. அதன் அடிப்படையில் அ.தி.மு.க.வும், அதன் கூட்டணி கட்சிகளும் போட்டியிடும் தொகுதிகள் ஓரளவு முடிவாகி உள்ளன.

    அ.தி.மு.க.- கூட்டணி கட்சிகள் போட்டியிடும் உத்தேச பட்டியல் வருமாறு:-

    அ.தி.மு.க.

    1. தென்சென்னை

    2. திருவள்ளூர்

    3. காஞ்சிபுரம் (தனி)

    4. திருவண்ணாமலை (தனி)

    5. சேலம்

    6. நாமக்கல்

    7. ஈரோடு

    8. திருப்பூர்

    9. நீலகிரி (தனி)

    10. பொள்ளாச்சி

    11. கிருஷ்ணகிரி

    12. திண்டுக்கல்

    13. கரூர்

    14. பெரம்பலூர்

    15. சிதம்பரம் (தனி)

    16. நாகப்பட்டினம் (தனி)

    17. மயிலாடுதுறை

    18. மதுரை

    19. தேனி

    20. திருநெல்வேலி

    பா.ஜனதா

    1. ராமநாதபுரம்

    2. கன்னியாகுமரி

    3. தூத்துக்குடி

    4. கோவை

    5. சிவகங்கை

    பா.ம.க.

    1. மத்திய சென்னை

    2. ஸ்ரீபெரும்புதூர்

    3. அரக்கோணம்

    4. தர்மபுரி

    5. ஆரணி

    6. விழுப்புரம் (தனி)

    7. கடலூர்

    தே.மு.தி.க.

    1. வடசென்னை

    2. கள்ளக்குறிச்சி

    3. திருச்சி

    4. விருதுநகர்

    புதிய தமிழகம்

    1. தென்காசி

    த.மா.கா.

    1. தஞ்சாவூர்

    புதிய நீதிக்கட்சி

    1. வேலூர்

    என்.ஆர்.காங்கிரஸ்

    1. புதுச்சேரி  #LSPolls #ADMK #ADMKAlliance
    ×