search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகையில் தேர்தல் பறக்கும்படை நடவடிக்கை - ரூ.2½ லட்சம் மதிப்பிலான கவரிங் நகைகள் பறிமுதல்
    X

    நாகையில் தேர்தல் பறக்கும்படை நடவடிக்கை - ரூ.2½ லட்சம் மதிப்பிலான கவரிங் நகைகள் பறிமுதல்

    நாகையில் தேர்தல் பறக்கும் படை நடத்திய வாகன சோதனையில் ரூ.2½ லட்சம் மதிப்பிலான கவரிங் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. #LSPolls

    நாகப்பட்டினம்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி நாகை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் நேற்று தமிழக எல்லையான நாகையை அடுத்த வாஞ்சூர் சோதனைச்சாவடி அருகே தாசில்தார் கார்த்திகேயன் தலைமையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்தனர். காரில் ரூ. 2½ லட்சம் மதிப்பிலான கவரிங் நகைகள் இருந்தது தெரியவந்தது.

    அந்த நகைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் அந்த கவரிங் நகைகளை பறிமுதல் செய்து, நாகை சப்-கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மேலும், உரிய ஆவணங்கள் இல்லாமல் கவரிங் நகைகளை கொண்டு வந்த சிதம்பரத்தை சேர்ந்த கணேசன், சரவணன் ஆகிய 2 பேரிடம் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் ராஜாமடம் சோதனை சாவடியில் மண்டல துணை தாசில்தார் கண்ணகி தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது வேதாரண்யத்தில் இருந்து வந்த ஒரு காரை வழிமறித்து அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது காரில் 2 துப்பாக்கிகள் இருந்தன. அதில் ஒன்று இத்தாலி நாட்டில் தயாரிக்கப்பட்ட இரட்டைக்குழல் துப்பாக்கி ஆகும். மற்றொன்று இங்கிலாந்து நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒற்றைக்குழல் துப்பாக்கி ஆகும்.

    இந்த 2 துப்பாக்கிகளுக்கு உரிமம் புதுப்பிக்கப்படவில்லை என்பதும், இவை நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கருப்பம்புலம் கிராமத்தை சேர்ந்த குழந்தைவேல் என்பவருக்கு சொந்தமானது என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 2 துப்பாக்கிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து பட்டுக்கோட்டை தாசில்தார் அருள்பிரகாசம் முன்னிலையில் பட்டுக்கோட்டை கருவூலத்தில் ஒப்படைத்தனர். #LSPolls

    Next Story
    ×