search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொது இடங்களில் பேனர், கட்அவுட் வைக்க தடை - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
    X

    பொது இடங்களில் பேனர், கட்அவுட் வைக்க தடை - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

    தேர்தல் பிரசாரத்தையொட்டி பொது இடங்களில் அரசியல் கட்சிகள் பேனர்கள், கட்அவுட் வைக்க தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #HighCourtMaduraiBench #ParliamentElection
    மதுரை:

    பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் ஏப்ரல் 18-ந்தேதி நடைபெற உள்ளது. வேட்பாளர் தேர்வில் அனைத்துக் கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

    இந்த நிலையில் அரசியல் கட்சிகளுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் மதுரையைச் சேர்ந்த வக்கீல் ரமேஷ், மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    கடந்த சில வருடங்களாக தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது.

    2014 பாராளுமன்ற தேர்தலின்போது அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் வழங்கியதாக செய்திகள் வெளியாகின. அதே போல 2016-ல் நடந்த தமிழக சட்டசபை தேர்தலின் போது பணம் பட்டுவாடா செய்யப்பட்டது.

    பணம் பட்டுவாடா செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் கமி‌ஷன் தவறிவிட்டது. 2016 சட்டசபை தேர்தலின்போது சுமார் 750 கோடி வரை கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த தொகை வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

    இதே குற்றச்சாட்டை முன் வைத்து அப்போது நடக்க இருந்த தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதி தேர்தல்கள் தள்ளி வைக்கப்பட்டன. இந்த நிலை வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் தொடரலாம்.

    எனவே தேர்தல் ஆணையம் தீவிரமாக கண்காணித்து ஓட்டுக்கு பணம் பட்டுவாடா செய்யும் நடைமுறையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பினேன். இதுவரை எந்த பதிலும் இல்லை.



    எனது மனுவின் அடிப்படையில் பணம் பட்டுவாடா செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், கணக்கில் வராத பணம் பிடிபட்டால் கடும் தண்டனை விதிக்கப்படும் என்றும் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மூலம் விளம்பரப்படுத்த வேண்டும். இது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகும் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தேர்தல் பிரசாரத்தையொட்டி பொது இடங்களில் அரசியல் கட்சிகள், பிளக்ஸ் போர்டுகள் மற்றும் பேனர்கள் வைக்கவும் தடை விதிக்க வேண்டும்.

    பணப்பட்டுவாடா குற்றச்சாட்டுகளால் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட கட்சிகளிடமோ, கட்சி தலைவர்களிடமோ தேர்தல் செலவுகளை வசூலிக்க உத்தரவிட வேண்டும்.

    மேற்கண்டவாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

    தேர்தல் பிரசாரத்தின்போது நடைபெறும் பொதுக்கூட்டங்களுக்கு பஸ்கள், கார்கள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்களில் மொத்தமாக பொதுமக்களை அழைத்துச் செல்ல தடை விதிக்கப்படுகிறது.

    இதேபோல் பொது இடங்களில் கட்-அவுட், பேனர்கள் வைக்கவும் தடை விதிக்கப்படுகிறது. மேலும் ஓட்டுக்கு பணம் கொடுத்த குற்றச்சாட்டுக்கு ஆளான கட்சியின் வேட்பாளர், தலைவரிடம் வசூலிக்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் எதிர் மனுதாரர்களாக சேர்த்து உத்தரவிடப்படுகிறது.

    அவர்கள் இதுகுறித்து பதில் அளிக்க விசாரணை 21-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.

    இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர். #HighCourtMaduraiBench #ParliamentElection

    Next Story
    ×