search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிக்கு தமிமுன் அன்சாரி ஆதரவு
    X

    தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிக்கு தமிமுன் அன்சாரி ஆதரவு

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக மனிதநேய ஜனநாயக கட்சியின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. #LSPolls #DMK #Congress
    சென்னை:

    மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் ‘இரட்டை இலை’ சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கட்சி கூட்டணி அமைத்துள்ளது. இதையடுத்து தமிமுன் அன்சாரி தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளிக்கப் போவதாக அறிவித்திருந்தார்.

    இந்த நிலையில் மனித நேய ஜனநாயக கட்சியின் 6-வது தலைமை செயற்குழு கூட்டம் சென்னை திருவல்லிக்கேணியில் நடந்தது. அவைத் தலைவர் நாசர் உமர் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி, பொருளாளர் ஹாரூன் ரஷீது மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    பாராளுமன்ற தேர்தலில் பாசிசம் ஒழிக்கப்பட்டு சமூக நீதி நிலைநாட்டப்பட காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு இந்திய மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்.

    தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.முக., முஸ்லிக் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு பாடுபட வேண்டும்.

    சமூக ஆர்வலர் முகிலனை கண்டுபிடித்து ஒப்படைக்க வேண்டும். பாலியல் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    28 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்டவர்களையும், கோவை அபுதாகீர், திண்டுக்கல் மீரான் மைதீன் போன்றவர்களையும் விடுதலை செய்ய வேண்டும்.

    மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. #LSPolls #DMK #Congress
    Next Story
    ×