search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாண்டியா தொகுதியில் நிகில் குமாரசாமி போட்டி - தேவேகவுடா அதிகாரப்பூர்வ அறிவிப்பு
    X

    மாண்டியா தொகுதியில் நிகில் குமாரசாமி போட்டி - தேவேகவுடா அதிகாரப்பூர்வ அறிவிப்பு

    மாண்டியா தொகுதியில் ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் நிகில் குமாரசாமி போட்டியிடுவார் என்று தேவேகவுடா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். #ParliamentElection #MandyaConstituency #NikhilKumaraswamy
    பெங்களூரு:

    கர்நாடகத்தில் மொத்தம் 28 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு இருகட்டமாக அடுத்த மாதம் (ஏப்ரல்) 18, 23-ந்தேதிகளில் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலை காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து எதிர்கொள்கின்றன. இருகட்சிகள் இடையே நீண்ட நாட்களாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்தது. நீண்ட இழுபறிக்கு பிறகு நேற்று முன்தினம் இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி காங்கிரஸ் 20 தொகுதிகளிலும், ஜனதாதளம்(எஸ்) 8 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

    இருகட்சிகள் இடையேயும் தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்படுவதற்கு முன்பே, ஹாசன் மற்றும் மாண்டியா ஆகிய தொகுதிகளில் தேவேகவுடா பேரன்கள் போட்டியிடுவார்கள் என்ற தகவல் வெளியானது. அதாவது ஹாசனில் மந்திரி எச்.டி.ரேவண்ணாவின் மகன் பிரஜ்வல் ரேவண்ணாவும், மாண்டியா தொகுதியில் முதல்-மந்திரி குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமியும் போட்டியிடுவதாக கூறப்பட்டது. இதனால் அவர்களும் தங்களின் தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டினார்கள்.

    இந்த நிலையில் ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் மாண்டியாவில் நேற்று நடைபெற்றது. இதில் தேவேகவுடா கலந்துகொண்டு, மாண்டியா தொகுதியில் நிகில் குமாரசாமி தான் வேட்பாளர் என்று அறிவித்து அறிமுகம் செய்து வைத்தார். அவர் பேசியதாவது:-

    கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசித்த பிறகு மாண்டியா தொகுதியில் நிகில் குமாரசாமியை வேட்பாளராக நிறுத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி அவர் இந்த தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார். பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு பாடம் புகட்ட வேண்டும். அதற்காக காங்கிரஸ் தலைவர்கள் தேர்தல் பிரசாரத்திற்கு என்னை அழைத்துள்ளனர். நான் கண்டிப்பாக பிரசாரம் செய்வேன். நான் பிரதமராக இருந்தபோது தான், ராணுவத்தில் முஸ்லிம்களை சேர்க்க விதிக்கப்பட்டிருந்த தடையை ரத்து செய்தேன்.

    இவ்வாறு தேவேகவுடா பேசினார்.



    இதைதொடர்ந்து முதல்-மந்திரி குமாரசாமி பேசியதாவது:-

    மாண்டியா தொகுதியில் நிகில் குமாரசாமியின் வெற்றியை கட்சி நிர்வாகிகள் உறுதி செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. நான் மக்களின் நலனுக்காக பணியாற்றுகிறேன், பணம் சம்பாதிப்பதற்காக அல்ல.

    கர்நாடக மக்களாகிய நீங்கள் தான் எனது சொத்து. பணம் சம்பாதிப்பதில் எனக்கு ஆர்வம் இல்லை. அம்பரீஷ் இறந்தபோது, அவரது உடலை மாண்டியாவுக்கு எடுத்து வந்து இறுதி அஞ்சலி செலுத்த நடவடிக்கை எடுத்தேன். இதை அம்பரீசின் ரசிகர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

    ராணுவத்துறை மந்திரியிடம் பேசி, ஹெலிகாப்டரை பெற்று அம்பரீசின் உடலை இங்கு கொண்டு வந்தேன். ஆனால் என்னையும், எனது மகனையும் பற்றி அம்பரீசின் ரசிகர்கள் தவறான முறையில் கருத்து தெரிவித்தனர். இதனால் நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

    இவ்வாறு குமாரசாமி பேசினார். #ParliamentElection #MandyaConstituency #NikhilKumaraswamy

    Next Story
    ×