என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    கோபி அருகே பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் சம்பளம் கொடுக்க கொண்டு சென்ற ரூ.1 லட்சத்து 6 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. #LokSabhaElections2019

    கோபி:

    கோபி அருகே உள்ள காசிபாளையம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் உமாபதி தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. அந்த காரை நிறுத்தி விசாரித்து சோதனை செய்தனர். இதில் சேதுராமன் என்பவர் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 450 கொண்டு சென்றது தெரிய வந்தது. ஆனால் அந்த பணத்துக்கு உரிய ஆவணம் இல்லை என தெரிகிறது.

    இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து கோபி கோட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.

    கோபி வெள்ளாள பாளையம் பகுதியில் இருந்து சேதுராமன் பவானிசாகர் பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு கூலி கொடுப்பதற்காக கொண்டு சென்றது விசாரணை தெரிய வந்தது. ஆனால் அந்த பணத்துக்கான ஆவணம் இல்லாததால் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர். #LokSabhaElections2019

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பயணம் செய்த காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். #Loksabhaelections2019
    பண்ருட்டி:

    பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் வருகிற 18-ந் தேதி நடைபெற உள்ளது.

    இதையொட்டி வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் மற்றும் பரிசு பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்கும் பொருட்டு தமிழகம் முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலியூர் பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    கடலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பண்ருட்டியில் நடந்த பிரசார கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பால கிருஷ்ணன் கட்சி நிர்வாகிகளுடன் காரில் கடாம்புலியூர் வழியாக பண்ருட்டிக்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படை அதிகாரிகள் பால கிருஷ்ணனின் காரை தடுத்து நிறுத்தினர்.

    பின்னர் அவரது காரில் சோதனை நடத்தினர். அவருடன் வந்த கட்சி நிர்வாகிகளின் கார்களையும் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அந்த காரில் எந்தவித பொருளும் கிடைக்கவில்லை. அதன் பிறகு பாலகிருஷ்ணன் மற்றும் அவரது கட்சி நிர்வாகிகள் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்த வாகன சோதனையால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    அதன் பின்னர் பண்ருட்டியில் நடந்த தி.மு.க தேர்தல் பிரசார கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பால கிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் பணம் எடுத்து செல்லும் வண்டிக்கு பாதுகாப்பு கொடுக்கின்றனர். தேவையில்லாமல் பொது மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் வாகன சோதனை என்ற பெயரில் தொல்லை கொடுக்கின்றனர் என்று குறிப்பிட்டார். #Loksabhaelections2019
    மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்று கூறியுள்ளார். இந்தூர் தொகுதிக்கு வேறு வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். #LokSabhaElections2019 #SumitraMahajan
    புதுடெல்லி:

    மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன்(வயது 75), மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் தொகுதியில் இருந்து 8 முறை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். வரும் பாராளுமன்றத் தேர்தலிலும் அவர் இந்தூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுவார் என எதிர்பார்ப்பு இருந்தது.



    ஆனால் அவருக்கு 75 வயது ஆவதால் அவருக்கு இந்த முறை தொகுதி ஒதுக்குவது சந்தேகம் என்று பரவலாக பேசப்பட்டது. அதேசமயம் இந்தூர் தொகுதிக்கு வேட்பாளர் அறிவிப்பும் தாமதம் ஆனது.

    இந்நிலையில், இதுபற்றி இன்று கருத்து தெரிவித்த சுமித்ரா மகாஜன், வரும் தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன் என்று கூறினார்.

    “வேட்பாளர் அறிவிப்பு தாமதம் ஆவது தொடர்பாக பல்வேறு யூகமான தகவல்கள் வந்ததால், இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்தேன். வேட்பாளர் தேர்வை கட்சித் தலைமையின் முடிவுக்கே விட்டுவிட்டேன். நான் போட்டியிட மாட்டேன். ஆனாலும் கட்சிக்காக தொடர்ந்து பணியாற்றுவதுடன், பிரசாரத்திலும் ஈடுபடுவேன்’ என்றும் சுமித்ரா மகாஜன் தெரிவித்தார். #LokSabhaElections2019 #SumitraMahajan
    குறை சொல்வதில் புகழ் பெற்ற மு.க.ஸ்டாலினை ஒட்டு மொத்த தமிழக மக்களும் புறக்கணிக்கின்றனர் என்று பிரேமலதா பேசியுள்ளார். #premalatha #mkstalin

    புதுக்கோட்டை:

    திருச்சி பாராளுமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா, புதுக்கோட்டை மற்றும் கந்தர்வக்கோட்டை பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலின் எப்போதும் குறைசொல்வதையே வழக்கமாக கொண்டுள்ளார். அதனால்தான் அவரை ஒட்டுமொத்த தமிழக மக்களும் புறக்கணிக்கின்றனர். அவரை குறை சொல்வதில் புகழ்பெற்ற ஸ்டாலின் என்று அழைப்போம். பிரதமர் வேட்பாளர் மோடிதான் என்று சொல்லி வாக்கு சேகரிக்கிறோம். ஆனால் அந்த கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்று அவர்களால் உறுதியாக கூற முடியுமா?

    சாதிக்பாட்சா கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர் யார்? என்று மு.க.ஸ்டாலின் சொல்லிவிட்டு கொடநாடு பிரச்சினை குறித்து பேசட்டும். 2011ல் ஜெயலலிதாவும், விஜயகாந்தும் சேர்ந்து அமைத்த அதே கூட்டணி மீண்டும் அமைந்துள்ளது. 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது உறுதி. அ.தி.மு.க. கூட்டணியை எதிர்த்து போட்டியிடுவோரை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். 

    இவ்வாறு அவர் கூறினார். #premalatha #mkstalin

    காங்கிரஸ் தலைவர்களின் மோசடி, ஊழல், செக்ஸ் பிரச்சனைகளை வெளிப்படுத்தவே போட்டியிடுவதாக சரிதா நாயர் கூறியுள்ளார். #Loksabhaelections2019 #SarithaNair
    வயநாடு:

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி மற்றும் கேரள மாநிலம் வயநாடு தொகுதிகளில் போட்டியிடுகிறார். வயநாடு தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை நேற்று தாக்கல் செய்தார். இவரை எதிர்த்து சுயேச்சை வேட்பாளராக நடிகை சரிதா நாயர் களம் இறங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதுகுறித்து சரிதா நாயர் அளித்துள்ள பேட்டியில் ‘நான் வயநாடு தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட இருக்கிறேன். வெற்றிபெற வேண்டும் என்பதற்காக ராகுலை எதிர்த்துப் போட்டியிடவில்லை. அவரை எதிர்த்து போட்டியிடுவதால் பொதுமக்களிடம் பிரபலம் ஆக வாய்ப்பிருக்கிறது.

    அதன்மூலம் கேரள காங்கிரஸ் தலைவர்களின் மோசடி, ஊழல், செக்ஸ் பிரச்சனைகளை அம்பலப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது’ என்று தெரிவித்திருக்கிறார்.

    ராகுல் காந்தியை எதிர்த்து பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாரத தர்ம ஜன சேனா அமைப்பின் தலைவர் துஷார் வெள்ளப்பள்ளியும், இடதுசாரி ஜனநாயக முன்னணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி.பி.சுனீரும் போட்டியிடுகின்றனர். இவர்களுடன் சரிதா நாயரும் இணைந்திருப்பதால், வயநாடு தொகுதி இந்திய அளவில் கவனிக்கப்பட வேண்டிய தொகுதியாக மாறியிருக்கிறது.

    ஏற்கெனவே செக்ஸ் புகாரில் சிக்கிய ஹிபி ஈடனை, எர்ணாகுளம் தொகுதி வேட்பாளராக காங்கிரஸ் அறிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சரிதா நாயர், அவரை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார். ராகுல் காந்தி வயநாட்டில் போட்டியிடுவதால் தனது முடிவை மாற்றிக்கொண்டுள்ளார். #Loksabhaelections2019 #SarithaNair
    பாராளுமன்ற தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் தமிழகத்தில் மீண்டும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி ஏப்ரல் 9,13-ல் பிரசாரம் செய்கிறார். #Loksabhaelections2019 #PMModi

    சென்னை:

    தமிழகம் புதுச்சேரியில் வருகிற 18-ந்தேதி ஒரே கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்த தேர்தலுடன் தமிழகம், புதுச்சேரியில் காலியாக உள்ள 19 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, டி.டி.வி.தினகரன் கட்சி, கமல்ஹாசன் கட்சி ஆகியோருக்கு இடையே 4 முனை போட்டி நிலவுகிறது. 40 தொகுதிகளிலும் மிக தீவிரமான தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது.

    தேர்தல் பிரசாரம் ஓய்வதற்கு இன்னும் 11 நாட்களே உள்ளன. இதனால் தமிழ்நாட்டுக்கு தேசிய கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் பிரசாரத்துக்கு வர உள்ளனர்.

    அ.தி.மு.க.-.பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்து வருகிறார். பா.ஜனதா தலைவர் அமித்ஷா கடந்த வாரம் தூத்துக்குடி மற்றும் சிவகங்கை தொகுதிகளில் பிரசாரம் செய்தார்.

    ஏற்கனவே பிரதமர் மோடி தமிழகத்தில் முதல் கட்ட தேர்தல் பிரசாரத்தை நடத்தி முடித்து விட்டார். கன்னியாகுமரியில் பா.ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அவர் ஆதரவு திரட்டினார்.

    2-ம் கட்டமாக மீண்டும் தேர்தல் பிரசாரத்துக்காக மோடி தமிழகம் வருகிறார். வருகிற 9 மற்றும் 13-ந்தேதிகளில் 2 நாட்கள் அவர் தமிழகத்தில் பிரசாரம் செய்கிறார்.

     


    9-ந்தேதி (செவ்வாய்) மாலை தனி விமானத்தில் மைசூரில் இருந்து கோவை வருகிறார். கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    பின்னர் அங்கிருந்து காரில் கோவை கொடீசியா மைதானத்துக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் பிரமாண்ட தேர்தல் பிரசார கூட்டத்தில் கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், நீலகிரி தொகுதி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி பேசுகிறார்.

    இரவு 8.45 மணிக்கு கோவையில் இருந்து தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

    பிரதமர் மோடி வருகையையொட்டி கோவை கொடீசியா மைதானத்தில் போலீஸ் கமி‌ஷனர் சுமித் சரண் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று ஆய்வு நடத்தினார்.

    பின்னர் துணை கமி‌ஷனர் பாலாஜி சரவணன், இணை கமி‌ஷனர் சோமசுந்தரம் ஆகியோருடன் மோடிக்கு பாதுகாப்பு வழங்குவது பற்றி ஆலோசனை நடத்தினரர்.

    13-ந்தேதி (சனிக்கிழமை) பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருகிறார். அன்று அவர் ஒரே நாளில் 2 இடங்களில் பிரசாரம் செய்கிறார். அன்று நண்பகலில் தனி விமானத்தில் வரும் மோடி உச்சிப்புளி ராணுவ தளத்திற்கு வருகிறார்.

    பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் தேனி புறப்பட்டு செல்கிறார். அங்கு அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்துக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    அங்கு மதுரை, திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்களுக்கும் ஆதரவு திரட்டுகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் ராமநாதபுரம் செல்கிறார். அங்கு பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து பேசுகிறார். அங்கு தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி தொகுதி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    பிரதமர் மோடியின் பிரசார கூட்டத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் பங்கேற்கிறார்கள்.

    தமிழக தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு கேரளா புறப்பட்டு செல்கிறார். தலைவர்களின் வருகையால் தமிழக தேர்தல் களம் பரபரப்பாகி உள்ளது. #Loksabhaelections2019 #PMModi

    6 சட்டமன்றத்தொகுதிகளில் இருக்கும் குடிசை வாழ் மக்களுக்கு நவீன வசதிகள் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டித்தரப்படும் என்று பிரசாரத்தில் தமிழச்சி வாக்குறுதி அளித்துள்ளார். #Loksabhaelections2019
    சென்னை:

    தென்சென்னை பாராளுமன்றத்தொகுதி தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மயிலாப்பூர் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்து ஆழ்வார்பேட்டை, டி.டி.கே. சாலை, போட் கிளப் ரோடு, நந்தனம் மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வாக்குசேகரித்தார்.

    எஸ்.எம்.நகர் மக்களிடையே பேசும்போது, “உங்களுடைய உற்சாகமான வரவேற்பு, மிகப்பெரிய நம்பிக்கையோடு என்னை பயணப்பட வைக்கும். மயிலாப்பூர் ஓட்டு எண்ணும் போது, உதயசூரியன் சின்னத்துக்கு தான் மிக அதிக அளவில் ஓட்டு விழுந்து இருக்கும் என்று நம்புகிறேன். மயிலாப்பூரில் இருக்கும் குடிசை மாற்று வாரிய வீடுகள் மிக மோசமானதாக இருக்கிறது என்று மக்கள் தெரிவித்தார்கள்.

    மயிலாப்பூர் தொகுதியில் மட்டுமல்ல, தென் சென்னையில் இருக்கும் 6 சட்டமன்றத்தொகுதியிலும் இருக்கும் குடிசை வாழ் மக்களுக்கு நவீன வசதிகள் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டித்தரப்படும். நான் பேராசிரியையாக பணியாற்றியவள், பொய்யான வாக்குறுதிகளை தரமாட்டேன், நம்பிக்கையோடு ஓட்டு போடுங்கள்” என்றார். தி.மு.க. பகுதி செயலாளர் வேலு உள்பட பலர் ஓட்டு கேட்டனர். #Loksabhaelections2019
    காஞ்சிபுரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம் குமரவேல் மற்றும் திருப்போரூர் சட்டமன்ற வேட்பாளர் எஸ்.ஆறுமுகம் ஆகியோருக்கு ஆதரவாக அன்புமணிராமதாஸ் திருப்போரூரில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். #Loksabhaelections2019

    திருப்போரூர், ஏப். 5-

    காஞ்சிபுரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம் குமரவேல், மற்றும் திருப்போரூர் சட்டமன்ற வேட்பாளர் எஸ்.ஆறுமுகம் ஆகியோருக்கு ஆதரவாக பாட்டாளி மக்கள் கட்சி இளைஞரணி தலைவர் டாக்டர். அன்புமணிராமதாஸ் திருப்போரூரில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். இப்பகுதியில் பல நல்ல திட்டங்களை நிறைவேற்ற இருவரையும் வெற்றி பெற செய்யவும், போக்குவரத்திற்காக பங்கிங்காம் கால்வாய் ஆழப்படுத்தி நீர்வழிச்சாலை நிறைவேற்றப்டும். என கூறினார். அதிமுக இலக்கிய அணி செயலளர் வளாமதி, முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம், மாவட்ட செயலாளர் கள் ராஜேந்திரன், வாலாஜா பாத்கணேசன், முன்னால் எம்.எல்.ஏ மனோகரன், பாட்டாளிமக்கள் கட்சி திருக்கச்சூர் ஆறுமுகம், பொன்.கங்காதரன், ராதாகிருஷ்ணன், வாசு, ஏகாம்பரம், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் வேலாயுதம், ஆனூர் பக்தவச்சலம், ஒன்றியசெயலாளர் குமரவேல், மாவட்ட,, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், மற்றும் பா.ஜ.க, தே.மு.தி.க., த.மா.கா., புரட்சிபாரதம், உள்ளிட்ட கூட்டணி கட்சிநிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    பணத்தை வாங்கிக்கொண்டு வெளிநாட்டுக்கு ஓடிவிடு என்று மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்த தஞ்சாவூர் வேட்பாளருக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடப்பட்டுள்ளது. #LoksabhaElections2019 #MakkalNeedhiMaiam
    சென்னை:

    தஞ்சாவூர் பாராளுமன்றத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சம்பத் ராமதாஸ் போட்டியிடுகிறார். இவர் முத்துப்பேட்டை பகுதியை பூர்வீகமாக கொண்டவர். சென்னையில் வசிக்கிறார்.

    சம்பத் ராமதாசை நேற்று முன் தினம் இரவு 12.30 மணிக்கு செல்போனில் தொடர்புகொண்ட மர்ம நபர், ‘சென்னையைச் சேர்ந்த நீ இங்கு வந்து ஏன் தேர்தலில் போட்டியிடுகிறாய்? இது உனக்கு வேண்டாத வேலை. இது வரைக்கும் எவ்வளவு செலவு செய்தாயோ அதோடு சேர்த்து பணம் தருகிறோம். வாங்கிக்கொண்டு வெளிநாட்டுக்கு ஓடிவிடு என்று மிரட்டியுள்ளனர்.

    அதற்கு வேட்பாளர் நான் பணம் காசு எல்லாத்தையும் பார்த்தவன். அமெரிக்காவில் இருந்துவிட்டுதான் மக்களுக்கு சேவை செய்வதற்காக வந்திருக்கிறேன். உங்கள் மிரட்டல்களுக்கு பணிய மாட்டேன்’’ என்று கூறியிருக்கிறார்.

    அதற்கு அந்த நபர், பிழைக்கத் தெரியாத ஆளாக இருக்கிறாய். தஞ்சாவூர் எங்கள் கோட்டை தெரியுமா? இங்கு நீ எவ்வளவு வாக்குகள் வாங்குவாய்?. கொடுப்பதை வாங்கிக்கொண்டு போ’ என்று சொல்ல, ‘எதுவாக இருந்தாலும் தேர்தலில் மக்கள் முடிவு செய்வார்கள்’ என சொல்லி சம்பத் ராமதாஸ் போனை வைத்துவிட்டார்.

    வல்லம் பகுதியில் சம்பத் ராமதாஸ் தங்கியிருந்த இடத்தை காலி செய்து விட்டு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஓட்டல் ஒன்றிற்கு வந்து விட்டார்.

    இந்தத் தகவலை கமல்ஹாசனுக்கு தெரிவித்துள்ளனர். அவர் நடந்த உரையாடல்கள் அனைத்தையும் எழுதி தலைமைக்கு அனுப்பி வையுங்கள். அடுத்து என்ன செய்யலாம் எனச் சொல்கிறேன் என்று சொன்னதாகத் தெரிகிறது.

    இதுகுறித்து மாவட்ட பொறுப்பாளர் தரும.சரவணன் கூறியதாவது:-

    ‘தஞ்சாவூர் தொகுதி மக்களிடம் எங்கள் கட்சி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எங்களின் பிரசாரம் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதை பொறுத்துகொள்ள முடியாதவர்கள், இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதற்குப் பயப்படுகிற ஆள் நாங்கள் இல்லை. என்றாலும், இதை உதாசீனப்படுத்தவும் முடியாது. கமல்ஹாசனிடம் நடந்த சம்பவத்தைத் தெரிவித்து, எழுதி அனுப்பியிருக்கிறோம்.

    தேர்தல் ஆணையரிடம் இதைப் பற்றி பேச இருக்கிறோம். முதலில் மாவட்ட தேர்தல் பொறுப்பாளரிடம் இது தொடர்பாகப் புகார் கொடுப்பதற்கு மனு எழுதி வைக்கச் சொன்னார். அதன்படி, நடந்தவற்றை எழுதிவைத்துள்ளோம். தலைமையிடம் இருந்து உத்தரவு வந்ததுமே இதற்கான புகார் கொடுக்கப்படும்’ என்று கூறினார்.

    வேட்பாளர் சம்பத் ராமதாஸ் கூறும்போது ‘பணம் காசு என எல்லாவற்றையும் பார்த்துவிட்டு மக்களுக்கு சேவை செய்வதற்காகவே தேர்தலில் நிற்கிறேன். இதுபோன்ற மிரட்டல்களுக்கு எல்லாம் அஞ்சுகிற ஆள் நான் இல்லை. எனக்குப் பலமாக கமல் இருக்கிறார்’’

    இவ்வாறு அவர் கூறினார். #LoksabhaElections2019 #MakkalNeedhiMaiam
    கண்ணுக்கு தெரியாத காற்றிலும் ஊழல் செய்யக்கூடியவர்கள் தி.மு.க.வினர் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். #LokSabhaElections2019 #EdappadiPalaniswami
    சிவகாசி:

    பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 18-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 13 நாட்களே உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

    அரசியல் கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சிவகாசியில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசும்போது, பட்டாசு உற்பத்தியாளர்கள் நேற்று இரவு என்னை சந்தித்தனர். அவர்களது கோரிக்கைகளை என்னிடம் தெரிவித்தனர். அவர்களிடம் பட்டாசு தொழிலில் உள்ள பிரச்சினையை தீர்க்க சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தேன். பட்டாசு தொழிலை பாதுகாக்க தமிழ்நாடு அரசு சட்டப்படியான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.

    வெம்பக்கோட்டை, சிவகாசி, சாத்தூர் ஒன்றியங்களில் 750 கிராமங்கள் உள்ளன. கூட்டு குடிநீர் திட்டம் மூலம் இந்த கிராமங்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

    இதைத்தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூரில் தென்காசி தொகுதியில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமியை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    மு.க.ஸ்டாலின் எங்களை மட்டும் குறை சொல்லி வாக்குகள் கேட்கிறார். ஆனால் நாங்கள் மக்கள் நலத்திட்டங்களை சொல்லி வாக்கு கேட்கிறோம்.

    இந்த பகுதியில் அழகர் அணை திட்டம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு நெசவாளர்கள் அதிகம் உள்ளனர். அவர்களின் பிரச்சினையை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    சாதாரண மக்களுக்கு கிடைக்கக்கூடிய 2000 ரூபாயைக்கூட மு.க.ஸ்டாலின் தடுத்து விட்டார். தேர்தல் முடிந்தவுடன் ரூ.2000 வழங்கும் திட்டம் உடனடியாக நிறைவேற்றப்படும்.



    வைகோவுடன் மு.க.ஸ்டாலின் சந்தர்ப்பவாத கூட்டணி வைத்துள்ளார். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், பட்டாசு தொழிலாளர்கள் ஆகியோரின் பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும். நீர்மேலாண்மை மேம்படுத்தப்படும்.

    மத்தியிலும், மாநிலத்திலும் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக நாங்கள் பா.ஜனதாவை ஆதரிக்கிறோம். தி.மு.க.வினர் கண்ணுக்கு தெரியாத காற்றிலும் ஊழல் செய்யக்கூடியவர்கள். விஞ்ஞான அடிப்படையிலும் மக்களை நம்பவைத்து ஊழல் செய்யக்கூடியவர்கள். தி.மு.க. ஆட்சி காலத்தில் குடும்பத்தை கட்டி காப்பார்கள். மக்களை பற்றி கவலைப்பட மாட்டார்கள். நாங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதுகாவலனாக இருப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பிரசாரத்தின்போது கே.டி.ராஜேந்திரபாலாஜி, சந்திரபிரபா எம்.எல்.ஏ., முன்னாள் மாவட்ட கவுன்சிலர் முத்தையா, ஒன்றிய செயலாளர் மயில்சாமி, நகர செயலாளர் பாலசுப்பிரமணியம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    சிவகாசியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். #LokSabhaElections2019 #EdappadiPalaniswami

    ஆந்திராவில் நடைபெறும் வருமான வரித்துறை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சந்திரபாபு நாயுடு, வெளியே போகும் பிரதமர் மோடிக்கு, அதிகாரிகள் அடிப்பணிய கூடாது என வலியுறுத்தி உள்ளார். #ITRaid #ChandrababuNaidu
    ஐதராபாத்:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் அனைத்து கட்சிகளும் பொதுக்கூட்டம், பிரசாரம், மற்றும் வேட்புமனு தாக்கல் போன்ற பல்வேறு பணிகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளது. இதேப்போல் தேர்தல் ஆணையமும் பாதுகாப்பு பணிகள் மற்றும் பணப்பட்டுவாடாவை ஒழிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.

    இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டு பணம், தங்கம் போன்றவற்றை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் உள்ள முக்கிய அரசியல் பிரமுகர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.



    இதற்கு எதிப்பு தெரிவித்து ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு விஜயவாடாவில் இன்று தர்ணா போராட்டத்தில்  ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:

    பிரதமர் மோடியின் உத்தரவின்படி வருமான வரித்துறையினர் தொடர்ந்து தெலுங்கு தேசம் கட்சியின் வேட்பாளர்கள், பிரமுகர்கள் வீடுகளில் மட்டும் சோதனை நடத்தி வருகின்றனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டால், அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். அனைத்து கட்சிகளும் இணையாக நடத்த வேண்டும். ஒரு கட்சியினை ஒடுக்கி, மற்றொரு கட்சிக்கு ஆதரவு அளிக்கக்கூடாது.

    இது போன்ற செயல்களில் ஈடுபடும் மோடியை நான் எச்சரிக்கிறேன். இவை தொடர்ந்தால் உரிய விலை கொடுக்க நேரிடும். இந்திய ஜனநாயகத்தினை பாதுகாக்கவே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். மோடி வெளியே போகவிருக்கும் பிரதமர். அவருக்கு அரசு அதிகாரிகள் அடிப்பணிய கூடாது. அப்படி செய்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

    இவ்வாறு அவர் பேசினார். #ITRaid #ChandrababuNaidu  
    பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் வெளியூர்களுக்கு பொது மக்கள் செல்வதை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. #LokSabhaElections2019 #OmniBuses
    சென்னை:

    ஆம்னி பஸ்களில் பண்டிகை மற்றும் விசே‌ஷ காலங்களில் பலமடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர் கதையாக உள்ளது. இதனை கட்டுப்படுத்தவோ, முறைப்படுத்தவோ சரியான சட்ட விதிகள் இல்லாததால் தொடர்ந்து இந்த நிலை நீடிக்கிறது.

    ஆம்னி பஸ்சில் அவரவர் இஷ்டம் போல் பஸ்களின் வசதியின் அடிப்படையில் கட்டணத்தை நிர்ணயித்து வசூலிக்கிறார்கள். இதனால் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

    தற்போது கோடை விடுமுறை காலம் தொடங்குவதோடு மட்டுமின்றி பாராளுமன்ற தேர்தலும் நடைபெற இருப்பதால் அனைத்து பள்ளிகளும் 13-ந்தேதியுடன் மூடப்படுகிறது. 14-ந் தேதி முதல் மே மாதம் முழுவதும் மாணவர்களுக்கு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் 18-ந் தேதி தேர்தல் நடைபெறுவதால் அன்று அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு துறைகள், பொது நிறுவனங்கள், தனியார் தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.


    இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள தொழிலாளர்கள், ஊழியர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று ஓட்டுப் பதிவு செய்ய பஸ், ரெயில்களில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

    இதுதவிர 17-ந் தேதி மகாவீர் ஜெயந்தி அரசு விடுமுறையாகும். 19-ந் தேதி கிறிஸ்தவர்களின் புனித வெள்ளி விடுமுறை ஆகும். அதைத் தொடர்ந்து 20 மற்றும் 21 சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் ஆகும்.

    அதனால் தொடர்ந்து 5 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக வருவதால் 16-ந் தேதி அன்று வெளியூர் பயணத்தை தொடர்வார்கள். 5 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் பொது மக்களின் தேவையை அறிந்து ஆம்னி பஸ் கட்டணத்தை உயர்த்தி விட்டனர்.

    தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் ஏ.சி. பஸ்களின் கட்டணத்தை தாறுமாறாக உயர்த்தி உள்ளனர்.

    சென்னையில் இருந்து மதுரை, கோவை செல்ல ஏ.சி. பஸ்களில் ரூ. 2 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படு கிறது. ஆம்னி பஸ்களுக்கு முன்பதிவு செய்யும் இணையதளத்தில் இக்கட்டணம் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்ற நாட்களில் ரூ. 1000 வசூலிக்கப்படுகிறது.

    இதேபோல சேலத்துக்கு ரூ. 1100 முதல் ரூ. 1500 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்களிலும் ரூ. 2000 வரை வசூலிக்கிறார்கள். சாதாரண பஸ்களில் ரூ. 1000 முதல் ரூ. 1200 வரை வசூலிக்கப்படுகிறது.

    அரசு ஏ.சி. பஸ்களில் கட்டணத்தை ஒப்பிடும் போது இது இருமடங்கு அதிகமாக உள்ளது. அரசு பஸ்களில் திருச்சிக்கு ரூ. 435 வரையும் கோவைக்கு ரூ. 550 முதல் ரூ. 1000 வரையிலும் வசூலிக்கப்படுகிறது.

    சேலத்துக்கு ரூ. 500, மதுரைக்கு ரூ. 500 முதல் ரூ. 600 வரையிலும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    தேர்தல் நேரத்தில் வெளியூர்களுக்கு பொது மக்கள் செல்வதை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதை அரசு தடுக்க வேண்டும்.

    அரசு பஸ், ரெயில்களில் இடம் இல்லாததால் ஆம்னி பஸ்களை நாடும்போது அதனை பயன்படுத்தி அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் தரப்பில் கோரிக்கை வைக்கின்றனர். #LokSabhaElections2019 #OmniBuses
    ×